Header Ads



தமிழகத்தில் புலிகளின் முக்கிய செயற்பாட்டாளர் கைது


(Sfm)

தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரையும், மேலும் மூன்று உறுப்பினர்களையும் கைது செய்துள்ளதாக, தமிழகத்தின் விசாரணைப் பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தினரால் வழங்கப்பட்ட தகவல் ஒன்றின் அடிப்படையில் அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்லாவரத்துக்கு அருகில், பம்மல் - நல்லத்தம்பி தெருவில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கைது செய்யப்பட்ட இரண்டு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களால், தமிழத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டி எழுப்பும் செயற்பாடு தொடர்பிலான தகவல்கள் இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்அடிப்படையில் குறித்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக விசாரணைப் பிரிவு காவற்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். அவர்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய செயற்பட்டாளர் ஒருவர் எனவும், மற்றைய மூன்று பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஒருங்கமைப்பதற்கான திட்டங்களுடன் செயற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கைதானவர்கள் சுரேஷ்குமார், உதயாஸ் டோஸ், மகேஸ்வரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்று தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களில் சுரேஷ் குமார் என்பவர், இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் தமது ஒருகாலை இழந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவல்களின்படி, தமிழகத்தில் கைதான நான்கு பேரும் இலங்கையில் புதிய இளைஞர் படையை உருவாக்கும் திட்டத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
அத்துடன் இலங்கையின் பலபகுதிகளில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

No comments

Powered by Blogger.