மது போதையுடன் வாகனம் ஓடிய தலைமை பௌத்த பிக்கு கைது - அநுராதபுரத்தில் சம்பவம்
(sfm) அநுராதபுரம் நகரில் குடிபோதையில் மோட்டார் வாகனம் ஒன்றை செலுத்திய பௌத்த மதகுரு ஒருவர் 30-12-2012 காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நகர எல்லைக்குள் அதிக வேகத்துடன் செலுத்தப்பட்ட வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகாமையில் வைத்து பரிசோதனை செய்துள்ளனர்.
இதன்போதே, குறித்த காவியுடை அணிந்தவர் மதுஅருந்தி இருந்தமை தெரியவந்துள்ளது.
குறித்த வாகனத்தில் பிறிதொரு காவியுடை அணிந்தவரும், சாதாரண பொதுமக்கள் இருவரும் சம்பவ தருணத்தில் இருந்துள்ளனர். அவர்கள் அனுராதபுரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பலூன் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சாரதியான பௌத்த மதகுருவும், ஏனையோரும் மது அருந்தியிருந்தமை மேலும் உறுதியாகியுள்ளது.
இதன்படி, கைதுசெய்யப்பட்ட 33 வயதான சாரதியான மதகுரு ஹோமாகம பிரதேசத்தில் உள்ள ஒரு விகாரையில் தலைமை விகாராதிபதி என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மது அருந்திய நிலையில் வாகனம் செலுத்தியமை மற்றும் சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் சென்றமை போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவாகியுள்ளன.
குறித்த பௌத்த மதகுருவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், சந்தேகத்திற்குரிய அவரை காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சாரதி அனுமதிப் பத்திரம் இருப்பின் மதகுரு ஒருவருக்கு வாகனம் செலுத்த முடியுமா என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடியிடம் வினவியது.
சாரதி அனுமதிப் பத்திரம் இருக்கும் பட்சத்தில் மதகுரு ஒருவருக்கு வாகனம் செலுத்த சட்டத்தில் அனுமதி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த மதகுரு ஒருவர் தமக்கு சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்றை பெற்றுத்தர மோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு உத்தரவிடுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment