Header Ads



இஸ்ரேலுக்கு குடியமர சென்றிருக்கும் பழங்குடிகள் - நம்பமறுக்கும் யூதர்கள்



(Bbc) இஸ்ரேலில் இருந்து அழிந்து போனதாகக் கூறப்படுகின்ற ஒரு பழங்குடியினத்தின் பிரதிநிதிகள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் இந்திய சமூகம் ஒன்றைச் சேர்ந்த 50 பேர் இன்று தமது பாரம்பரிய தாயகமான இஸ்ரேலுக்கு திரும்பிச் சென்றடைந்திருக்கிறார்கள். 

விவிலியத்தில் கூறப்படுகின்ற ஒரு புராதன காலகட்டத்தில் இஸ்ரேலில் இருந்ததாகக் கூறப்படும் பினாய் மெனெசா என்னும் இந்த சமூகத்தினர் குகி- சின் மிஷோ என்னும் யூத பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தாம் என்று நம்புகிறார்கள். இப்படியாக அந்தக் காலகட்டத்தில் அங்கு 10 பழங்குடியினங்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

விவிலியத்தில் கூறப்பட்டிருப்பதன்படி, கிமு 721 ஆம் ஆண்டில் அசிரியர்களின் ஆக்கிரமிப்பின் போது இவர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டார்கள் என்று கருதப்படுகிறது. தற்போது இஸ்ரேலின் அனுமதிபெற்று இந்த 50 பேரும் அங்கு சென்று சேர்ந்திருக்கிறார்கள்.

இந்த சமூகத்தைச் சேர்ந்த சுமார் 7200 பேர் தற்போது இந்தியாவில், பர்மிய எல்லையின் ஓரமாக மிஷோராம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் வாழ்கிறார்கள். இவர்களும் படிப்படியாக தமது தாயகம் சென்று சேர்வார்கள்.  இஸ்ரேல் சென்று சேர்ந்தவர்களை வரவேற்க அவர்களது உறவினர்கள் அங்கு வந்திருந்தார்கள்.

அவர்களில் ஒருவர் நச்சூன் கன்ரி. 47 வயதான அவர் 12 வருடங்களுக்குப் பின்னர் தனது சகோதரியை அங்கு சந்தித்தார். இந்த சமூகத்தின் சுமார் 1700 பேர் ஏற்கனவே இஸ்ரேலில் வாழ்கிறார்கள்.

தமது உறவினர்களைக் கண்டபோது அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை தம்மைப்பற்றிய வாய் வழி சரிதத்தை இவர்கள் முழுமையாக நம்புகிறார்கள். தமது தாயகத்தில் இருந்து துரத்தப்பட்ட இவர்கள் பாரசீகம், ஆப்கானிஸ்தான், திபெத் மற்றும் சீனா என்று பல நாடுகளை கடந்து இந்தியாவுக்கு வந்ததாக அவர்கள் நம்புகிறார்கள்.

19 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மிஷனரிகள் இவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றிவிட்டனர். அதன்மூலம் பைபிளை படித்தபோதுதான் தாம் தமது வரலாற்றை அறிந்துகொண்டதாக அவர்கள் கூறுகிறார்கள். தாம் யூத பரம்பரையினர் என்பதை அது தமக்கு உணர்த்தியதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள். கிறிஸ்தவர்களாக இருந்த போதிலும் சுன்னத்து பண்ணுதல் போன்ற யூதர்களின் பாரம்பரிய சடங்குகளை இவர்கள் பின்பற்றியே வந்திருக்கிறார்கள்.

இவ்வளவு ஆர்வமாக இவர்கள் இஸ்ரேலுக்கு போனாலும், இவர்கள் யூதர்கள் என்பதை அனைத்து இஸ்ரேலியர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று கூறிவிடமுடியாது.

யூத மதத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை என்றும் இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் மேற்குக்கரையில் தமது இருப்பை பலப்படுத்த இவர்களை பயன்படுத்துகிறார்கள் என்றும் முன்னாள் உள்துறை அமைச்சரான அவ்ரகம் போரஸ் கூறுகிறார்.

இந்தியாவில் வறுமை காரணமாக இவர்கள் இஸ்ரேல் வருவதாக பலர் நம்புகிறார்கள்.

இவர்களை அழிந்துபோன யூத பழங்குடியின் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கும் தலைமை மதகுருவான ரப்பை சொலோமோ அமர் அவர்கள் கூட பூரணமான மதமாற்றத்தின் பின்னரே இவர்கள் யூதர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறார்.

இதற்காக ரப்பைகளின் குழு ஒன்றை அவர் ஏற்கனவே இந்தியாவுக்கு அனுப்பியிருந்தார். ஆனால் பின்னர் அதனை இந்திய அரசாங்கம் அதனை தடுத்துவிட்டது.

No comments

Powered by Blogger.