Header Ads



அல்லலுறும் அபலைகளும், அமைதிகாக்கும் அரபுலகமும்..!


(டிசம்பர் மாத அழைப்பு இதழின் ஆசிரியர் கருத்து)

இஸ்ரேல்… உலகப் பந்தின் அனைத்துப் பாகங்களிலும் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் விதைத்து, ஆழ விருட்ஷமாய் வியாபித்து வரும் உலகின் முதல்தர பயங்கரவாத நாடு. 1948 வரைக்கும் உலக வரை படத்தில் இல்லாத இஸ்ரேல் என்ற தேசம், 1948 க்குப் பின்னர் உலகின் தலையாய ஜனநாயகவாதிகள் நாம் தாம் என்று மார்தட்டிப் புலகாங்கிதம் அடையும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கூட்டிணைவால் கள்ளத்தனமாய் கருத்தரித்து, தப்பான வழியில் பெற்றெடுக்கப்பட்ட ஒரு விபச்சாரக் குழந்தை என்ற பேருண்மையை வரலாற்று ஆய்வாளர்களால் மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது.

அகிலமெல்லாம் தன் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அராஜகங்களை கட்டவிழ்த்து விடுவதும், அப்பாவித்தனமான நாடுகளை ஆக்ரமிப்புச் செய்வதும் இரத்தக் காட்டேரிகளான இஸ்ரேலுக்கு வாடிக்கையான ஒன்று. இவர்களின் இத்தொடர்ந்தர்ச்சியான மூர்க்கத்தனமான தாக்குதல்களின் வெளிப்பாடுகளில் ஒன்று தான், பாலஸ்தீன மண்ணின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் மனித நேயத்தை குழிதோண்டிப் புதைக்கும் விதமான போர் முரசு.

முஸ்லிம்களை அவர்களின் புர்வீக புமியை விட்டும் புண்டோடு ஒழித்துக்கட்டி, முஸ்லிம்களுக்கு உரித்தான பாலஸ்தீன மண்ணில் பலவந்தமாய் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி, எஞ்சியுள்ள காஸா நிலப்பரப்பையும் கபளீகரம் செய்து, முழுமையான இனச்சுத்திகரிப்பொன்றை அரங்கேற்றுவதோடு, மத்திய கிழக்கின் விரிந்த நிலப்பரப்பில் யுதர்களின் கனவு இராச்சியமான ‘அகன்ற இஸ்ரேலை’ நிறுவுவதற்கான முஸ்தீபே இப்போர் முரசுக்குப் பின் புலமாய் அமைந்துள்ளமை வெள்ளிடை மலை. கடந்த ஒரு வாரமாய் பாலஸ்தீன மண்ணின் காஸா நிலப்பரப்பில் இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் மாத்திரம் 36 மஸ்ஜிதுகள், 25 பாடசாலைகள், ஒரு வைத்தியசாலை, 2 விளையாட்டு அரங்குகள், 2 பாலங்கள், 100 வீடுகள் உட்பட கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்தையும் தாண்டி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 160 க்கு மேற்பட்ட அப்பாவிகளது உயிர்கள் அரக்கத்தனமாய் காவுகொள்ளப்பட்டுள்ளதோடு, 1200 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கின்றனர். இவை யாவும் உத்தியோக புர்வ அறிக்கைகள் மாத்திரமே! உத்தியோகபுர்வமற்ற அறிக்கைகளின் பிரகாரம் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்களும், சொத்துக்களுக்கான சேதங்களும் இதனைவிட பன்மடங்கு அதிகமாகும்.

அதேவேளை, காஸாவில் இயங்கும் உள்நாட்டு, வெளிநாட்டு தொலைகாட்சிகள் பல இஸ்ரேலிய விமான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. அல் குத்ஸ் தொலைக்காட்சி, ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி, அல் அரபியா தொலைக்காட்சி, ஹமாஸின் அல் அக்ஸா தொலைக்காட்சி, மற்றும் ரஷ்யா டுடே தொலைக்காட்சி, ப்ரெஸ் டீ .வி ஆகியனவும் தாக்கப்பட்டுள்ளன. பல ஊடகவியலாளர்கள் காயப்பட்டுள்ளனர். இவ்வுடகங்கள் தகர்க்கப்பட்டமைக்கான பின்னணி, காஸாவுக்கும் வெளியுலகுக்கும் உள்ள அனைத்து தொடர்பாடல் மூலங்களையும் தடைசெய்து, கள உண்மைகள் உலகின் செவிகளுக்கு எட்டிவிடக் கூடாது என்பது தான் என்று  இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ பேச்சாளர் தெரிவித்திருந்தமை இவர்களின் அயோக்கியத்தனத்திற்கு போதுமான சான்றாகும். அதே சமயம் அல் ஜஸீரா தொலைக்காட்சி அலுவலகம் மாத்திரம் சேதப்படுத்தப் படாமை ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அம்சமாகும்.

பற்றி எரிந்து கொண்டிருக்கும் காஸா மீதான தாக்குதல் ஏதோ எதேர்ச்சயாய் நடந்த ஒரு சம்பவம் கிடையாது. இத்தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதற்கு முன், மூன்று வாரங்கள் இஸ்ரேல் இராணுவத்தினரும் அமெரிக்க இராணுவத்தினரும் இணைந்து சுமார் 4500 இராணுவத்தினர்கள் சகிதம் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டமை, மேலும், இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் உயர் நிலை தளபதிகளில் ஏற்படுத்தப்பட்ட அதிரடி மாற்றங்கள், குறிப்பாக ஏலவே காஸா மற்றும் லெபனான் தாக்குதல்களுக்கு களத்தளபதியாக பதவி வகித்த கேர்ணல் Ilan Malka பிரிகேடியர் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்டதுடன் பிரதி கட்டளையிடும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டமை, “ஹமாஸை தேர்ந்தெடுத்த காஸா மக்கள் அப்பாவிகள் அல்ல, அவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். ஹிரோஷிமாவை துவம்சம் செய்த பிறகும் ஜப்பான் பணியவில்லை. எனவே, அமெரிக்கா நாகசாகி மீது மேலும் அணுகுண்டை வீசியது. காஸாவில் மின்சாரம், கேஸ், வாகனங்கள் என எல்லாவற்றையும் அழித்தொழியுங்கள். தானாகவே காஸா போரை நிறுத்தும்” என்று இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷேரோனின் மகனும் தற்போதைய இஸ்ரேல் ராணுவத்தில் மேஜராக இருப்பவருமான கிலாட் ஷேரோன் ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையில் வெளியிட்ட விஷம் கக்கும் அறிக்கை, காஸா தாக்குதலோடு, “இஸ்ரேலில் வாழும் அமெரிக்கர்களை பாதுகாக்கப் போகிறோம்” என்ற முகமூடியை அணிந்து கொண்டு மத்திய தரைக்கடல் வழியாக இஸ்ரேலை நோக்கி 3 யுத்தக் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியமை உள்ளிட்ட அனைத்து காய் நகர்த்தல்களும் இது ஓர் திட்டமிடப்பட்ட தாக்குதலே என்பதை உறுதிப்படுத்துகின்றது.

எனவே, பற்றியெரியும் பாலஸ்தீன காஸாவாகட்டும், அமெரிக்காவினால் கண்ணி வைத்து சீண்டப்படும் சிரியாவாகட்டும், அவ்வப்போது அடிவாங்கும் லெபனானாகட்டும், உசுப்பேத்தப்படும் துருக்கியாகட்டும், வகை தொகையின்றி கொன்றொழிக்கப்படும் மியன்மார் கொலை களமாகட்டும், இங்கெல்லாம் முஸ்லிம்களை கருவறுப்பதற்கான காடைத்தன திட்டங்கள் நாசுக்காய் நகர்த்தப்பட்ட வண்ணம் உள்ளன. 

உலகத்திலே பகிரங்கமாய் ஓர் அநீதி அரங்கேற்றப்படுகிறது. அப்பாவி ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், முதியவர்களும் அயோக்கியர்களால் அழிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட அபலைகளின் அழுகுரல் அனைத்து அரபு தேசத்து ஆட்சியாளர்களின் செவிகளிலும் ஆணி அறைந்தாற் போல் விழுகிறது. ஆனால், அல்குர்ஆனின் “பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?” 4 : 75 என்ற வசனத்தின்படி அநீதியை தடுத்து நிறுத்தும் பொருட்டு புனித யுத்தம் செய்ய கடமைப்பட்ட சவுதி அரேபியா, கட்டார், குவைத், எகிப்து உள்ளிட்ட  57 நாடுகளை அங்கத்தவர்களாய் கொண்டு செயற்படும் OIC (Organization of Islamic cooperation) எனும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றுமே அறியா அறிவிலிகள் போன்று, வெற்று அறிக்கைகளை விட்டுக்கொண்டு வாய் மூடி அநீதிக்கு முன் அடங்கிப்போயுள்ளமை ‘முஸ்லிம்கள் ஓர் உடம்பைப் போன்றவர்கள்’ என்ற நபிகளாரின் போதனைகள் மறக்கடிக்கப்பட்டு, முஸ்லிம் உம்மத்தின் உணர்வுகள் கூட செத்துப்போய் விட்டன என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

ஒருபுறம் அரபு ஆட்சியாளர்கள் அமைதிகாக்கும் அதேசமயம்,  மறுபுறம் விபச்சாரக் குழந்தை இஸ்ரேலுக்கு தங்கள் நாட்டு தூதுவர்களை நியமிப்பதன் மூலமும், இஸ்ரேலின் தலைவர் ஷிமோன் பெரஸையும் இஸ்ரேலையும் ‘உயர்ந்த உன்னத  நண்பன்’ என்று விழித்து எகிப்திய இஸ்லாமிய(?) ஜனாதிபதி முஹம்மது முர்ஸி கடிதம் எழுதியதன் மூலமும் இஸ்ரேலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் அயோக்கியத்தனத்தையும் செய்து வருகின்றமை கண்டிக்கத்தக்க விடயமாகும். ஹூஸ்னி முபாரக்கின் ஆட்சியை தாகூத்திய ஆட்சி என்று உரத்து முழங்கிவிட்டு, இன்று அதே இஹ்வானிகள் இத்தாகூத்துகளுக்கு சார்பாக நடப்பது எந்த வகையில் நியாயம்? லிபியாவின் முஅம்மர் கடாபியை கொலை செய்ய வேண்டும் என்று முழங்கிய யுஸூபுல் கர்ளாவி, அமெரிக்க நலன்களுக்காய் உழைப்பது மட்டுமன்றி இராணுவத் தளத்தையும் வழங்கியுள்ள கடார் மன்னருக்கு எதிராய் வாய் திறக்காமல் இருப்பதன் மர்மம் தான் என்னவோ? முர்ஸியின் மூலமும், கர்ளாவி போன்ற கதாபாத்திரங்கள் மூலமும் எகிப்தில் கிலாபத் மலரும் என்ற அதீத நம்பிக்கையில் சிறகடிக்கும் இஹ்வானிகளே! உங்கள் பார்வையை இன்னும் விசாலப்படுத்துங்கள்! மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாய் பாலஸ்தீன விடுதலைப் போராட்டங்களும் மாறிவிடக் கூடாது. ஆக்கபுர்வமாய் சிந்திப்போம்! அறவழியில் நடை பயில்வோம்! அநீதிக்கு முன் அமைதி காக்காது எரிமலையாய் கொதித்தெழுவோம்!


No comments

Powered by Blogger.