'இனிமேல் யுத்தமில்லை' கருத்தரங்கு
(அப்துல் அலீம்)
'இனிமேல் யுத்தமில்லை' என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கு கண்டி கெற்றம்பே யில் அமைந்துள்ள சர்வதேச சிவில் சேவைகள் நிறுவனத்தின் (SCI) பயிற்சிக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
இதில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் தென்பகுதி உள்ளிட்ட நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 35 பங்கு பற்றுநர்கள் கலந்து கொள்கின்றனர்.
டிசெம்பர் 30 ம் திகதி வரை மூன்று தினங்களுக்கு இடம்பெறும் இந்தப் பயிற்சி நெறியில் இத்தாலியைச் சேர்ந்த மத்தியூ டெஸ்டினோ, மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த கிறேஸ் வோல்ஸ் ஆகியோர் வளவாளர்களாக இருந்து பயிற்சிகளை வழங்குகின்றனர்.
சர்வதேச சிவில் சேவைகள் நிறுவனத்தின் தேசிய செயலர் முஹம்மத் ரஜுதீன் அதன் இணைப்பாளர் செல்வி மதுகா கருணாரத்ன ஆகியோர் உள்ளுர் வளவாளர்களாகவும் நிகழ்ச்சி நெறிப்படுத்துனர்களாகவும் செயற்படுகின்றனர்.
சர்வதேச சிவில் சேவைகள் நிறுவனம் இலங்கையில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த தொண்டர்களையும் வெளிநாட்டுத் தொண்டர் படையணியினரையும் கொண்டு வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் நாலாபுறங்களிலும் சிரமாதானப் பணிகளையும், சாரணிய வேலைத் திட்டங்களையும் சமூக சகவாழ்வுக்கு வலுவூட்டும் அஹிம்சை வழியிலான அறப்பணி செயற்பாடுகளையும் ஆற்றி வருகின்றது.
நாட்டில் நீண்ட காலமாக நிலவிய ஆயுத வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்ற போதிலும் மனிதர்களின் மனங்களில் நிலவும் கசப்புணர்வுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலேயே நாட்டில் நிரந்தர சமாதானமும் இன சௌஜன்யமும் நிலவும். அதனாலேயே 'இனிமேல் யுத்தமில்லை' என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்குகளை நாடு பூராகவும் நடத்தத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக சர்வதேச சிவில் சேவைகள் நிறுவனத்தின் செயலர் முஹம்மத் ரஜுதீன் தெரிவித்தார்.
Post a Comment