நுரைச்சோலை வீட்டுத்திட்ட விவகாரம் - 'சும்மா கிடந்த சங்கும், ஊதிக் கெடுத்த ஆண்டியும்'
(தம்பி)
ஒரு முட்டாள் செய்த பிழையினை சிலவேளைகளில் ஆயிரம் அறிவாளிகள் ஒன்று கூடியும் சரி செய்ய முடியாது என்பார்கள். விலை மதிக்க முடியாத ஒரு மாணிக்கக்கல் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கல்லின் பெறுமானம் தெரியாமல் அதை ஒரு முட்டாள் கடலுக்குள் வீசி விடுகின்றான். இப்போது, அந்தக் கல்லினைத் தேடியெடுப்பதற்காக ஆயிரம் அறிவாளிகள் கடலுக்குள் இறங்குகிறார்கள். கல் கிடைத்து விடுமா என்ன? இதைத்தான் மேலுள்ள வரி சுருக்கமாகச் சொல்கிறது.
கடந்த புதன்கிழமை - சுனாமி எனும் கோரம் நிகழ்ந்து 08 வருடங்கள் நிறைவு பெற்ற தினம். அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்னால், வீதியினை மறித்து - ஓர் ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் சுனாமியால் தமது வீடுகளை இழந்த முஸ்லிம் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமக்காக நுரைச்சோலைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வீடுகளை உடனடியாக வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினார்கள். கடந்த பல வருடங்களாக இந்த மக்கள் குந்தியிருக்க ஒரு சொந்த வீடற்று அலைந்து திரிகின்றார்கள். அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் கேட்டால், இன்று தருகிறோம் நாளை தருகிறோம் என்று அலைக்கழித்துக் கொண்டேயிருக்கின்றார்கள். ஆற்றாமையும், கோபமும் குமுறி வெடித்த போது – பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தார்கள்.
அந்த ஆர்ப்பாட்டம் வெறும் செய்தியல்ல. அந்த மக்களுடைய இயலாமையின் வலியாகும். கடந்த 08 வருடங்களாக சொந்த வீடற்று அலைந்து திரியும் அந்த மக்களின் வாழ்க்கையை - வாழ்ந்து பார்த்தால் மட்டுமே - அவர்களின் அவலங்களையும் அதன் வழியாக வெளிப்படுகின்ற கோபங்களையும் புரிந்து கொள்ள முடியும்!
அம்பாறை மாவட்டம் நுரைச்சோலை பகுதியில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு வீட்டுத் திட்டம் உள்ளது பற்றி நீங்கள் அறிவீர்கள். அது 500 வீடுகளுடன் கூடிய ஒரு குட்டி நகரம். அந்த வீட்டுத் திட்டத்தில் வைத்தியசாலை, பாடசாலை, சந்தை என்று கிட்டத்தட்ட அத்தனையும் இருக்கின்றன.
சஊதி அரேபியாவின் 'சஊதி நன்கொடை நிதியம்' 552 மில்லியன் ரூபாயினை இந்த வீட்டுத் திட்டத்துக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது. சுனாமியினால் வீடுகளை இழந்தவர்களுக்காகவே இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. நுரைச்சோலை வீட்டுத் திட்டத்துக்கான ஒப்பந்தம் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தினை நிர்மாணிக்கும் பொறுப்பு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் வந்தது. அப்போது அந்த அமைச்சுப் பதவியினை திருமதி பேரியல் அஷ்ரப் வகித்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு, நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டது. ஆயினும், வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. அதனை வழங்குவதில் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் உருவாகின. இதனால், அந்த வீடுகள் இப்போது பராமரிப்பின்றி, பாழடைந்து காடு பிடித்துக் கிடக்கின்றன.
என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? அதற்குப் பின்னால் அருவருப்பான ஓர் அரசியல் கதை இருக்கிறது! அதைச் சொல்வதற்கு முன்னர் சில புள்ளி விபரங்களை உங்களுக்குக் கூற வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் 2784 முஸ்லிம் குடும்பங்கள் சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்தன. ஆனால், இதுவரை 2278 வீடுகளே நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் சிங்கள சகோதரர்கள் - இழந்த வீடுகளை விடவும் அதிகமான தொகையினை பெற்றுள்ளார்கள்.
எனவே, நியாய - தர்மத்தின் அடிப்படையில் பார்த்தால், நுரைச்சோலை வீடுகள் சுனாமியினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டிவையாகும். ஆனால், இதில்தான் இடி விழுந்திருக்கின்றது.
நுரைச்சோலை வீடுகளை முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கும் திட்டத்தினை ஆட்சேபித்து ஜாதிக ஹெல உறுமய கட்சி - மீயுயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்தது. அதற்குரிய தீர்ப்பு 01 ஜுன் 2009 அன்று வழங்கப்பட்டது. நுரைச்சோலை வீடுகளை தனி இனமொன்றைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கக் கூடாது என்றும், அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்கி மேற்படி வீடுகளை நீதியாகப் பகிர்ந்தளிக்குமாறும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான நீதிபதிகள் அந்தத் தீர்ப்பினை வழங்கியிருந்தனர். ஆனால், அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் கூட, பயனாளிகளுக்கு வீடுகள் இன்றுவரை வழங்கப்படவில்லை என்பதுதான் கவலைதரும் விடயமாகும்.
இது நீங்கள் அறிந்த கதைதான்!
ஆனால், இவையெல்லாம் ஏன் நடந்தது என்றும், இவற்றுக்குக் பின்னாலிருந்த அருவருக்கத்தக்க அரசியல் பற்றியும் உங்களில் எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள்?
அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒரு பகுதிதான் நுரைச்சோலை. அமைச்சர் அதாஉல்லா – அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அதனால், அவருடைய பிரதேசத்துக்குள் நடக்கும் எல்லாமே அவரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்க வேண்டும் என்கிற ஆசை – அதாஉல்லாவுக்கு எப்போதும் உண்டு.
ஆனால், நுரைச்சோலை வீட்டுத் திட்டம் ஆரம்பித்த போது, அதாஉல்லாவின் அந்த ஆசையில் ஏகத்துக்கு மண் விழுந்தது. அப்போது, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த பேரியல் அஷ்ரப்பின் தலைமையில் நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தின் ஆரம்ப வைபவம் நடக்கவிருந்தது. அந்த நிகழ்வுக்கு அதாஉல்லா அழைக்கப்படவில்லை. அது அவருக்குக் கடும் கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. தவிரவும், இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் அதனூடாகக் கிடைக்கும் அரசியல் ஆதாயம் - பேரியல் அஷ்ரப்பையே போய்ச் சேரும் என்பதையும் அதாஉல்லா அறிந்திருந்தார். ஆக, இவற்றினையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, அதாஉல்லா செய்த சூழ்சிதான் நுரைச்சோலை விவகாரம் - இந்தளவு பூதாகரமாகக் காரணமாயிற்று என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரொருவர்!
அதாஉல்லா அப்படி என்னதான் செய்தார்?
அப்போது கீர்த்தி ரணசிங்க எனும் சிங்களவரொருவர் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினராக இருந்தார். தீகவாபியைச் சேர்ந்த இவர் - ஆளும் ஐ.ம.சு.முன்னணி சார்பில் தெரிவாகியிருந்தார். இவருக்கும் அமைச்சர் அதாஉல்லாவுக்கும் அப்போது நல்ல உறவு இருந்தது. எனவே, நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரத்தில் தனது காய்களை கீர்தியினூடாக அதாஉல்லா நகர்த்தினார்.
நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தினம். அமைச்சர் பேரியல் அஷ்ரப் மற்றும் சஊதி அரேபிய பிரதிநிதிகள் வருகை தருவதாக இருந்தனர். இந்த நிலையில், தீகவாபியிலிருந்து பெருந்திரளான மக்களை பஸ்களில் அழைத்துக் கொண்டு, கீர்த்தி - நுரைச்சோலைக்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த சோடனைகள், வரவேற்புப் பதாகைளையெல்லாம் கீர்த்தி தலைமையில் சென்றவர்கள் உடைத்தெறிந்தார்கள். சஊதி அரேபியாவின் தேசியக் கொடியினைக் கொழுத்தினார்கள். அட்டகாசம் புரிந்தார்கள். போதாக்குறைக்கு நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தினால் தீகவாபி புனித பூமிக்கு களங்கம் ஏற்படப் போவதாக கீர்த்தி தலைமையில் வந்தோர் கோசம் எழுப்பினார்கள். நுரைச்சோலையில் முஸ்லிம்கள் குடியேறினால் - தீகவாபியிலுள்ள சிங்கள மக்களின் இன விகிதாசாரத்தில் பாதிப்புகள் ஏற்படுமென்று கூறினார்கள்.
கீர்த்தி செய்த இந்தக் கூத்துக்கள் அனைத்தும் அமைச்சர் அதாஉல்லாவின் ஆசீர்வாதத்துடன் நிகழ்ந்தவை என்பது அப்போது கூறப்பட்ட குற்றச்சாட்டாகும். ஆனால், அதை அதாஉல்லா மறுத்தார்.
எவ்வாறிருப்பினும், திட்டமிட்டபடி – நுரைச்சோலை வீட்டுத் திட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு அன்றைய தினம் நடந்து முடிந்தது.
உண்மையில் கீர்த்தி முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் மிகவும் பிழையானவை. தீகவாபி என்பது அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட ஒரு பகுதியாகும். நுரைச்சோலை – அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குள் அமைந்துள்ளது. நுரைச்சோலை வீட்டுத் திட்டத்துக்கும் தீகவாபிக்கும் இடையில் சுமார் 14 கிலோமீற்றர் தூரமுள்ளது. மட்டுமல்லாமல், தீகவாபிக்கும் நுரைச்சோலைக்கும் நிருவாக ரீதியாகவும் எந்த விதத் தொடர்பும் இல்லை. இவ்வாறானதொரு நிலையில்தான், கீர்த்தி குழுவினர் அந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்கள்.
இப்படித்தான் அந்தக் கதை ஆரம்பித்தது. எலி அறுக்கும் தூக்காது என்பார்கள். இப்போது, நுரைச்சோலை வீட்டுத்திட்ட விவகாரம் தேசியளவில் பேசப்படும் ஒரு பிரச்சினையாக மாறிப் போயுள்ளது. சும்மா கிடந்த சங்கினை நமது அரசியல்வாதிகள் தேவையில்லாமல் ஊதிக் கெடுத்துள்ளார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நுரைச்சோலை வீட்டுத் திட்டம் சுனாமியினால் வீடுகளை இழந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டது. அதை இப்போது, எல்லா சமூகத்தவர்களுக்கும் பகிர்ந்தளிக்குமாறு மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அம்பாறை மாவட்டத்தில் சுனாமியினால் 12 சிங்கள குடும்பங்கள்தான் வீடுகளை இழந்தன. ஆனால், 102 வீடுகளை அவர்கள் பெற்றுள்ளார்கள். தமிழ் சகோதரர்களும் இழப்புக்கு அதிகமான வீடுகளைப் பெற்றுள்ளார்கள். இந்த நிலையில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நுரைச்சோலை வீடுகளைப் பகிர்தளிக்கும் போது, சுனாமியின் சுவடே தெரியாத பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற சிங்களவர்களும் பயனடைவார்கள் என்பதுதான் இங்கு உறுத்தலான விடயமாகும்.
சரி, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வீடுகளை வழங்குங்கள் என்றால், அதுவும் நடப்பது போல் தெரியவில்லை. நியாயமாகப் பார்த்தால், இந்த விடயத்தில் அமைச்சர் அதாஉல்லாதான் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும். காரணம், இது, அவர் ஆரம்பித்து வைத்த பிரச்சினை. அவருடைய பிரதேச மக்களின் பிரச்சினை. ஆனால், அமைச்சர் அதாஉல்லா நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரத்தில் மௌனியாகவே இருந்து வருகின்றார்.
அவர் அப்படி மௌனியாக இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சிங்கள மக்களின் மனம் கோணும் வகையில் அமைச்சர் அதாஉல்லா ஒருபோதும் செயற்பட மாட்டார். அக்கரைப்பற்றில் நுரைச்சோலை வீடுகளுக்காக போராடி வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 300 என்று வைத்துக் கொள்வோம். இவர்களில் அதாஉல்லாவுக்கு ஆதரவானவர்கள் எத்தனை பேர் என்று தெரியாது. என்றாலும் 100 பேர் என்று கொள்ளலாம்.
ஆனால், அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் அதாஉல்லாவுக்கு 6000 ஆயிரம் சிங்கள வாக்குகள் உள்ளன. அமைச்சர் அதாஉல்லாவின் வலது கையான கிழக்கு அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கடந்த கிழக்குத் தேர்தலில் பெற்றுக் கொண்ட - சிங்கள வாக்குகள் மேற்படி தொகையினை உறுதி செய்யும்படியானவை!
எனவே, நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரத்தில், அக்கரைப்பற்றிலுள்ள தனக்கு ஆதரவான 100 முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்கப் போய், அம்பாறை மாவட்டத்தில் தனக்குள்ள 6 ஆயிரம் சிங்கள வாக்குகளையும் இழப்பதற்கு அமைச்சர் அதாஉல்லா துணியவே மாட்டார் என்கிறார் அம்பாறை மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியொருவர்!
சரி, அதாஉல்லாவை விட்டு விடுவோம். அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என்னாயிற்று? முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எங்கே போனார்??
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சில தனி மனிதர்கள் காட்டிவரும் அக்கறையைக்கூட, நுரைச்சோலை வீட்டுத் திட்ட விவகாரத்தில் நமது முஸ்லிம் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் வெளிப்படுத்தவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
இனியாவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுரைச்சோலை வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நம்முடைய பிரதிநிதிகள் ஓர்மத்தோடு உழைக்க வேண்டும் என்பது நமது அவாவாகும்.
ஒரு முட்டாள் செய்த பிழையினை சிலவேளைகளில் ஆயிரம் அறிவாளிகள் ஒன்று கூடியும் சரி செய்ய முடியாது என்று ஆரம்ப பந்தியில் கூறியது உண்மைதான். மிக நன்றாக கவனியுங்கள்... சரி செய்யவே முடியாது என்று நாம் கூறவில்லை!
இவ்வளவு அநியாயம் செய்த அரசியல் வாதி யார் என்று அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான் இன்ஷாஅல்லாஹ் இறைவன் நிச்சயம் தண்டனை வழங்குவான் .
ReplyDeleteஇவ்வளவு அநியாயம் செய்த அரசியல் வாதி யார் என்று அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான் இன்ஷாஅல்லாஹ் இறைவன் நிச்சயம் தண்டனை வழங்குவான் .
ReplyDeleteநுரைச்சோலை வீட்டுத் திட்டத்தில் மக்களுக்கு அநியாயம் செய்து சுயலாபம் இலாபம் அடைந்த அரசியல்வாதிகளை அல்லாஹ் நன்கு அறிவான்.
ReplyDeleteஅவர்களுக்கு தண்டனையும் கொடுப்பான்.
பொது மக்களாகிய நாமும் நமது வாக்குகளை அவர்களுக்கு அளிக்காமல் தண்டனை வழங்குவோம்.
அக்கரைப்பற்றில் உள்ள (மாகாண சபை உறுப்பினர்) Mr. தவம் நீங்களாவது பாதிக்கபட்ட மக்களுக்கு ஆதரவு வழங்குவீர்களா???
அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவனாக.!
ஆதாரம் இல்லாமல் அனுமானத்தின்படி பழி சுமத்துவதும் இழிந்துறைப்பதும் இஸ்லாதின் எந்தவகையை சார்ந்தது??? இந்தகட்டுரை எழுதியவருக்கும் இஸ்லாமிய நட்குணங்களுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமா???
ReplyDeleteஆதாரமில்லாமல் அனுமானத்தின் படி இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக நீங்கள் எப்படி அனுமானிக்க முடியும். இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லும் உண்மையானது, நடந்தது. விமர்சனங்களைத் தாங்க முடியாது விட்டால், உங்களை காத்துக் கொள்வதற்கான கருவியாக இஸ்லாத்தைப் பயன்படுத்தாதீர்கள்!
ReplyDeleteஉங்களைப் போன்ற வக்காலத்து வாங்குபவர்களால்தான், இந்த அரசியல்வாதிகள் இப்படிக் கெட்டுப் போய்க்கிடக்கிறார்கள். தட்டிக் கேட்கும் ஊடகவியலாளர்களையாவது மட்டம் தட்டாமல், லூசுத்தனமான கருத்துக்களைப் பதியாமல் கிடங்கள் ஐயா!
சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாறன் ஒருவனே!..
ReplyDeleteஒரு நாளைக்கு சலார் எங்கும்
இன்னும் கொஞ்சம் மேலே சொல்லப்போனால் அம்பாறையிலுள்ள சிங்களக் காடையர்களுக்கு சாராயமும் பௌத்த பிக்குகளுக்கு பெருன்தொகைக் காசும் கொடுத்துத்தான் ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள் என்பதையும் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் சகோதரர் FASHLIN MOHAMMED அவர்களே !
ReplyDeleteகண்கேட்டு ஊத்துன்டுதான் போகும் இவனுகளுக்கு....
ReplyDelete