Header Ads



பெண்களை வன்புணர்வு செய்யும் கயவர்களுக்கு ஆண்மைச் சிதைப்பு செய்யும்படி வலியுறுத்து


இந்தியா - டெல்லியில் மருத்துவ மாணவி ஒரு கும்பலால் வன்புணர்வு செய்யப்பட்டு தாக்குதலுக்கும் ஆளான சம்பவம் நாடெங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வன்புணர்வில் ஈடுபடும் கயவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும்படி தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவி மம்தா ஷர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.

"பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும்" என்று கூறிய மம்தா "கயவர்கள் காலமெல்லாம் தாமிழைத்த குற்றங்களை நினைத்து நினைத்து கண்ணீர் வடிக்கும் வகையில் ஆண்மைச் சிதைப்பு செய்ய வேண்டும்"  என்று யோசனை தெரிவித்தார்.

"வெறுமே பேச்சளவில் அவ்வப்போது தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு மெளனித்து விடாமல், உடனடியாக இதை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்ற மம்தா "குற்றங்களுக்கு கடுமையான தண்டனையை தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்து வந்துள்ளது" என்று தெரிவித்தார்.


டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓடும் பஸ்சில் பிசியோதெரபி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அவருக்கு சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியை பலாத்காரம் செய்த கும்பல் அவரை மிருகத்தனமாக தாக்கியுள்ளது. இதில் அவரது வயிறு மற்றும் சிறுகுடல் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது சிறுகுடலில் நோய் தொற்று பரவிய காரணத்தால் இதுவரை 5 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட குடல் பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. தற்போது அவருக்கு 5 சதவீத சிறுகுடல் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், இதனால் அவர் இனிமேல் எவ்வித ஆகாரமும் சாப்பிட முடியாது எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மாணவிக்கு நேற்று சிறிது நேரம் நினைவு திரும்பியது. அப்போது, தாய் மற்றும் சகோதரனை பார்த்து கண்ணீர் விட்டார். ‘எனக்கு வாழ ஆசையாக இருக்கிறது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்‘ என்று எழுதி காட்டினார். மருத்துவ சிகிச்சைக்கு உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. உத்தரகண்ட் முதல்வர் ரூ. 5 லட்சம் உதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். மருத்துவ செலவை டெல்லி அரசு ஏற்றுக் கொள்ளும் என முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் ஜெயாபச்சனும் மாணவிக்கு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் உ.பி.மாநிலத்தை சேர்ந்தவர் என்ற வகையில் முதல்வர் அகிலேஷ் யாதவும் நிதி உதவி அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.


No comments

Powered by Blogger.