கைசேதமான மக்களின் கனவுகளும், தடுமாறும் நமது தலைமைகளும்
தலைமைத்துவம் என்பது கற்காலம் தொட்டு தற்காலம்வரை பல்வேறு வடிவங்களில் உலகில் எல்லா சமுகங்களுக்கும் இருக்கின்ற ஒரு அலகாகும். இது அந்தந்த சமுகங்களின் இனம், மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் வாழுகின்ற சூழல் போன்ற இன்னும் பல காரணிகளால் தீர்மானிக்கப்பட்டிருக்கும் ஒரு அம்சமாகும்.
உலகிற்கு முதன்முதல் இறைவனால் அனுப்பப்பட்ட ஆதம் (அலை) அவர்களும் ஒரு தலைமைத்துவத்தை தாங்கி சமுகத்தை வழிநடாத்தும் ஒரு மனிதராகத்தான் இருந்தார்கள். இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் ஒரு அழகான தலைமைத்துவத்தை நமக்கு வழிகாட்டித் தந்துவிட்டுத்தான் சென்றிருக்கின்றார்கள்.
ஆனால் முஸ்லிம் தலைமைத்துவங்களின் இன்றைய நிலை நம் நாட்டிலும் சரி சர்வதேசத்திலும் சரி மிக கவலைக்கிடமாகவே உள்ளது. அமெரிக்கா என்ற ஒரு அயோக்கிய வல்லாதிக்கத்திற்கு அடிமைப்பட்ட சர்வதேச முஸ்லிம் தலைமைகளால் இன்று முஸ்லிம்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அதே போன்று நம் நாட்டிலும் இராஜதந்திரம் என்றும், விட்டுக் கொடுப்பு என்றும், புரிந்துணர்வு என்றும் பல்வேறு அடைமொழிகளுடன் முஸ்லிம் தலைமைகள் செல்லாக்காசாகி அரசுக்கு தமது சுய அடையாளங்களை தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதன் இன்றைய உச்ச கட்டம், முன்னெப்போதும் இல்லாத வகையில் கிரிக்கெட் விளையாட்டிற்கும் போயா தினங்களுக்கும் முந்தியடித்துக் கொண்டு ஜம்மியதுல் உலமா அறிக்கை விடுவதென்பது பல்வேறு சந்தேகங்களை உண்டுபண்ணுவதோடு நமது தலைமைத்துவங்களின் அளவுகோல்களையும் தெளிவாகவே காட்டுகின்றன.
ஒரு அன்நிய ஆட்சிக்குட்பட்டு எவ்வாறு நாம் வாழ வேண்டும் என்பதை றசூல் (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித்தந்திருக்கின்றார்கள். ஒரு ஆட்சியாளன் செய்யும் எல்லா அடக்குமுறைகளுக்கும் அடிபணிந்து செல்வதென்பது ஒரு முஸ்லிமுக்கு மட்டுமல்ல சுய மரியாதையுள்ள எவருக்கும் இருக்க முடியாத ஒரு பண்பாகும். அதுவும் இலங்கை போன்றதொரு ஜனநாயக? நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பவற்றினை நமது முஸ்லிம் தலைமைகள் சரியாக பயன்படுத்துமேயானால் நமக்குரிய உரிமைகளையும் சலுகைகளையும் பாதுகாப்பினையும் மிகச் செம்மையாக நெறிப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் இன்றைய அசியல் தலைமைத்துவங்களும்சரி, மார்க்க தலைமைத்துவங்களும்சரி, சம்மேளனங்கள் போன்ற உள்ளுர் தலைமைத்துவங்களும்சரி மக்களின் விருப்பத்தையும் அங்கீகாரத்தையும் புறந்தள்ளிவிட்டு தங்கள் தங்களின் சுயலாபத்திற்காக ஆட்சியாளர்களைத் திருப்பிதிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையினையே தற்போது காண முடிகின்றது.
பள்ளிவாசல்கள் திட்டமிட்டு தகர்க்கப்படுகின்றபோதிலும், முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்குவைத்து அரசாங்கம் காய்நகர்த்துகின்ற போதிலும், முஸ்லிம்களின் நிலங்கள் திட்டமிட்டு பறிமுதல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும், நமது அரசியல் தலைமைத்துவங்கள் ஜெனிவாவிலும் மத்திய கிழக்கிலும் அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க, இலங்கையைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் தங்களை பூர்வீக குடிகள் என்று நிரூபிப்பதற்கும், தங்கள் தனித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கும் இருக்கின்ற ஒரேயொரு அலகு கிழக்கு மாகாணம் மட்டுமே. அரசாங்கம் மிக லாவகமாக காய் நகர்த்தி அரசியல் சதுரங்கத்தில் நமது கைகளைக் கொண்டே நமது கண்களைக் குத்திக்கொண்டிருக்கின்றது. தங்களுக்கு நன்மையைத்தான் இவர்கள் செய்வார்கள் என்ற ஒரு எதிர்பாhப்பிலே மக்கள் இந்த தலைமைகளுக்கு வாக்களித்தார்கள். ஆனால் வாக்களித்த மக்கள் பலருக்கு 'திவிநெகும' என்றால் என்வென்றோ, 13வது திருத்தச் சட்டமூலம் இல்லாதொழிக்கப்பட்டால் எமது சந்ததிகளின் நிலை இந்த நாட்டில் எப்படி இருக்கும் என்றோ அது சிறுபாண்மைகளுக்கு எவ்வளவு தூரம் பாதிப்பினை ஏற்படுத்தும் என்றோ அவர்களுக்கு தெரியாது. ஆனால் மக்களின் வாக்ககளை ஏப்பம் விட்டுவிட்டு கதிரைகளை சூடாக்கி கொண்டிருக்கும் சுரணையற்ற நமது அரசியல் தலைமைகளுக்கு அதன் பாதிப்பு பற்றியும் , பாரதூரம் பற்றியும் நன்கு தெரியும்.
சுருக்கமாக சொல்லப்போனால் விடுதலைப்புலிகள் 30 வருடங்கள் ஆயுதப்போராட்டம் நடாத்திய போதிலும் அவர்களின் மதத்தலங்கள் மீது ஆட்சியாளர்கள் கை வைக்க துணியவில்லை. கைவைத்தால் அதன் எதிரொலி எப்படியிருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்
முழுக்க முழுக்க அரசியல் ரீதியான தீர்வுகளையே நம்பியிருக்கும் முஸ்லிம்களுக்கு மத ரீதியான தாக்குதல்கள் ஏன் அதிகரிக்கினறது என்று ஆராய்வோமானால் எலும்புத்துண்டுகளுக்கு வாலாட்டும் நமது தலைமைகளின் கையாலாகாத தனத்தினாலும் எப்போதும் ஏமாளியாகவிருக்கும் சலுகைகளை மாத்திரம் நம்பிய சமூகமான எமது முஸ்லிம்களின் பின்யோசனையற்ற சிந்தனையும்தான் காரணமாகும்.
'ஒரு முஸ்லிம் ஒரே பொந்துக்குள் இரண்டு முறை தீண்டப்பட மாட்டான்' என்பது நாம் எக்காலத்திலும் பின்பற்ற வேண்டிய நமது தலைவர் நபி (ஸல்) அவர்கள் கூறிய பொன் மொழியாகும். தேர்தல் என்று வரும்போது இந்த பொன்மொழியை நாங்க்ள் உதாசீனம் செய்து கொண்டேயிருக்கிறோம். அதனால் துன்பத்தின் மேல் துன்பம் துயரத்தின்மேல் துயரம் நம்மை வாட்டியெடுக்கின்றது.
முஸ்லிம் அரசியல் தலைமை என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையானது ஆளுமையற்றது என்பதற்கும் அதற்கு வழங்கப்பட்டிருக்கின்ற பதவிகள் வெறும் பெயரளவில் உள்ள ஒன்றுதான் என்பதற்கும் பின்வரும் செய்தி மிகப் பெரிய ஆதாரமாகும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி சுடர் ஒளி பத்திரிகையில் 2 பக்க நேர்காணல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அந்த நேர்காணலில் கிழக்கில் ஜிஹாத் இயக்கம் இயங்குவதாகவும் அதற்கு மத்திய கிழக்கில் இருந்து பணம்வருவதாகவும் அந்த ஜிஹாத் அமைப்பிற்கும் அமைச்சர் றஊப் ஹக்கீமிற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாகவும் ரங்கிரி விகாரை தலைவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் இந்த நாட்டின் நீதி அமைச்சருக்கும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்திய சமுகத்திற்கும் எதிராக வைக்கப்பட்டுள்ள ஒரு பாரிய குற்றச்சாட்டு இது. இக்குற்றச்சாட்டை மற்றைய ஒருவர்மீது அல்லது வேறு எந்தவொரு சமுகத்தின் மீது வைத்திருந்தாலும் சர்வதேச நீதிமன்றங்கள் வரை அந்த வழக்கு நீண்ட தொடர்கதையாகி பழிபோட்டவர் ஏன் இப்படியொரு அபாண்டத்தை சொன்னோம் என்று தவிக்கும் அளவிற்கு நிலமை மோசமாயிருக்கும். ஆனால் முஸ்லிம் தலைமைகளின் கையாவலாகாத தனத்தையும் முஸ்லிம் சமுகத்தின் பலவீனம் என்னவென்பதையும் நன்கு தெரிந்து வைத்திருக்கின்ற தீய சக்திகள் இப்படியான விஷமங்களைச் செய்வது வாடிக்கையாகிவிட்டது.
ஒரு நாட்டின் நீதி அமைச்சராகவிருந்து கொண்டு இந்த கூற்றுக்கு எந்தவொரு பதில் நடவக்கையையும் எடுக்காத அல்லது எடுக்க முடியாத நிலையில்தான் இவர்களின் பதவிகள் வரையறுக்கப்ட்டிருக்கின்றன என்பதை வாக்களிக்கின்ற மக்கள் நன்கு புரிந்த கொள்ள வேண்டும். அதே நேரம் பொத்தாம் பொதுவாக எங்கள் தலைமைத்துவமும் பௌத்த தீவிரவாதம் என்று ஒரு மேடையில் உளறியது. ஆனால் அது ஒரு வரலாற்றுத் தவறுபோல் உணர்ந்த எங்கள் தலைமை பகிரங்க மன்னிப்பும் கேட்டு அதனை பெருமையாக பேசியும் திரிந்தது.
நமக்கு வழிகாட்டியாக வந்த நபி (ஸல்) அவர்கள் இவர்களையெல்லாம்விட மிகப்பெரும் கொடுங்கோலர்களின் முன்னால் எப்படிப்பட்ட அரசியல் சாணக்கிமாக நடந்து சமுகத்தை தன்நிலை பிறளாமல் வழி நடாத்திச் சென்றார்கள் என்பதை நமது தலைவர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் முடியாத விடயங்களை அடுத்தவர்களிடம் விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்வதுதான் ஒரு சிறந்த பண்பாகவும் இருக்க முடியும்.
எனவே நமது தலைமைகள் இனியும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவர்களை பாராளுமன்றம் அனுப்பும் மக்கள் இனிமேலும் ஆப்பிழுத்த குரங்குகளாகிவிடக் கூடாது என்றும் வினயமாக கேட்டுக் கொள்கின்றேன்.
உங்கள் கருத்தும் ஆவேசமும் நியாயமானதுதான்.அனால் இறுதியாக முஸ்லிம் காங்கிரசை மட்டும் குற்றவாளிகூண்டில் நிறுத்துவது நியாயமானது அல்ல.மற்ற முஸ்லிம் அரசியல் வாதிகளை காப்பாற்றநினைப்பது தவறு.முஸ்லிம்களின் பிரச்சினை முகா விற்கு மட்டும் பொறுப்பானது அல்ல
ReplyDelete