Header Ads



நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


(அகில இலங்கை ஐம்இய்யதுல் உலமா கண்டி மாவட்டக் கிளை வெளியிட்டுள்ள  பிரசுரத்தின் முக்கிய விடயங்களை www.jaffnamuslim.com வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன் - எம்.ஜே.எம்.ஜெஸீம்)

அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே....!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

'நீங்கள் கவலைப்படவோ, சஞ்சலப்படவோ வேண்டாம். நீங்கள் உண்மை முஃமினாக இருந்தால், நீங்கள் தான் மிக்க மேலானவர்கள்.'  (ஆலஇம்ரான் 139)

ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதாக உபைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், 'எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் நலவை ஏவிக்கொண்டே இருங்கள், தீமையை தடுத்துக்கொண்டே இருங்கள். இல்லையெனின் அல்லாஹ் உங்கள் மீது தண்டணையை அனுப்பக்கூடும். பிறகு நீங்கள் அவனிடம் துஆ கேட்டாலும் உங்கள் துஆ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.' (நூல்: திர்மிதி)

மேலும் ஒரு அறிவிப்பில், 'யா ரஸூலல்லாஹ் எங்களில் நல்லவர்கள் இருக்கும் போதும் நாம் அழிவோமா? எனக் கேட்டதற்கு, ரஸூலல்லாஹ் (ஸல்) அவர்கள் ஆம்! பாவங்கள் மிகைத்து விட்டால்! எனக்கூறினார்கள்' (நூல்: புஹாரி, முஸ்லிம்)

எனவே முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹூத்தஆலா உடனான தொடர்பினை எப்போதும் பேண வேண்டிய கட்டாயக் கடமைப்பாடுடையவர்களாக இருக்கின்றோம். எனினும் தற்போதைய சூழ்நிலையில் அத்தொடர்பினை அவசரமாய் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டியது இன்றியமையாததொன்றாகும். அதனை விடுத்து எமக்குள்ளே, எம்மத்தியிலே பிளவுகளும் பிரட்சினைகளும் தலை தூக்கி, அல்லாஹ்வின் தொடர்புகள் விடுபட்டு, எமது பாவச்செயல்கள் அதிகமாகுமானால் எதிரிகள் நம்மை தாழ்த்துவதிலும் கேவலப்படுத்தி அழிப்பதிலும் அதீத ஈடுபாடு காட்டுவர் என்பது தவிர்க்க முடியாத விடயமாகிவிடும.

அவ்வகையில் அண்மைக்காலமாக எமது நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலைமைகள் சகலரையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது. சமூக சமய ரீதியில் முஸ்லிம்களுக்கெதிராக சில சக்திகள் தற்போது செயற்பட்டு வருவதும், பிறரையும் அதன் பால் ஈர்க்க வெகுஐன தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி ஒரு இன மோதலை ஏற்படுத்த முனைவதனையும் யாவரும் அறிவீர்கள். 

இதனால் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கி, ஒற்றுமையை இல்லாதொழித்து, அவர்களோடு ஆவேசப்பட்டுக்கொள்ளக்கூடிய  நிலைமையை உண்டு பண்ணலாம் என காழ்ப்புணர்ச்சி நோக்கிலே எதிர்ப்பார்க்கின்றனர். இதற்காக பல செயற்திட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகமானது தமது அன்றாட நடவடிக்கைகளில் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. இதற்காக அகில இலங்கை ஐமிய்யதுல் உலமா எம் சமூகத்திற்கு பின்வரும் அறிவுரைகளை முன் வைப்பதுடன் அவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் பேணி நடக்க வேண்டியதன் அவசியத்தையும் கடப்பாடுடன் வலியுறுத்துகின்றது.

* அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ள சகல முஸ்லிம்களும் தமது வணக்க வழிபாடுகளை அதிகப்படுத்தி அல்லாஹ்வின் பக்கம் தம்மை திசைத்திருப்பி அவனிடமே உதவி கோரும் தன்மையை உறுதிப்படுத்தல்.

* தினமும் தஹஐத் தொழுகையுடாக அல்லாஹ்விடம் நிலைமையை முறையிட்டு தௌபா, இஸ்திஃபார், துஆ போன்றவற்றில் ஈடுபடல்.

* நோன்பு நோற்க முடியுமானவர்கள் தமது நோன்பின் மூலமாக அல்லாஹ்வை நெருங்கவும், உதவி தேடவும் முயற்சித்தல்.

* தமது வைபவங்களின் போது ஹராமான விடயங்கள், களியாட்டங்கள், இஸ்ராப் எனும் வீண்விரயங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதன் மூலம் மாற்று மதத்தவர்கள் தம்மீது பொறாமைக் கொள்வதிலிருந்தும், ஏற்படும் விபரீதங்களில் இருந்தும் தவிர்ந்து நடத்தல்.

* மாற்றுமத சகோதரர்களுடன் இஸ்லாம் கூறும் விதத்தில் வரம்பு மீறாமல் அன்நியோன்னியமாக, கண்ணியமாக நடத்தல்.

* அவர்களின் மனதை வெல்லக்கூடிய காரியங்களில் ஈடுபடல். குறிப்பாக பஸ் பிரயாணத்தின் போதும் ஏனைய பொது இடங்களிலும் வயோதிபர்கள் நோயாளிகள் மற்றும் உரியவர்களுக்கு முண்னுரிமை வழங்கல்.

* அசம்பாவிதங்கள் ஏதும் நிகழும் சந்தர்ப்பங்களில் மிகவும் சகிப்புத்தன்மையுடனும், பொறுமையுடனும், விட்டுக்கொடுத்தும், இனமோதல்கள் ஏற்படா விதத்தில் நடந்து கொள்ளல், தம்மையும் சமூகத்தையும் பாதுகாத்தல்.

* இந்நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் சிதறி வாழும் முஸ்லிம் சமூகத்தினது நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு நாம் பெரும்பான்மையாக வாழுமிடங்களில் நாம் பெரும்பான்மை எனும் எண்ணத்திலிருந்து விலகி நடந்து கொள்ளல்.

* மாற்றுமத சகோதரர்களுடன் வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடும் போது மிகவும் அவதானமாக, இஸ்லாம் கூறும் விதத்தில் ஹலால் ஹராத்தை பேணி நடத்தல். அச்சமயத்தில் ஏதாவது கருத்து முரண்பாடு ஏற்படுமாயின் விட்டுக்கொடுத்துப் பொறுமைக்காத்தல்.

* வாலிபர்கள் அல்லாஹ்வை பயந்து சமூகத்தில் அக்கறை கொண்டவர்களாக நடப்பதுடன் இனமோதல்களுக்கு வழிவகுக்கும் செயற்பாடுகளில் இருந்தும் தவிர்ந்து கொள்ளல். முரண்படும் சந்தர்ப்பங்களில் மிகவும் நிதானமாகச் செயற்படல்.

* முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தமது செயற்பாடுகள், பேச்சுவார்த்தைகள், நடவடிக்கைகளை அல்லாஹ் விரும்பக்கூடிய விதத்தில் நற்பண்புகளை வெளிக்காட்டல்.

* பெண்கள் பிரயாணம் செய்யும் போதும், யுவதிகள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் போதும் இஸ்லாமிய வரம்பைப் பேணியும், தமது பாதுகாப்பைப் கவனத்தில் கொண்டும் மஹ்ரமான ஆண்களுடன் பிரயாணம் செய்தல்.

* வாகன ஓட்டுனர்கள் பாதை ஓரங்கள், பொதுஇடங்களில் தமது வாகனங்களை நிறுத்தும் போது அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாதவாறு  அவர்களின் நலனில் அக்கறையுடையவர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளல்.

* பல்வேறுபட்ட சில்லறைப் பிரச்சிiகைளுக்காக நமக்கு மத்தியில் பிளவுபட்ட ஒருவரை ஒருவர் குறை சொல்வதிலிருந்தும், தாக்குவதிலிருந்தும், ஒற்றுமை குன்றுவதிலிருந்தும் தம்மை பாதுகாத்து சமூகத்துக்கு மத்தியில் நல்லுறவைப் பேணல்.

* நாம் மார்க்க ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ ஒரு பிளவுபட்ட சமூகமென மாற்றுமத சகோதரர்கள் எண்னும் விதத்தில் நடக்காது, அது போன்ற மார்க்க பிரச்சிiகைளை பொலிஸ், நீதிமன்றம் போன்றவற்றிக்கு எடுத்துச் சொல்லாது தமது ஊரிலேயே தீர்த்துக்கொள்ள வழிவகுத்தல்.

* மாற்றுமத சகோதரர்களுடன் சேர்ந்து கற்கும் மாணவ, மாணவிகள் தமது அடையாளத்தைப் பேணி இஸ்லாமிய வரம்புகளுக்கு உட்பட்டும், அவர்களுக்குள் இஸ்லாமிய நல்லெண்ணம் உருவாகும் விதத்திலும் நடத்தல்.
ஜூம்ஆ தினம், ஜனாஸா அல்லது ஏனைய வைபவங்களின் போது முழுப் பாதையையும் அடைந்துகொண்டு செல்லாமல் வாகனங்கள் தங்குதடையின்றி பயணம் செய்ய வழிவிட்டு நடத்தல்.

* இலங்கை முஸ்லிம்கள் மிகுந்த நாட்டுப்பற்றுள்ளவர்கள் என்பதனை நாட்டுனர் அனைவரும் விளங்கிக்கொள்ளும் எமது செயற்பாடுகளையும் அமைத்துக் கொள்ளல்.

* சர்வதேச செயற்பாடுகள்,விளையாட்டுக்கள் போன்றவற்;றில் நாட்டுக்கு ஆதரவாகச் செயற்படல் அல்லது மௌனம் காத்தல்.

* முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் குறிப்பிட்ட ஒரு சிலரால் நடைமுறைப்படுத்தப்படும் செயல்களுக்கான எமது பிரதி நடவடிக்கைகள் மற்றும் கருத்துக்கள் எஞ்சிய அனைத்து மக்களையும் பகைத்துக்கொள்ளும், நோவினைப்படுத்தும் அல்லது எம்மைப்பற்றித் தப்பபிப்ராயம் ஏற்படும் விதமாக அமைத்துக்கொள்ளக்கூடாது.  

4 comments:

  1. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    எமது முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரம் ஆபத்தை எதிர் நோக்கி இருப்பதற்கான மிகப்பிரதானமான
    காரணமாக வட்டி கலந்த வியாபார நடவடிக்கையாக காணப்படுகின்றது .ஒரு சமூகத்தில் வட்டி கலந்த
    பொருளாதாரம் அதிகரிக்கும்போது கூடவே அதற்குரிய அழிவுக்குரிய வாயிலும் திறக்கப்படுகின்றது .
    அது ஏதாவது வன்செயல்கலாகவோ அல்லது இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதாலோ அரங்கேறுகிறது .
    இதனால் அங்குள்ள நல்லவர்களின் பொருளாதாரமும் சேர்ந்து அழிகின்றது .எனவே மதிப்பிற்குரிய
    ஜம்மியத்துல் உலமா சபை இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக ஒரு சாத்தியமான
    வட்டியற்ற பொருளாதார திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை தற்போது காணப்படுகின்றது .

    ReplyDelete
  2. Dear respected ulamaas ,in shaa ALLAH it would be much better to post this message in each an every jumma masjid all over the island.

    ReplyDelete
  3. indiavin tamilnaattil thouheed jamaath inaal "azakiya vatti illa kadan thittam arimukamaakiyullathu".ithu ponru naamum aarambithaal mikavun nanraakum.

    ReplyDelete
  4. Dear Jaffna Muslim... JazasakAllah Khairan for publishing important messages. Better to announce this valuable message thru Radio Islamic program to reach to all our brothers & sisters.

    ReplyDelete

Powered by Blogger.