Header Ads



பூமியின் ஓரங்கள் குறைந்து வருகிறது - அல்குர்ஆன் அருள்வாக்கு உறுதியானது


(சுவனப்பிரியன்)

துருவப் பகுதிகளில் பனிப்பாறைச் சரிவுகளும், பனிக்குன்றுகளும் உருகி கடல் மட்டம் உயர்வதும், கடல் நீர் வெப்பம் கூடுவதும் கடந்த 50 ஆண்டுகளாய் தொடர்கதையாகிறது. அதனால் பூமியின் பருவ நிலைக் கோளாறுகள், முரண்பாடுகள் பெருமளவில் தோன்றி உலக மக்களின் வாழ்வு, நாகரீகம் சிதைவாகி இன்னல் அடைந்து வருகின்றனர். 21 ஆம் நூற்றாண்டில் பயங்கரக் “காத்ரீனா” (ஹிந்தி நடிகை அல்ல :-)) கடற் சூறாவளி அடித்து நியூ ஆர்லியன்ஸ் நகரம் முற்றிலும் சேதமடைந்தது. 2012 அக்டோபரில் அடித்த “ஸாண்டி” நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களை நிர்மூல மாக்கியது. கத்ரீனாவும், ஸாண்டியும் சூட்டு யுகம் தயாரித்த மாபெரும் பயங்கர ஹைடிரஜன் குண்டுகளாகக் கருதப் பட வேண்டும்.

ஓசோன் குறைபாடுகளால் நமது பூமி மிகப் பெரும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது. நமது பூமியை சூரியனின் கதிர்கள் அளவுக்கதிகமாக தாக்கி விடாமல் தடுப்பவை இந்த ஓசோன் படலங்களே! இந்த பிரதேசத்தில் இயற்கையாக உள்ள வாயுக்களைத் தவிர்த்து பூமியிலிருந்து மனிதர்களால் கரியமில வாயுவும் அளவுக்கதிகமாக இந்த பகுதியை அடைவதால் வாயுக்களின் அடர்த்தியானது மிகைக்கிறது.. இதனால் சூரியனின் தாக்கம் அதிகரித்து பனிப்பாறைகள் உருகத் தொடங்குகின்றன. ஆகவே கடலின் மட்டம் உயர்ந்து கடல் நீர் நிலப்பகுதிக்குள் வருகிறது. இந்த உப்பு நீரானது பல ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களையும் கபளீகரம் செய்து விடுகின்றன. நமது பக்கத்து நாடான பங்களாதேசின் பல பகுதிகள் இன்னும் 50 ஆண்டுகளில் கடலுக்குள் அமிழ்ந்து விடும் என்கின்றனர் அறிவியல் அறிஞர்கள். இந்த ஓசோன் பிரச்னையை தீர்க்க பல நாடுகள் முயற்சித்து வருகிறது. வழக்கம்போல் அமெரிக்கா எந்த பிடியும் கொடுக்காமல் இந்த விஷயத்தில் நழுவிச் செல்கிறது..

1. பூமியின் வெப்பம் 1900 ஆம் ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூமியின் வெப்பம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி வெப்பம் ஏறியுள்ளது.

2. 20 ஆம் நூற்றாண்டின் ஏழு ஆண்டுகள் வெப்பம் மிகையான காலங்களாக பதிவாகி யுள்ளன. அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் மிகுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு மிகையாகி யிருக்கிறது! கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர்..

4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன! வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆஃபிரிக்க நாடுகளுக்கு மிக உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

6. WHO [World Health Organization] பூகோளச் சூடேற்றத்தால் [மித மிஞ்சிய சூடு / குளிர், வறட்சி, பஞ்சம், கடும் வெப்ப அலைகள், உணவுப் பற்றாக் குறை, மலேரியா போன்ற நோய்கள்] ஆண்டுக்கு 150,000 பேர் இறந்து விடுவர் என்று எச்சரிக்கிறது.

டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center] and [11 Facts About Global Warming]

“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது! அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிளிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்! அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன! அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப் பாறைகள் உருகிப் போயின! அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன! நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது! வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்? அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

Reference:

[Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center] and [11 Facts About Global Warming]

An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

S. Jayabarathan 

--------------------------------------------------------------------

ஓரங்களில் குறையும் பூமி

"பூமியை அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் பார்க்கவில்லையா,"
அல்குர்ஆன் 13:41

'பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா நம்மை வெல்பவர்கள்?'
-குர்ஆன் 21:44

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளதை மேலே பார்த்தோம். 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது. அதிலும் அந்த மக்களில் பெரும்பாலானோரும் முகமது நபியும் வாழ்ந்த இடங்கள் கடற்கரையை ஒட்டிய நிலப்பரப்பும் அல்ல. இது பற்றிய அதிக அறிவும் அந்த மக்களுக்கு இருந்திருக்க வில்லை.

எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது, திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.

No comments

Powered by Blogger.