Header Ads



எந்த தகப்பனும் இப்படி ஒரு கொலையைச் செய்யமாட்டான்..!


இரத்மலானை கந்தமுல்ல வீதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றில் தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், தனது காதலியான மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்யும் நோக்கத்திலேயே இந்தக் கொடூரக் கொலையை செய்துள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தகவல் தொழில்நுட்பப் பாடநெறியொன்றைக் கற்கிறார், நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீது கடந்த ஒரு மாத காலமாகக் காதல்வயப்பட்டிருந்தார். 

அவரைத் திருமணம் செய்யும் நோக்கில் இக்கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.

"மனைவியை விவாகரத்துச் செய்துவிட்டுக் காதலியைத் திருமணம் செய்திருக்கலாமே என்று கேட்டதற்கு, மனைவியை விவாகரத்துச் செய்தால் தனது நண்பர்களிடமிருந்தும், உறவினர்களிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பும் என்பதால் விவாகரத்தை நாடவில்லை என்று சந்தேக நபர் கூறினார்'' எனவும் பொலிஸார் கூறுகின்றனர்.

தனது மனைவியுடனும் பிள்ளைகளுடனும் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வதாக உறவினர்களுக்குக் காட்டிக் கொண்டு மிகவும் சூட்சுமமான முறையில் இக்கொலைகளை சந்தேகநபர் செய்துள்ளார் எனப் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் தனது சாட்சியத்தில் தெரிவித்தவை என்று பொலிஸார் கூறியதாவது:

மனைவி நித்திரையிலிருந்த அறைக்குச் சென்று அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தார் சந்தேகநபர். அப்போது மனைவி கத்தியுள்ளார். இந்தச் சத்தத்தைக் கேட்ட மூன்று வயது மகன் பாட்டி.. பாட்டி... என்று சத்தமிட்டவாறு அறையிலிருந்து ஓட முயற்சியுத்துள்ளார். 

அவரையும் பிடித்துக் கட்டிலில் போட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் சந்தேகநபர். கட்டிலில் நித்திரையிலிருந்த ஒரு மாத வயதுப் பாலகனை மனைவியின் மார்பு அருகே பால் குடிப்பது போல் படுக்க வைத்துள்ளார். ஒரு தாயிடம் குழந்தை பால் குடிக்கும்போது எந்தக் தகப்பனும் இப்படி ஒரு கொலையைச் செய்யமாட்டான் என்று விசாரணையைத் திசை திருப்புவதற்காகவே இவ்வாறு செய்துள்ளார். 

குழந்தையை மனைவியின் மார்போடு சேர்க்கும்போதே அவர் இறந்திருந்தார். கட்டிலைச் சுற்றி நுளம்பு வலையை விரித்து அதற்குத் தீ வைத்துள்ளார், அதற்குமுன் மெழுகுதிரி ஒன்றையும் தீப்பெட்டியையும் கட்டிலிற்கு அருகில் வைத்துள்ளார். 

மெழுகுதிரியைப் பற்றவைக்க முயற்சிக்கையில் தீப்பற்றிக் கொண்டதாக மற்றவர்களை நம்பவைக்கவே இவ்வாறு செய்துள்ளார்  என்றனர். இக்கொலையில் சந்தேகநபரின் தாயோ வேலைக்காரியோ சம்பந்தப்படவில்லை எனப் பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

கொலையான பெண்ணும் சந்தேகநபரும் பல வருடங்களாகக் காதலித்தபின் 2003ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார்கள். இக்கொலை சம்பந்தமாக கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.

1 comment:

  1. Human animal work this.Justice should hang him publicly!

    ReplyDelete

Powered by Blogger.