அல்லாஹ்வின் இல்லத்திற்காக ஏங்கும் கிறீஸ் முஸ்லிம்கள்..!
கிறீஸ் தலைநகர் ஏதென்ஸிலுள்ள முஸ்லிம்கள் நிலத்துக்கடியில் அமைக்கப்பட்ட சிறு சுரங்க அறைகளிலேயே வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை நடத்தி வருகின்றனர்.
கிறீஸில் இவ்வாறான சுரங்க அறைகள் அமைப்பது சட்டவிரோதம் என்றாலும் ஏதன்ஸில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு தமது மதக் கடமையை நிறைவேற்ற இதைத் தவிர வேறு வழியில்லை. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பள்ளிவாசல் இல்லாத ஒரே தலைநகரம் ஏதன்ஸ் ஆகும்.
துருக்கியின் அயல் நாடான கிறீஸ் உஸ்மானிய சாம்ராஜ்யத்திலிருந்து 1832 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின் அங்கு ஆட்சியில் இருந்த எந்த அரசும் தலைநகரில் பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கவில்லை. பழமைவாத கிறிஸ்தவர்களை 90 வீதம் கொண்ட கிறீஸில் பள்ளிவாசல் கட்டுவது கிரேக்கத்துக்கு எதிரானது என பலர் நம்புகிறார்கள்.
எனினும் ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதற்கான பிரதான வாயிலாக கிறீஸ் அமைந்துள்ளது.
இதில் சுமார் 5 மில்லியன் சனத்தொகை கொண்ட கிறீஸ் தலைநகர் ஏனென்ஸில் சுமார் 300,000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். “இது மிகப் பெரிய கவலைக்கிடமானது. இங்கு தொழுவதற்கு ஒரு பள்ளிவாசல் இல்லை” என்று ஏதென்ஸில் வாழும் மொஹமத் ஜமில் என்பவர் குறிப்பிட்டார். “கிறீஸ் உலகுக்கு ஜனநாயகம், நாகரிகம் மற்றும் ஏனைய மதங்களை மதிக்கும் பன்பை கற்றுத் தந்துள்ளது. ஆனால் எமது முஸ்லிம்களை மதிக்கத்தவறிவிட்டது. எமக்கு சட்டபூர்வமான பள்ளிவாசல் ஒன்றை அமைக்க அனுமதிக்கவில்லை” என்றும் பாகிஸ்தானில் இருந்து குடியேறிய மொஹத் ஜமில் கூறினார்.
எவ்வாறாயினும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் குடியேற்றவாசிகள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிராக செயற்படும் கோல்டன் டவுன் கட்சியின் ஆதரவு பெருகி வரும் நிலையில் முஸ்லிம்களை மற்றும் பள்ளிவாசல்களை பாதுகாப்பதில் கிறீஸ் அரசு கடும் சவாலை சந்தித்து வருகிறது. இந்த கட்சி உறுப்பினர்கள் நிலத்தடி தொழுகை அறைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கோல்டன் டவுன் கட்சியின் துணைத் தலைவர் இல்யஸ் பனக்கியோட்ரோஸ், கிறீஸின் துருக்கி எல்லையில் கண்ணி வெடிகளை புதைக்க வேண்டும் என பரிந்துரைந்திருந்தார். “எமது நாட்டுக்குள் சட்ட விரோத குடியேற்றவாசிகள் நுழைய முயலும் போது கண்ணிவெடியில் சிக்கி இறந்தால் அது அவர்களுடைய பிரச்சினை” என்றார்.
இந் நிலையில் ஏதன்ஸின் மத்தியிலுள்ள இராணுவ முகாமுக்கு அருகில் முதலாவது பள்ளிவாசலை கட்ட தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பலமான நுழைவாயில் சுவரைக் கொண்ட உடைந்த கட்டிடம் ஒன்றை ஏதென்ஸின் முதலாவது பள்ளிவாசலாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு 500 பேர் தொழக்கூடிய வகையில் பள்ளிவாசல் வடிவமைக்கப்படவுள்ளது. இங்கு பள்ளிவாசல் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசின் முடிவை கிறீஸ் கிறிஸ்தவ தேவாலயம் வரவேற்றபோதும், முன்னணி கிறிஸ்தவ தலைவர்கள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழைமை வாத கிறிஸ்தவ பிரிவின் பாதிரியார் செரபின் இது குறித்து கூறும்போது, “துருக்கியின் கொடுங்கோலாட்சியில் கிறீஸ் 5 நூற்றாண்டுகள் அவதிப்பட்டது. இந்த நிலையில் பள்ளிவாசல் ஒன்றை கட்ட அனுமதிப்பது எமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை அவமதிப்பதாக அமையும்” என்றார்.
கிறீஸில் அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும் தலைநகரில் பள்ளிவாசல் கட்டும் அரசின் முடிவு ஐரோப்பாவில் கிறீஸ் தனித்து இருக்கப்போவதில்லை என்பதை வெளிக்காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். தினகரன்
Post a Comment