விக்கிரக ஆராதனையை இறைவன் விரும்பவில்லை - மாலி முஸ்லிம் போராளி குழு
(tn) வடக்கு மாலியில் வரலாற்று பிரசித்திபெற்ற டிம்புக்துவில் இருக்கும் எஞ்சிய கல்லறை கட்டடங்களையும் இஸ்லாமிய போராளி குழு அழிக்க ஆரம்பித்துள்ளது.
‘டிம்புக்துவில் ஒரு கல்லறை கூட மிச்சம் வைக்கப்படாது. அல்லாஹ் இதனை விரும்பவில்லை’ என இஸ்லாமிய போராளி குழுவான அன்ஸார் டினின் தலைவர் அபூ தர்தா ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். ‘இங்கிருக்கும் அனைத்து கல்லறைகளையும் அழிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் வடக்கு மாலியை கைப்பற்றிய இஸ்லாமிய குழு அங்கிருக்கும் புனித தலங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இவைகள் விக்கிரக ஆராதனை என அந்த குழு கருதுகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் நான்கு கல்லறைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. கூர்மையான கோடரிகளை பயன்படுத்தியே இந்த கல்லறைகள் அழிக்கப்பட்டு வருவதாக உள்ளூர்வாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.
டிம்புக்து நகர் 13 முதல் 17 ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய கல்வி அறிவின் கேந்திரமாக இருந்துள்ளது. இங்குள்ள புனித தலங்கள் சூபி முஸ்லிம்களுடையதாகும்.
பல நூற்றாண்டு பழைமையான இவை ஐ.நா.வின் பாராம்பரிய சொத்தாக பதியப்பட்டுள்ளன. எனினும் சலபி சிந்தனை கொண்ட அன்ஸார் டின் போராளி குழு இந்த கல்லறைகளை மக்கள் வழிபடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளது.
மாலியில் கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட இராணுவப் புரட்சியின் போது இஸ்லாமிய போராளிகள் டிம்புத்துவை கைப்பற்றினர். இந்த குழுவுக்கு எதிரான ஆபிரிக்க நாடுகளின் இராணுவ நடவடிக்கைக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆதரவளித்துள்ளது.
Post a Comment