பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது சட்டம் பாயும்..!
பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, சீன அரசு முடிவு செய்துள்ளது.உலகிலேயே, அதிக ஜனத்தொகை கொண்ட நாடு சீனா. மக்கள் தொகையை கட்டுப்படுத்த, ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ளும் திட்டத்தை, 30 ஆண்டுகளுக்கு முன், சீனா அறிமுகப்படுத்தியது.
இதனால், சீனாவின் ஜனத்தொகை கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.பொருளாதார ரீதியாக இந்த திட்டம் வெற்றி பெற்றாலும், உணர்வு பூர்வமாக பல பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குழந்தை என்பதால், விளையாட துணையின்றி பல குழந்தைகள் தனித்து வாழும் சூழல் உள்ளது. வளர்ந்த பின், இவர்கள் வெளிநாட்டில் வேலைக்கு சென்று அங்கேயே தங்கி விடுகின்றனர். இதனால், சொந்த ஊரில், பெற்றோர் தனிமையில் வாடி வருகின்றனர்.சீனாவில் முதியோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட, 20 கோடியை எட்டியுள்ளது. இவர்களில் பெரும்பாலோர், தனிமையில் வசிக்கின்றனர்.
இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட, சீன அரசு சமீபத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. பிள்ளைகள் எங்கிருந்தாலும், பெற்றவர்களை கண்டிப்பாக சந்தித்து பேசும் நடைமுறையை உருவாக்கி கொள்ள வேண்டும். முடிந்தவரை தங்களுடன் பெற்றோரை வைத்து பாதுகாக்கும் சூழலை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பெற்றோரை கண்டு கொள்ளாத, பிள்ளைகள், தண்டனைக்கு உள்ளாவார்கள்.இவ்வாறு சீன அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளது.பெற்றோர்களை பாதுகாக்க தவறும் பிள்ளைகளை, தண்டிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
Post a Comment