கிழக்கு மாகாணத்தில் நியாயமற்ற விதத்தில் பஸ் கட்டணம் அறவிடுவதாக புகார்
(அகமட்)
கிழக்கில் பயணிகள் சேவையில் ஈடுபடும் ஒருசில தனியார் பஸ்களில் நியமக் கட்டணத்திற்கு அதிகமான பஸ்கட்டணம் அறவிடப்படுவதாகவும் பயணிகள் தரக்குறைவாக நடாத்தப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருசில தனியார் அரைச் சொகுசு பஸ்கள் தான்தோன்றித் தனமாக கட்டணங்களை அறிவிடுவதாவும் மீதிப் பணத்தை வழங்காது விட்டுவிடுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அக்கரைப்பற்றில் இருந்து வவுனியா வரை பயணிக்கின்ற அரைச் சொகுசு தனியார் பஸ் ஒன்றில் இந்நிலைமை காணப்படுவதால் தினமும் பயணிகள் நடத்துனருடன் முரண்பட்டுக் கொள்கின்றனர்.
இந்த பஸ்ஸில் அரைச் சொகுசு பஸ்ஸினை அடையாளப்படுத்தும் 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டுள்ள போதிலும் சாதாரண கட்டணத்தை அறவிடும் பஸ்களைப் போலவே பயணிகள் சேவை வழங்கப்படுகின்றது. இந்நிலையில், நியாயமற்ற முறையில் அதிக கட்டணங்கள் அறவிடப்படும் அதேநேரம் நாளுக்கு நாள் மாறுபட்ட கட்டணத்தை அறவிடுவதாகவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் வினவும் பயணிகளிடம் நடத்துனர் முறையற்ற விதத்தில் நடந்து கொள்வதுடன் தரக்குறைவாக பேசுவதால் தினமும் நடத்துனருக்கும் பயணிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வேறு சில தனியார் பஸ் நடத்துனர்கள் பயணச் சீட்டினை வழங்குவதில்லை எனவும் ஒருசில போக்குவரத்து சபை பஸ் நடத்துனர்கள்; கூட சில்லறை இல்லையெனக் கூறி மிகுதிப் பணத்தை தராது விடுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Post a Comment