Header Ads



நாட்டில் நடைபெறும் அதிகாரமிக்க நடவடிக்கைகள் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடுமா..?



(பொதுவூரான்)

நமது நாட்டில் அண்மைக்காலமாக நடைபெற்றுவருகின்ற பல விடயங்கள் மக்கள் அனைவரையும் பலவாறு சிந்திக்கவைத்துள்ளன. மாகாண மட்டத்தில் கொண்டுவரப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட திவிநெகும சட்டம் தேசிய அரசபேரவையான பாராளுமன்றில் கொண்டுவரப்பட முடியாது திண்டாடிய வேளையில் நீதித்துறையும் அதற்கு எதிரான கருத்துக்களை அள்ளிவீச எழுந்த பிரச்சினைகள் கொஞ்ச நஞ்மல்ல. இறுதியில் தலைமை நீதிபதியின் பதவிக்கும் அரசியல் தலைமைப் பீடங்களுக்கும் இடையில் அதிகாரப் போட்டி. ஒருகால கட்டத்தில் இந்த அதிகாரத்திற்கும் அன்றைய இராணுவத்தலைமைக்கும் எழுந்த போராட்டத்தில் இராணுவத்தலைமை சிறைச்சாலை சென்றதும் ஞாபகமிருக்கலாம். இன்றும் அவ்வாறானதொரு அதிகாரத் தொனி மேலோங்கினால் நீதிக்குள் நீதி அடைக்கப்பட்டுவிடுமா? அல்லது அடக்கப்பட்டுவிடுமா? என்பதைக் காலம்தான் பதில் கூறவேண்டும்.

இதற்கிடையில் வெள்ளைக் கொடி விவகாரம், இறுதிக் கட்ட யுத்தம் போன்றவற்றில் லட்சக்கணக்கான உயிர்களையும், உடமைகளையும் காப்பாற்றுவதிலிருந்து ஐநா. சபையும், அதன் உரித்துடைய அதிகாரிகளும் அவர்களுக்குள்ள அதிகாரங்களையும் பொத்திவைத்துக் கொண்டு மயக்கமாக இருந்ததை ஒப்புக் கொண்டுள்ள நிலையில் உலக மக்கள் எவற்றில் எல்லாம் நம்பிக்கை வைத்திருந்தார்களோ அங்கெல்லாம் அவநம்பிக்கையான கையாடல்கள் நடைபெற்றுள்ளமை நம்பிக்கையை இழக்கும் நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளமை அதிகாரங்கள் கேலிக்கூத்தான ஒரு தோரணைக்குள் அடக்ககப்பட்டுவிடுமா? என்பதையும் சிந்தையில் கொள்ள வேண்டியுள்ளது. 

மக்களால் தெரிவு செய்யப்படும் அதிகாரங்கள் மக்களுக்கான சேவைகளையும், மக்களின் பிரச்சினைகளையும், அவர்களது வாழ்வுமுறைக்கான மேம்பாடுகளையும் ஒழுங்கு முறையில் மேற்கொள்வதற்கான ஒரு சட்டபூர்வமான முறையாகவே காணப்படுகின்றது. ஆனால் அதனைப் பெறுவதற்காக ஒவ்வொரு வீட்டின் வாசற்படிகளிலும், கைலாகு கொடுத்து காக்காப் பிடித்து அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டபின்னர் அதிகாரத்தை வழங்கியவர்களையே திரும்பிப்பார்க்காது அவர்களிடமிருந்து எப்படிக் கறக்க முடியுமே அவற்றையெல்லாம் கறந்து குடித்ததன் பின்னர் ஓட்டாண்டியானதன் பிற்பாடு மீண்டும் அதே வர்க்கம் ஓட்டுக் கேட்டு வருகின்ற ஒரு வித்தியாசமான அதிகாரப் பரம்பல் உருவாக்கப்பட்டுள்ள நமது நாட்டு அரசியலில் இவ்வாறான ஒரு நடைமுறையை மாற்றியமைத்து அதிகாரம் என்பது ஒரு வரையறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய படிப்பினைகளை, அரசியல் அதிகாரங்களை சரியான முறைகளில் பயன்படுத்தக் கூடிய ஒரு பரம்பரையை உருவாக்குவதன் அவசியம் பேசப்பட்டு வரும் இக்கால கட்டங்களில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைபோல அரசியல் அதிகாரத்தினுள் நீதித்துவ அதிகாரம் முடக்கப்பட்டுள்ளதானது மக்கள் நீதித்துறைக்குள் வைத்திருக்கின்ற நம்பிக்கை இழந்துவிடாது பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் மக்களின் ஆணையில்தான் தங்கியுள்ளது.

தத்துவஞானியான ரூஸோ 'அரசியல் சமுதாய அமைப்புக்கள் நல்ல தலைவர்களைக் கெடுத்து விடுகின்றன' என்று கூறுவதுபோல நல்ல தலைவர்களை நமது அரசியல் மற்றும் சமுதாய அமைப்புக்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விட்டொதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இன்றைய யதார்த்தத்தை புரிந்து கொண்டு நமக்குரிய அதிகாரமிக்கவர்களை சரியான முறையில் தெரிவதற்கு நாம் எப்போதும் சித்தமாய் இருக்கவேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் அரசியலமைப்பு பிரதான தளத்தை வகிக்கின்றது. தற்போதைய அரசியல் அமைப்பு நமது நாட்டை பல வருடங்களாக அடிமைப்படுத்திக் கொண்டிருந்த பிரித்தானிய பேரரசின் மிச்ச சொச்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் 1978ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு பல்வேறு திருத்தங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிவோம்.

இலங்கையின் அரசியலமைப்பின் அத்தியாயம் ஒன்றில் உறுப்புரை 3ல் 'இலங்கைக் குடியரசில் சட்டவதிகாரம் அல்லது இறைமை மக்களுக்குரியதாகும். என்பதுடன்  அது மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட முடியாததாகவும் இருக்கும். இறைமை என்பது அரசாங்கத்தின் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை என்பவற்றை உள்ளடக்குவதாகும்' என்று கூறப்பட்டுள்ளது. உறுப்புரை 4 - இ 'மக்களது நீதிமுறை அதிகாரமானது, அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்ட அல்லது அங்கீகரீக்கப்பட்ட அல்லது சட்டத்தினால் உருவாக்கப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்ட நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பிரயோகிக்கப்படுதல் வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளதற்கமைவாக அரசியலமைப்பின் பிரகாரம் நடாத்துகின்ற ஒரு நிலைமைதான் இங்கு காணப்படுகின்றது. தப்புத்தண்டங்கள் நடைபெறுகின்றபோது அங்கே அரசியலமைப்புத்தான் மேன்மை பெறும் என்பதனை அர்த்தமாக்கி கொள்ளலாம்.
அந்தவகையில் உயர்நீதிமன்ற நீதிபதி விவகாரம் தற்போது முன்னிலையில் நிற்கின்ற ஒரு விடயமாகும். இங்கு நீதித்துறை சம்பந்தமாக உறுப்புரை 106இல் கூறப்படுவதுபோல இது நீதிபதி அல்லது தலைமை தாங்கும் அலுவலர் குடும்ப விடயங்கள், பாலியல் சார்ந்த விடயங்கள், தேசிய பாதுகாப்பு மீதான கரிசனை கொண்ட விடயங்கள் தெடர்பான வழக்கு நடவடிக்கைகள் நீதிமன்றம், நியாயசபை அல்லது வேறு நிறுவனத்தின் எல்லைக்குள்ளான ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு என்பன கருதி தங்களது அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் மக்கள் சமூகங்க கொள்வதைத் தடை செய்யலாம். என்று அரசியலமைப்பில் நீதித்துறை சம்பந்தமான அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் உயர்நீதிமன்ற தலைமையாளருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்களால் மக்களுக்கு நீதித்துறையில் நம்பிக்கை ஈனம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இவ்வாறன குற்றச் சாட்டுக்கள் பகிங்ரங்கப்படுத்தப்படுவதைத் தவிர்த்திருக்கலாம் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கூறினர். ஐநா சபையின் நீதித்துறைக்கான அதிகாரிகளும் இதுசம்பந்தமான கடும்போக்கை கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதற்கும் மேலாக அரசியலமைப்பினை, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்தாசையுடன் திருத்தங்கள் செய்வது வழமையான நடைமுறையாகும். அந்த அடிப்படையில் 1987.நவம்பர்19ஆந் திகதி அமுலுக்கு வரும் வகையில் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. அந்த அடிப்படையில் மத்திய அரசின் அதியுயர் அதிகாரம் மற்றும் சட்ட முறையான அதிகாரம் என்பவற்றைக் கைவிடாமல் கணிசமான அதிகாரப் பகிர்வை அல்லது மத்திய அரசாங்கத்திலிருந்து கணிசமான அதிகாரக் கையளிப்பை மாகாண சபைகளுக்கு அளிக்கின்றது. எவ்வாறாயினும் அரசியலமைப்பின் கீழ் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளுக்குமிடையில் உதியுயர் அதிகாரத்தைப் பிரித்தலும் பகிர்ந்தளித்தலும் இருக்காது என்றும் கூறுகின்றது.

இதன்கீழ் அன்று மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. .தற்கான அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான சட்டவாக்கங்கள் உருவாக்கப்பட்டு கடந்த 25ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்ட இம்மாகாண சபைகளை இன்று முடிவுறுத்தும் செயலுக்கு அரசியல் அதிகார மிக்கவர்கள் முன்வைப்பதானது நாட்டின் சிறுபாண்மையினரை நிலைகுள்ளாக்கும் செயலனெக் கூறப்படுகின்றது. அண்மையில்கூட பாராளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி ஆளும் அமைச்சிலுள்ள அமைச்சர்கள் சிலரும் இப் பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்க முடியாது அவ்வாறு நீக்கினால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என்றும், நாடு பிளவுக்கு இது வழிவகுக்கும் என்றும்; கூறினர். இன்று நாட்டின் தேசியப் பிரச்சினைகள் ஒருபுறம், அண்மையில் கொண்டுவரப்பட்ட வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியருக்கான சம்பள அதிகரிப்பு, அன்றாடம் மக்கள் பாவனைக்கான பொருள்களின் விலை குறைப்பு, எரிபொருளுக்கான விலைக் குறைப்பு, நிவாரணங்கள் அளிப்பு போன்றன சரியான முறையில் வழங்கப்படவில்லை என்று  நாட்டிலுள்ள 2இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரிய தொழிற் சங்கங்கள் எதிர்வரும் 4ஆந்திகதி மாபெரும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் இறங்குவதற்கான முஸ்தீபுகள் நடைபெறுகின்றது 

இவ்வாறு எந்தப்பக்கம் திரும்பினாலும் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ள இன்றைய இலங்கையில் அரசியல், நீதி, அரசதுறை, வெளிநாட்டுக்கடன், யுத்தத்தின்போது அரசு செய்த மோசடிகள் என இலங்கைக்கு எதிரான உட்பாய்ச்சல்கள் அதிகமாக துளைத் தெடுக்கின்ற வேளையில்; நாட்டின் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இன்று மக்களுக்கு பொருளாதார சுமை அதிகமாகியுள்ளது. மக்கள் நீதித்துறையில் ஏற்பட்டுள்ள இடர்கள் மக்களின் பார்வைக்குள் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. இதனை போக்கும் நடவடிக்ககைகளை நாட்டின் அதியுயர் சட்டவாக்கப் பேரவையிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு தெளிவான புரிதலை வழங்குவது கட்டாயமாகும். அதிகாரங்கள் சமனாகப் பகிரப்பட்டு அனைவரும் மக்கள் மேம்பாட்டுக்கும், நாட்டின்; முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிக்கின்ற ஒரு நிலைமை ஏற்படுதல் வேண்டும். இல்லாவிட்டால் யாரை யார் நம்புவது என்கிற நிலைமை உருவாகுவதிலிருந்து அரசியல் அதிகாரமும், நீதித்துறை அதிகாரமும் பேசித்தீர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது என்று மக்கள் நினைக்கின்றனர். 

நாட்டினது தேசிய ஒற்றுமை, நாட்டின் ஜனநாயகமரபு, விழுமியப் பண்பாடுகள் என்பன எப்போதும் எவ்வேளையும் மதிக்கப்பட வேண்டும். அவைகள் கேலிக்கூத்தாகிவிடக்கூடாது என்பதில் அதிகார முடையோர் மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். மக்களின் பணத்தில் அனைவரும் வாழ்கின்றோம். மக்கள்தான் எஜமானர்கள் என்பதை மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களும், அதிகாரத்திலுள்ளோரும் உணர்ந்து கொள்ளல் அவசியமாகும்.





No comments

Powered by Blogger.