Header Ads



அம்பாந்தோட்டையில் கிறிஸ்தவ தேவாலயம் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல்


(Bbc) இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டம் வீரகட்டிய பகுதியில் ஜீவனாலோக சபை என்ற கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த கூட்டம் ஒன்றினால் ஞாயிறன்று தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதெனக் குற்றம்சாட்டபடுகிறது.

காலை வேளையில் தேவாலயத்தில் பூசை நடந்துகொண்டிருந்த நேரத்தில் பௌத்த பிக்குகள் சுமார் 80 பேர் தலைமையில் வந்த ஆயிரம் பேர் அடங்கிய கும்பல் ஒன்று தேவாலயத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த வாகனங்களுக்குத் தீவைத்தும் தேவாலயத்துக்குள் இருந்த கண்ணாடிகளையும் பிற பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினர் என்று பெயர் வெளியிட விரும்பாத தேவாலய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

தாக்குதலின்போது தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தவர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும், பலர் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரூபாய் 6 லட்சம் அளவில் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

11 வருடங்களாக இத்தேவாலயம் வீரகட்டிய பகுதியில் இருந்துவருகிறது என்றாலும் பௌத்த பிக்குகளின் அனுமதி பெற்றே அது செயலாற்ற முடியும் என்பதுபோன்ற அழுத்தங்களை அது சமீபகாலமாக எதிர்கொண்டு வருகிறது என்று அந்த தேவாலயத்தின் பிரதிநிதி குறிப்பிட்டார்.

இந்த பின்னணியில் ஞாயிறு காலை நடந்த தாக்குதலைப் பொலிசார் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றாலும் சேதங்கள் மேலும் அதிகமாகாமல் பொலிசார் கட்டுப்படுத்தினர் என்று அவர் கூறினார்.

சம்பவ நேரத்தில் பொலிசாரும், இராணுவத்தினரும் இருந்தனர் என்றபடியால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தேவாலய நிர்வாகம் தற்சமயம் இத்தாக்குதல் சம்பந்தமாக எவ்வித சட்ட நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.