Header Ads



ஆங்கில புதுவருடமும், முஸ்லிம்களும்...!


(மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி)

வரும் திங்கட்கிழமை இரவு 12 மணியுடன் 2012 நிறைவடைந்து 2013-01-01  புது வருடம் பிறக்கின்றது.

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?

தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப் பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்று கவலைப்பட்டு, அதைப் பின்னோக்கிப் பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக் கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே உண்மையான புத்திசாலியாக இருக்க முடியும்.   இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரிய எழுச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்திய ஹிஜ்ரத் எனும் வரலாற்று சிறப்பு மிகு பயணத்தை வைத்துத்தான் இஸ்லாமிய காலண்டர் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் துவக்கத்தில் ஏற்படாத புத்துணர்வும், எழுச்சியும் ஜனவரி முதல் திகதி இஸ்லாமிய உள்ளங்களுக்கு ஏற்படுகின்றது என்றால் இந்த அறியாமையை எங்கு போய் சொல்வது?

அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ

‘அஞ்ஞான காலத்துத் தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வை விட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?’ (அல்மாயிதா 5:50).

அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தராத அனைத்தும் அறியாமை (ஜாஹிலிய்யத்) என்பதை இந்த வசனம் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் நமக்குக் காட்டிய வழி எது?.

‘அறியாமை கால மக்களிடம் வருடத்தில் இரு நாட்கள் கொண்டாடி மகிழ்வதற்காக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் மதினாவுக் ஹிஜ்ரத் செய்து வந்தபோது, நீங்கள் வருடத்தில் விளையாடி மகிழும் இந்த இரு நாட்களை விட சிறந்த இரு நாட்களை அதற்குப் பகரமாக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்றான். அவைகள்: “நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள்” என குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், நூல்: நஸாஈ).

ஹாபிஃழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த நபி மொழியை விளக்கும்போது, ‘நிராகரிப்பாளர்களின் பெருநாட்களை கொண்டாடுவதும், அவர்களுக்கு ஒப்பாகுவதும் வெறுப்பான ஒரு விடயம் எனக் குறிப்பிடுகின்றார்கள்’.

அல்லாஹ்வின் தூதர் தனது உம்மத்துக்கு கொண்டாடி மகிழ்வறத்கு வழிகாட்டிய இரு பெருநாட்களும் எவை? என்பதை மிகத் தெளிவாக இந்த ஹதீஸ் கூறிக் கொண்டிருக்கின்றது. இதை விட்டு விட்டு வேறு வழிகளைத் தேடுவது அறியாமையிலும், வழிகேட்டிலும் தவிர வேறு எதில்தான் கொண்டு போய் சேர்க்கும் என்பதை இவர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா?

ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தை, முஹர்ரம் முதல் நாளை கொண்டாடுவதை கூடாது பித்அத் வழிகேடு என்று சொல்கின்றோம். அல்லாஹ்வின் தூதரிடம் அதற்கு எந்த முன்மாதிரியும் இல்லை என்கின்றோம். ஆனால் கிறிஸ்தவர்கள், ஏனைய சமூகங்கள் கொண்டாடும் ஜனவரி முதல் திகதியை கொண்டாடுகின்றோம். இது எவ்வளவு பெரிய முரண்பாடு, வழிகேடு என்பதை ஏன் நாம் சிந்திக்க மறுக்கின்றோம்?.

புது வருடம் பிறந்து விட்டது என்று அன்றைய இரவில் எத்தனை எத்தனை அனாச்சாரங்கள், விபச்சாரம், மதுபானம், இசை, ஆடல் பாடல்கள் இவைகள் ஒரு புறம், பட்டாசு வெடிகள் என்று பல கோடிக் கணக்கான ரூபாய்கள் வாரி இறைக்ககப்படுவது மறுபுறம். இவைகளுக்காக முஸ்லிம் நாடுகள் வாரி இறைக்கும் பணம் பல மிலியன்கள் என்பது இன்னும் வேதனையான விடயம். உலகின் பல பாகங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி, தங்க இடமின்றி வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றனர். எந்தப் பயனும் இன்றி வீண் விரயம் செய்யப்படும் இந்த கோடிகளை அவைகளுக்கு பயன்படுத்தப்படுமென்றால் அந்த மக்கள் எவ்வளவு நிம்மதி அடைவர்?

இன்னும் பல மூட நம்பிக்கைகள் இந்நாளில் பரவி இருப்பதையம் பார்க்க முடியும்: கடன் வாங்குவதோ, கொடுப்பதோ கிடையாது! ஏனேனில் அன்றைய நாளில் கடன் வாங்கினாலோ, கொடுத்தாலோ அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை தான் இதற்குக் காரணம். இது தெளிவான மூட நம்பிக்கை இல்லையா? இது ஒரு உதாரணம் மாத்திரம் தான். இது போன்று எண்ணற்ற மூட நம்பிக்கைகள் அந்நாளில் பரவிக்கிடக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் தனது வாழ்நாளில் எச்சரித்த ஒரு விடயத்தை இவர்கள் உண்மைப் படுத்தும் வேதனையான ஒரு நிலையைத் தான் இங்கு பார்க்க முடிகின்றது:

‘நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறைகளை சானுக்கு சான், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குள் புகுந்து விட்டால் அவர்களைத் தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா குறிப்பீடுகின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, வேறு யாரை? என்று அல்லாஹ்வின் தூதர் திருப்பிக் கேட்டார்கள்’. அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) அவர்கள், புஹாரி).

பலர் இந் நாளில் உதயத்துடன் புது வருடம் பிறந்து விட்டது  (Happy New Year)  என்று வாழ்த்துக்கள் தெரிவிப்பதையும், ஏனையவர்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம், குறுஞ் செய்திகள் மூலம் ஈமெயில்கள் மூலம் வாழ்த்து தெரிவிப்பதையும் பரவலாக பார்க்க முடிகின்றது. ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் இந்த அறியாமைகளில், வழிகேடுகளில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாகவே இருப்பான். இன்னும் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்.

‘எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவுத்).

இது எவ்வளவு கடும் எச்சரிக்கை, இதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலடச்சியமாக இருக்க முடியும்?

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அனுமதி கேட்டபோது நபியவர்கள் அவ்விடத்தில் அறியாமைக் காலத்தில் ஏதும் சிலைகள் வணங்கப்பட்டனவா? அதற்கு இல்லை என்று சொன்னார்கள். அறியாமை கால பெருநாட்கள் ஏதும் அவ்விடத்தில் கொண்டாடப்பட்டனவா? என்று கேட்டார்கள் அதற்கும் இல்லை என்று சொன்னார்கள். அப்படியென்றால் உனது நேர்ச்சையை நிறைவேற்றும்’ என்று கூறினார்கள். (அபூதாவுத்).

அல்லாஹ்வுக்காக நிறைவேற்றும் ஒரு நேர்ச்சை, அது நிறைவேற்றப்படும் இடத்தில் கூட பிற மதத்தவர்களுக்கு ஒப்பாகி விடக்கூடாது என்பதில் எந்தளவு அல்லாஹ்வின்  தூதர் கண்டிப்பாக இருந்தார்கள் என்று பாருங்கள்.

அல்லாஹ்வுக்காக நாம் நிறைவேற்றும் பல வணக்கங்களில், நடைமுறை வாழக்கை தொடர்பான விடயங்களில் யூதர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் நமக்கு பணித்திருக்கின்றார்கள். சூரியன் உதிக்கும், மறையும் நேரங்களில் சுன்னத்தான தொழுகைகள தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் தடை விதித்தார்கள். காரணம் அந்நேரத்தில் இறை நிராகரிப்பாளர்கள் தங்கள் கடவுள்களை வணங்கும் நேரம் என்பதற்காக (இந்த செய்தி முஸ்லிமில் பதிவாகியுள்ளது).

இவைகளை நாம் எடுத்துச் சொல்லும்போது சிலர் இது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது இது இஸ்லாத்தைப் பற்றித் தவறான ஒரு தோற்றத்தையே பிற மதத்தவரிடம் ஏற்படுத்தும் என்று கூற ஆரம்பித்து விடுகின்றனர். இது இவர்களின் வெறும் ஒரு வீணாண கற்பனையைத் தவிர வேறு இல்லை. அல்லாஹ் தனது தூதரைப் பற்றி கூறும்போது

‘மேலும், (நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’. (68:4).

என்று போற்றுகிறான். அவரை விட அழகிய முறையில் இந்த உலகிற்கு நற்பண்புகளை போதித்தவர் வேறு எவரும் இருக்க முடியாது. அவர்கள் பிற மதத்தவர்களுடன் நடந்து கொள்ளும்போது எந்த உயரிய வழி முறைகளைக் கடைபிடித்தார்களோ அது தான் நமக்கு மிகச்சிறந்த முன் மாதிரி. அதல்லாத வேறு ஒரு முன்மாதிரி நமக்குக் கிடையாது.

கிறிஸ்மஸை, ஜனவரி முதல் திகதியை, ஏனைய மதத்தவர்களின் பண்டிகைகளைக் கொண்டாடியதன் மூலம், அல்லது அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தன் மூலம்தான் அல்லாஹ்வின் தூதர் மத நல்லிணக்கத்தை கடைபிடித்தார்கள் என்று இவர்கள் சொல்ல வருகின்றார்களா? அதற்கு துளியும் அன்னாரது வாழ்வில் ஆதாரம் இல்லை. மாறாக எந்த வகையிலும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்படக் கூடாது என்பதில் தான் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் கடைபிடித்த அந்த உயரிய வரையறைகள் மிகத் தெளிவாக சுன்னாவில் பதிவாகியுள்ளன. (அதை வேண்டுமானால் அல்லாஹ்வின் தூதர் பிற மதத்தவர்களுடன் எவ்வளவு பண்பாக நடந்துகொண்டார்கள் என்பதை தனிக் கட்டுரையாக விளக்கலாம்). ஆனால் நாம் இங்கு குறிப்பிடும் வரம்புகளை முரண்படாமல் நீங்கள் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மிடம் ஒரு ஹிந்து நண்பரோ, பௌத்த நண்பரோ விருந்துக்கு வருகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள்! அவரது உணவு சைவம்தான் என்பதை அறிந்து அதற்கேற்ப உணவைத் தயாரித்து அதைப் பரிமாறுகின்றோம். இது போன்று நமது நிலைகளையும், கொள்கை கோட்பாடுகளையும் அவர்களுக்கு கூறியிருப்போமென்றால் அவர்கள் நிச்சயமாக நம்முடன் அதற்கேற்பத்தான் நடந்து கொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர்கள் தெரிந்து வைத்திருக்கும்  சில விடயங்களில் அவ்வாறு தான் நம்முடன் நடந்து கொள்கின்றார்கள் என்பதும் இதற்கு மிகப் பெரிய ஆதாரம். ஆனால் நாம் விட்ட தவறென்ன? நமது கொள்கை கோட்பாடுகளை சரியாக அவர்களுக்கு புரிய வைக்காததே. இதை உணராமல் நம்மில் சிலர் இஸ்லாத்தின் மீது  குறை காண்பது அறிவீனமாகும்.

இறுதியாக அல்குர்ஆனின் ஒரு வசனத்தை உங்களுக்கு நினைவு கூறி நிறைவு செய்கின்றேன்:

وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَنْ يُرْضُوهُ إِنْ كَانُوا مُؤْمِنِينَ

‘அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான்.’ (9: 62).


1 comment:

  1. If you be happy on 01st of Jan, you follow Christians, So we will dress in black, cook no food at home, not wishing anything good to anybody, etc. we can declare this day as mourning of dead Muslims.

    ReplyDelete

Powered by Blogger.