நெடுஞ்சாலையில் நடுவே இருந்த வீடு அகற்றப்பட்டது
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் நகரில் புதிய ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வாகனங்களில் வந்து சேருவதற்காக விரைவு நெடுஞ்சாலை அமைக்க அரசு திட்டமிட்டது.
இதற்காக அந்த பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அரசு தரப்பில் உரிய இழப்பீடும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் வசித்து வந்த வாத்துப்பண்ணை உரிமையாளரான லூ என்பவர் தன் வீட்டை காலி செய்ய 3 வருடமாக மறுத்து வந்தார்.
6 லட்சம் யுவான் செலவழித்து, தன் வீட்டை கட்டியுள்ளதாகவும், அரசு தரும் 2 லட்சத்து 20 ஆயிரம் யுவான் இழப்பீட்டை பெற்றுக் கொண்டு, நான் எங்கே போய் இடம் வாங்கி, வீடு கட்டி வாழ முடியும் என்று வாதாடிய அவர் இறுதிவரை அந்த வீட்டை காலி செய்யவில்லை.
இந்நிலையில் அந்த வீட்டின் இருபுறமும் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக அச்சாலையின் நடுப்பகுதியில் இவரது வீடு மட்டும் தன்னந்தனியே இருந்தது. இந்த காட்சி, பல ஊடகங்களிலும், இண்டர்நெட்டிலும் வெளியாகின.
இந்த வீட்டை படம்பிடிக்கவும், உரிமையாளரை பேட்டி காணவும் பத்திரிக்கையாளர்கள் அந்த வீட்டை முற்றுகையிட தொடங்கினார்கள். இதனால், லூ வேதனை அடைந்தார். இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்தி கேட்டு லூ நடத்தி வந்த போராட்டத்தை பற்றி கேள்விப்பட்ட அப்பகுதியில் முன்னர் குடியிருந்த வீட்டு உரிமையாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், லூ-வின் வீட்டிற்கான இழப்பீட்டுத் தொகையை 2 லட்சத்து 60 ஆயிரம் யுவான்( 41 ஆயிரம் அமெரிக்க டாலர்) ஆக உயர்த்தி வழங்க சீன அரசு சம்மதித்தது. எனவே வேறு வழி இல்லாமல் வீட்டின் உரிமையாளரும் அதை ஏற்றுக் கொண்டு வீட்டை காலி செய்தார்.
இதையடுத்து, மாகாண அதிகாரிகள் இன்று அந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கினார்கள். விரைவு நெடுஞ்சாலையில் வேகத்தடை போல் அமைந்திருந்த அந்த வீடு இடிக்கப்படும் காட்சியை, பலர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.
Post a Comment