Header Ads



சியோனிசத்திற்கு எதிராகவே போராடுகிறோம் - ஒரு துண்டு நிலத்தையும் விட்டுக்கொடோம்..!



(tn) எதிர்கால பலஸ்தீன தேசத்திற்கு எந்த விட்டுக்கொடுப்பும் இல்லை என்றும் இஸ்ரேலை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்றும் காசா விஜயம் மேற்கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மிஷால் ஆயிரக்கணக்கான பலஸ்தீன மக்கள் முன் தெரிவித்தார்.

காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவு வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் பங்கேற்ற பேரணியில் ஆவேசமாக உரையாற்றிய காலித் மிஷால், பலஸ்தீனர்கள் ஒரு துண்டு நிலத்தையும் இஸ்ரேலுக்கு விட்டுக் கொடுக்க ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்றார். “பலஸ்தீனம் எமது தேசம் (மத்தியதரை) கடல் முதல் (ஜோர்தான்) ஆறு வரை, வடக்கில் இருந்து தெற்கு வரை எனவே அதன் ஒரு துண்டுப் பாகத்தையும் எம்மால் விட்டுக் கொடுக்க முடியாது. 

நாம் சியோனிஸத்திற்கு எதிராகவே போராடுகிறோம். யூதர்களுக்கு எதிராகவல்ல. எமது நிலத்தை ஆக்கிரமித்தோருக்கு எதிராகவே நாம் போராடுகிறோம். போராட்டத்தின் கனியாக எமக்கு தனிநாடு கிடைக்கும். அது பேச்சு வார்த்தை மூலம் ஏற்படக் போவதில்லை” என்றும் காலித் மிஷால் குறிப்பிட்டார். 

இந்த பேரணியில் முகத்தை மூடியவாறு உரையாற்றிய ஹமாஸ் இராணுவ பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையின் பேச்சாளர், “இஸ்ரேலுடனான மோதலின் போது நாம் எமது 10 வீதமான திறனையே வெளிப்படுத்தினோம்” என்றார்.

No comments

Powered by Blogger.