நாம் படுமோசமாக புறக்கணிக்கப்படுகிறோம் - முஸ்லிம் காங்கிரஸ் உள்ளுர் பிரமுகர்கள் ஆவேசம்
(பைஸல் இஸ்மாயில் + எஸ்.எம்.அறூஸ்)
பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனம் வழங்குவதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் பாரபட்சமாக நடந்து கொள்கின்றது. பிரதேச செயலாளர் குறிப்பிட்ட ஒரு அரசியல் வாதியின் கைப்பொம்மையாக செயல்படுகின்றார். பட்டதாரிகளுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் வீதியில் இறங்கிப் போராடுவோம். இவ்வாறு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனம் வழங்குவதில் அரசியல் முறைகேடு நடைபெறுவதை கண்டி;து ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று2012-12-08 சனிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றபோது அதற்கு தலைமை தாங்கி கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அன்ஸில் தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் என்பவர் ஒரு பிரதேசத்தின் நிர்வாகத்திற்குரிய அதிகாரியாவார். அவர் பக்கச்சார்பாக நடந்து கொள்வாராயின் அங்கு நீதி, நியாயமான ஒரு நிர்வாகம் நடைபெறவில்லை என்பதையே காட்டுகின்றது. இப்பிரதேச மாகாண அமைச்சரின் கட்டளைப்படி பட்டியல்களை தயாரிப்பதும், செயல்படுவதும் ஆச்சரியமளிக்கின்றது.
பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டங்களைப் பெற்று பட்டதாரிகளாக வெளியேறியவர்கள் இன்று அரைகுறை அரசியல் வாதிகளினால் அழைக்கழிக்கப்பட்டு வருவது மிகக் கவலைக்குரிய விடயமாகும். அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்தின் படி பட்டதாரி பயிலுனர்கள் பொருளாதார அமைச்சுக்கு உள்ளீர்க்கப்படுவதாயின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் கூட்டப்பட வேண்டும். ஆனால் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் கூட்டப்படாமல் அபிவிருத்திக் குழுத் தலைவரின் விருப்பப்படி பட்டதாரிகள் தெரிவு செய்யப்படுவது கண்டிக்கத்தக்க ஒரு செயற்பாடாகும்.
பிரதேச அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரியின் வீட்டை முற்றுகையிடுகின்ற ஒரு நிலைக்கு பட்டதாரிகளை உட்படுத்தியுள்ளனர். அமைச்சர்களின் இணைப்பாளர்கள் என்று சொல்கின்றவர்களின் கதைகளை பிரதேச செயலாளர் தெய்வ வாக்காக சில கூட்டங்களில் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை கட்டியெழுப்புவோம் என்று நாட்டின் ஜனாதிபதி செயற்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறான அரச அதிகாரிகளையும்;, அமைச்சர்களையும் வைத்துக் கொண்டு எப்படி ஆசியாவின் ஆச்சரியமாக மாற்ற முடியும் என்று கேட்கவிரும்புகின்றேன்.
அட்டாளைச்சேனை பிரதேசம் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகும். சுமார் எண்பது சத விகிதமானவர்கள் அந்தக் கட்சியை ஆதரிக்கின்றவர்கள். அவ்வாறான நிலையில் இந்தப் பிரதேசத்தில் பிறக்காத இந்த மக்களின் ஆதரவைப் பெறாத ஒருவர் அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது எம்மை நாமே சிந்திக்கத் தூண்டுகின்றது. இந்தப் பிரதேசத்திலிருந்து ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டு;ள்ளோம்.
நமது வாக்குகளைப் பெற்று பதவிகளைப் பெற்றவர்கள் இன்று இந்த விடயங்களில் மௌனப் போக்கைக் கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கதாகும். எமது கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கிமுடனும், அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இது தொடர்பில் பலமுறை கதைத்துள்ளோம்.
இந்த அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் பங்காளியாக இருக்கின்ற நிலையிலும் எமக்கு தொடர்ச்சியாக அநியாயங்கள் நடக்கின்றபோது ஏன்? இந்த அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் எனப் பகிரங்கமாகக் கேட்கவிரும்புகின்றேன்.
தனிப்பட்டவர்களின் பதவி, பட்டங்களுக்கு நாங்கள் ஒத்தாசையானவர்கள் அல்ல. எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதே எமது பணியாகும். வாக்குகளைப் பெற்று கொழும்பில் அவர்கள் அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர். அடிமட்ட மக்களின் பிரச்சினைகள் எங்களுக்குத்தான் தெரியும். நாங்கள் அதை ஒவ்வொரு நாளும் சந்தித்துக்கொண்டிருக்கின்றோம்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் நாம் எதிர்க்கட்சியைவிட மிகமோசமாக புறக்கணிக்கப்படுகின்றோம். கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்திற்கு நான் பிரதேச செயலகத்திற்கு சென்றபோது அங்கு இந்தப் பிரதேசத்தின் கொந்தராத்துக்காரர்கள் அனைவரும் இருப்பதைக் கண்டேன். மிகக் கேவலம், வெட்கம்,அவமானம் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்பது அந்தப்பிரதேச மக்களின் பங்களிப்புடன் நடைபெறவேண்டியதாகும். இன்று பிரதேச செயலாளர் கொந்தராத்துக் காரர்களுடன் கூட்டம் நடத்துகின்றார். இதை என்னவன்று சொல்வது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் குறிப்பிட்ட அரசியல் வாதியின் கைப்பொம்மையாக இருக்கும் வரையில் இந்தப் பிரதேச செயலகத்தில் நீதி, நியாயமான ஒரு நிர்வாகத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. அது மட்டுமல்ல உடனடியாக அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராக எமது பிரதேசத்தின் மக்கள் ஆதரவைப் பெற்ற ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்துள்ளோம்.
அட்டாளைச்சேனை பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக அட்டாளைச்சேனையில் கடமையாற்றுகின்றார். குறிப்பிட்ட ஒரு வருடகாலத்திற்குட்பட்ட பகுதிக்குள் வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றம் பெற்றுப் போய்வந்ததைத் தவிர இன்று வரை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தை கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளார். அரசியல்வாதிகளின் காலடியில் கிடந்து மக்களின் நிதிகளை அவர்களது வரவேற்பு நிகழ்வுகளிற்கு ஒதக்குவதற்கு பல வழிகளில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் துனை புரிந்துள்ளார். இவரை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும்.
பாலமுனை ஹிரா நகர் வீடமைப்புத் திட்டத்தில் பயனாளிகளைத் தெரிவு செய்வதில் பாரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. முதலமைச்சரின் கீழ் குறிப்பிட்ட அமைச்சுக்கள் இருக்கின்ற நிலையில் மக்களை ஏமாற்றியது போதும். என்றார். அமைச்சர் உதுமாலெப்பை தனது அமைச்சு செய்வது போன்று நடக்கின்றார். அமைச்சர் உதுமாலெப்பையின் அரசியல் பழிவாங்கள் இந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது.
இங்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நஸீர் கருத்துத் தெரிவிக்கையில
பட்டதாரிகளின் நியமனத்தில் அரசியல் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது கவலைக்குரியதும்,கண்டிக்கத்தக்கதுமாகும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கவலை தெரிவித்தார்.
இங்கு மாகாணசபை உறுப்பினர் நஸீர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கல்வித் துறையில் அரசியல் முதன்மைப்படுத்தப்படுமாக இருந்தால் கல்வித் துறை பாரிய பின்னடைவுகளை சந்திக்கும். கல்வித்துறைக்கு உதவிகளையே அரசியல் வாதிகள் செய்யவேண்டும். மாறாக பிழையான எடுகோள்களுக்கு முன்னுதாரணமாக அமையக் கூடாது.
நமது சமூகத்தின் நம்பிக்கை கல்வியாகும். அரசியல் அதிகாரம் ஒருவருக்கு இன்று இருக்கும். நாளை இல்லாமல் போகலாம். ஆனால் கல்வியில் நாம் இன்று பிழையான முறைகளில் தீர்மானங்களை எடுப்பவர்களாக இருப்போமாயின் நாளை நமது சமூகம் எல்லாத்துறைகளிலும் பின்னடைவு அடைந்த சமூகமாக மாறும்.
இன்று பிரதேச செயலாளரினால் பாகுபாடு காட்டப்படுவதாக இன்று பரவலாகக் கூறப்படுகின்றது. கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் அந்தரங்கச் செயலாளர் போன்று பிரதேச செயலாளர் செயற்படுகின்றார். பட்டதாரிகளின் நியமனத்தில் அபிவிருத்திக் குழுத் தலைவர் முறையற்ற ரீதியில் நடந்து கொண்டுள்ளார்.
அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறாமல் தலைவர் என்று சொல்லி எவ்வாறு தீர்மாணம் எடுக்கமுடியும்.
அத்தோடு அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழுத் தலைவர் உடனடியாக மாற்றப்பட்டு இப்பிரதேச மக்களின் பெரும்பான்மை ஆதரவைப்பெற்ற மக்கள் பிரதிநிதி தலைவராக நியமிக்கப்பட வேண்டும். பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் பல்கலைக்கழகம் சென்று பட்டம்பெற்று இன்று அரைகுறை அரசியல் வாதிகளின் வீடுகளை தட்டவேண்டிய நிலைக்கு பட்டதாரிகளை இப்பிரதேச அரசியல்வாதி உள்ளாக்கியுள்ளார்.
இப்பிரதேச மக்களினால் புறக்கனிக்கப்பட்ட அரசியல்வாதி தப்பிப்பிழைத்து தமிழ் மகனுக்குக் கிடைக்கவேண்டிய அதிகாரத்தைப் ;பெற்று இன்று பட்டம்படித்த பட்டதாரிகளை கேவலப்படுத்துவது போன்று பிரதேச செயலாளருடன் இணைந்து தீர்மாணம் எடுப்பதையிட்டு மிகவும் வேட்கம் அடைகின்றோம்.
அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியாயமான முறையில் நியமனம் வழங்கப்படவேண்டும். இதில் எந்தக்கட்சி என்ற பேதம் இருக்கக்கூடாது. நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த பத்திரிகையாளர் சந்திப்பை மேற்கொள்ளவில்லை. தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
அதுமட்டுமல்ல இன்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோர் தமது அதிகாரங்களை பிழையான வழிகளில் பயன்படுத்துகின்றனர். ஒரு சாதனையாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றுவது ஒரு பிரமிப்பாகவுள்ளது. அதற்கிடையில் ஒருவருடம் வேறு ஒரு இடத்திற்கு இடமாறறமாகி போய் வந்திருக்கின்றார்.
இவர் பல பிழையான வழிகளில் ஈடுபட்டு அமைச்சர் உதுமாலெப்பையின் தரப்பிற்கு எவ்வாறு நிதிகளை வழங்க சிபார்சு செய்யலாம், அவரை எவ்வாறு கூட்டங்களுக்க பிரதம அதிதியாக அழைக்கலாம், உதுமாலெப்பை சொல்கின்ற கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு ஒப்பந்த வேலைகளை வழங்க சிபார்சு செய்தல் போன்ற வேலைகளிலேயே ஈடுபடுகின்றார்.
தொடர்ச்சியாக இந்தப் பிரதேச செயலகத்தினால் மக்களுக்கு புறக்கணிப்புக்கள் நடக்குமாயின் மக்களை ஒன்று திரட்டி வீதியில் இறங்கிப் போராடவும் தயங்கமாட்Nன். மக்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்தேனே தவிர எனது தேவைகளுக்காக அல்ல.
மக்களுக்காக அரசிலுக்கு வந்த நாங்கள் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டு ஏமாற்றப்படுவதை எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க முடியும். எதிர்வரும் மாகாண சபை அமர்வுகளில் இது தொடர்பாகவும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தொடர்பாகவும் பிரேரனையொன்றை சமர்ப்பிக்கவுள்ளேன். மக்களுக்காக சமத்துவமான நல்லாட்சி நடைபெறவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பிரதேச சபை உபதவிசாளர் அமானுல்லா, பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஐ.எல்.அப்துல் முனாப், என்.எல்.யாசிர் ஐமன், ஏ.எல்.கால்டீன் மௌலவி, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை மத்திய குழுத் தலைவர் சுலைமாலெப்பை, செயலாளர் சதாத் ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
இவர்கள் பிரதேசவாதம் பேசி அரசியலுக்குள் வந்தவர்கள். சகோ. அன்ஸில் எப்போதும் யாரையாவது குறை கூறிக்கொண்டே இருப்பார். இவர்களின் உரையில் மறைமுகமான ஒரு விடயம் தெரிகின்றது. அட்டாளைச்சேனையில் பிரதேச அபிவிருத்தி நடக்கின்றது. மக்கள் வாக்குகளை பெற்று விட்டோமே... சும்மா இருந்தா விடுவார்களா!? என்ற பயத்தில் பேசித்திரிகின்றார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.
ReplyDelete