Header Ads



எகிப்தில் இரண்டாம் காட்ட வாக்களிப்பு நாளை - தேர்தல் ஆணையாளர் ராஜினாமா..!


எகிப்து நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர், திடீரென ராஜினாமா செய்துள்ளார்.எகிப்து நாட்டை, ஹோஸ்னி முபாரக், கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளாக ஆட்சி செய்தார். இவரது குடும்ப ஆட்சியை எதிர்த்து, புரட்சியில் மக்கள் ஈடுபட்டனர். இதன் விளைவாக, முபாரக் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார்.ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர், முகமது முர்சி அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

புதிய அரசியலமைப்பு சட்ட வரைவு குறித்து, பொதுமக்களின் விருப்பத்தை அறியும் முதல் கட்ட பொது வாக்கெடுப்பு, 15ம் தேதி நடந்தது. இரண்டாவது கட்ட ஓட்டெடுப்பு, நாளை நடக்கிறது.முதல் கட்ட ஓட்டு பதிவில், அரசுக்கு சாதகமாக, 50 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுக்கள் பதிவானதாக கூறப்பட்டது. ஆனால், இந்த ஓட்டெடுப்பில் மோசடி நடந்துள்ளதாக, எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், எகிப்து நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர், சக்லுயல்-எல் பால்ஷி, தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, நேற்று, தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதுகுறித்து, அவரது குடும்பத்தினர் குறிப்பிடுகையில், "பால்ஷி' கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ளார். மற்றபடி, அவரது உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை' என, தெரிவித்துள்ளனர்.அரசியல் சாசன வரைவு தொடர்பாக நடந்த முதல் கட்ட ஓட்டெடுப்பில், நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. இதற்கு தலைமை தேர்தல் ஆணையர், பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார். இதற்கு பயந்து தான் அவர் ராஜினாமா செய்துள்ளார் என, எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.நாளை, இரண்டாவது கட்ட ஓட்டு பதிவு நடக்கும் சூழலில், பால்ஷி ராஜினாமா செய்துள்ளது, அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


No comments

Powered by Blogger.