Header Ads



எமது வரலாற்று வீழ்ச்சிகளை நாமே உருவாக்குகிறோம் - கலாநிதி எம். எஸ். எம். அனஸ்



(இக்பால் அலி)

இலங்கையின் ஜனாதிபதியும் சிங்கள அமைச்சர்களும் அறிந்து கொள்ள முடியாத ஒரு மறைவான உலகை உருவாக்கியுள்ளோம்.  'உங்களை எங்களுக்குத் தெரியாது.' என்று கூறுவதற்கு ஒப்பான பல சம்பங்களை என்னால' கூற முடியும். தேசிய நிகழ்வுகளிலிருந்து, கலை இலக்கிய நிகழ்வுகளிருந்து ஒதுங்கிச் செல்லும் நிலைமையில் எமது சில போக்குகள் அமைந்துள்ளன.

பேராதனை பல்கலைக்கழக மெய்யியல்துறைப் கலாநிதி எம். எஸ். எம். அனஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாவனல்லை நியுமேன்ஸ் கல்லூரி மற்றும் அல் இர்பான் சர்வதேச பாடசாலை அனுசரணயின் எற்பாட்டில் ராஜகவி றாஹிலின் பள்ளத்தாக்கில் சிகரம் கவிதை நூல் வெளியீட்டு விழா கல்லூரியின் நிர்வாகப் பணிப்பாளர் ஹுசைன் முஹமட் தலைமையில் நடைபெற்றது. 

பேராசிரியர் கலாநிதி எம். எஸ். எம். அனஸ் அங்கு தொடர்ந்து பேசுகையில்,,

பத்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ள றாஹில் இன்று சிகரம் கவிதைத் தொகுதி வெளியிடுவது மிகழ்ச்சி தரும் விடயமாகும். மாவல்லை நகரில் இந்நூல் வெளியிடப்படுவது இரட்டிப்பு மகிழ்ச்சிக்குரியது. எழுத்து முயற்சிகள் நூல்வெளியீடுகள், இலக்கிய நடவடிக்கைகள் மத்திய மலைநாட்டில் மாவனல்லையில் அதிக நடடிக்கை பெறாத ஒரு கால கட்டத்தில் றாஹிலின் கவிதை நூல் இலக்கிய வட்டாரத்தில் புது உற்சாகத்தை வழங்கும் என்று எதிர் பார்க்கலாம்.

சில மாவட்டங்களில் எழுத்து முயற்சிகள், இலக்கிய வெளியீடுகள் குறைந்து போயுள்ள நிலை எமக்கு வேதனை தருகிறது. 1950 களிலிருந்து சுமார் 40 ஆண்டுகள் சுறுப்பாக இருந்த முஸ்லிம் இலக்கிய உலகில் இன்று சில   மாகாணங்களில் பெரும் தேக்கத்தைக் காண்கிறோம்.

கவிதை சிறுகதை நாவல், என்ற முழு அளவிலாள இலக்கியப் பணிகள் என்று பார்க்கும் போது இத் தேக்க நிலை எம்மைச் சேர்வடையச் செய்கிறது. படித்தவர்களைக் கொண்ட கல்வி,  முன்னேற்றமுள்ள பகுதிகளிலும் இக்குறைபாடு பரவியுள்ளது. இலக்கியக் கூட்டங்கயுளுக்கு மக்கள் வருகை தராத நிலையும் இலக்கியப் படைப்புக்களையும் படைப்பாளிகளை ஆதரிக்காத நிலையும்  இலக்கியத்துக்கு மட்டுமல்ல அது பல்வேறு வீழ்ச்சிக்கு எம்மை இட்டுச் செல்லும் இதனை முஸ்லிம் சமூகம்  உணர வேண்டும்,

முஸ்லிம்களின் வரலாறு பற்றிப் பேசுகின்றவர்கள் சமூக சமூகவியல் வரலாற்றை ஒவ்வொரு காலகட்டங்களில்  முஸ்லிம்களின் வாழ்க்கை, எண்ணங்கள் விருப்பு வெறுப்புக்கள்  அமைந்திருந்த வரலாற்றை அறிவது போல் கருதுகிறார்கள். வரலாற்றுக்குச் சமாந்தரமாக சமூக சமூகவியல் வரலாறுகள் செல்ல வேண்டும். அதன் பெரும் பகுதியை சிறந்த இலக்கியம்தான் பூர்த்தி செய்கின்றன. சிறுகதைகளும் நாவல்களும் இதில் மிக முன்னேற்றமான பயனுள்ள பணிகளைச் செய்யக் கூடியவை. 15 நூற்றாண்டில் முஸ்லிம்களின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல  நாவல்கள் மிகச் சிறப்பாகப் பிரதி பலிக்க முடியும். 15 ம்  நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு காவியம், ஒரு இலக்கியம் சிறந்த உண்மைகளை எமக்குத் தரலாம். ஆனால் அதை நான் மட்டும் கூறவில்லை.

இன்று  நீங்கள் அதை எழுத முடியும். 1915 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் மானல்லையின் கம்பளையின். கொழும்பின், காலியின் முஸ்லிம் இழப்புக்களின் அவலங்களை இப்போதும் நாலாக்க முடியும்.

எஸ். எம். கமால்தீன் 18 ம், 19 ம். நூற்றாண்டு  முத்துக்குளிப்பு வாழ்வையும் முறைகளையும் அதில் முஸ்லிம்களின் செல்வாக்கையும் 'கடல்கட்டி' நாவலில் படம் பிடித்துக்காட்டியுள்ளார். முத்துக் குளிப்பு முஸ்லிம்களின் வரலாற்றின் மறக்க முடியாத ஒரு அத்தியாயமாகும். நாவல் உருவில் கமால்தீன் தந்துள்ளார்.

கவிதையை சிறுகதையை எடுத்துக் கொண்டால் நாவலை அதாவது இலக்கியத்தினை முஸ்லிம்கள் இப்படியும் பார்க்க வேண்டும், இன்று இவற்றிலிருந்து பெரும்பாலும் தூரமாக்கப்பட்டுள்ளோம். படிப்படியாக ஒரு இடைவெளி உருவாக்கப்பட்டுள்ளது. எமது வரலாற்று வீழ்ச்சிகளை, இலக்கிய வீழ்ச்சிகளை நாமே உருவாக்குகின்றோம்.

வானொலி நாடகம் கூட எமக்குப் போதிய  உணர்வு  இன்று இல்லாமலாகப்பபட்டுள்ளது வானொலி நாடகத்தில் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவு புரிந்த சாதனைகள் தமிழ் இலக்கியவாதிகளும் அந்தக் காலம் முடிவுற்றது. எதனால் சமூகவியல் நாடகங்களையும், சரித்திர நாடகங்களையும், உளவியல் நாடகங்களையும், அவை வழங்கிய பங்களிப்புக்கள், பதிவுகள் எவ்வளவு முக்கியமானவை இருந்தும்  அவற்றை நாம் கைவிட்டு விட்டோம்.

இலக்கிய முயற்சிகள் கலை கலாசார முயற்சிகளில்  பெரிய இடைவெளிகள் உருவாக்கப்பட்டன. நாடகங்கள் தொலைக்காட்சி நாடகங்கள் பற்றி எம்மிடம் தெளிவான அறிவு இல்லாததால் அவற்றிலிருந்து ஒதுங்கினோம். இளம் சமுதாயத்தையும் அந்தப் பயிற்சியிருந்து தகுந்துள்ளோம்.

இந்த நாட்டில் தவிர்க்க முடியாத சிறுபான்மையினர் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய பின்னணியும் கலை இலக்கியங்களுக்கு உண்டு. ஒரு நீண்ட வரலாறு எமக்கும் கலைகளுக்கும் இலக்கியங்களுக்கும் இருந்த போதும் அவற்றை கவனத்தில் எடுக்காத நிலை இன்று உருவாகி உள்ளது. எமது முன்னோர்களின் சீறாப்புராணம், இராஜநாயகம் போன்ற முஸ்லிம் காப்பியங்களை இளைஞர்களின் பார்வையிலிருந்து ஒதுக்கிவைத்துள்ளோம். அவை காப்பியங்கள் மட்டுமல்ல இஸ்லாத்தின் பல்வேறு சான்றுகளையும் படிப்பினைகளையும் பாங்கோடு மக்களுக்குச் சொன்ன கல்வி நூல்கள்.

சமயத்தை சுவையாக இலக்கிய நயத்துடன் அறிவதற்கும் அதில் வாய்ப்புக்கள் இருந்தன. தொலைக்காட்சி வானொலி எதுவுமே இல்லாத காலத்தில்  சமயத்தைச் சார்ந்த விடயங்களை பொது மக்கள் இலக்கிய நயத்துடன் ரசித்து மகிழ்ந்தார்கள். 18ம் 19 ம் நூற்றாண்டில்  தமிழ் இலக்கியப் பரப்பில் மட்டுமன்றி தென்கிழக்கு ஆசியாவின் 18ம் 19ம் நூற்றாண்டில் தொன்றின இலக்கயங்கள் என்ற பெருமையும் அவறிற்கு உண்டு.

மேற்கத்திய பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் வந்து அந்த நூல்களைத் தேடி அவற்றை ஆய்வு செய்கின்றார்கள். அவர்களுக்கு மட்மல்ல எமக்கும் பயனுள்ள ஆய்வுக்குரிய, வரலாற்றிற்குத் தேவையான விடயங்கள் அவற்றில் உள்ளன. குறைந்த பட்சம் இவற்றைப் பாதுகாப்கும் முயற்சியாவது எம்மிடையே உருவாக வேணடும்.

வரலாற்று நோக்கில்  கலை இலக்கிய பண்பாட்டு அம்சங்கள்  சரியான ஆய்வுகளும் தகவல்களும்  ஆதாரங்களும் இருக்குமானால் அது எமது வரலாற்றைப் பயன்படுத்தக் கூடிய ஆதாரங்களாகும். சீறாப்புராணத்திற்கு முந்திய எமது இலக்கியம் என்ன என்று வினா எழுப்பினால் 16 ம் 14 ம்  நூற்றாண்டு இலக்கியங்கள் என்ன என்று அறியும் பாதையில் நாம் செயல்படுவோம். இலக்கியம் எமக்கு ஒரு வரலாற்று ஆயுதமாக செயல்படக் கூடியது என்பது ஒரு செய்தி.   சமூகம் என்ற முறையில் ஒரு கலை இலக்கிய மரபின் சொந்தக்காரர்கள் என்று கூறக் கூடிய தகுதியை மிக உயர்ந்ததாக மதிக்கின்றது.

சீறாப்புராணத்திலிருந்து சிறுகதைக்கும் நாவலுக்கும் வந்தோம. அடுத்தடுத்த விடயங்களுக்குச் செல்ல நாம் முயற்சிக்க வேண்டும். இலங்கையைப் பொறுவத்தவரை வானொலி நாடகத்தைத் தவிர நவீன இலக்கிய சாதனைகள் எதுவுமில்லை என்ற வெறுமைதான் மிஞ்சியுள்ளது.

இந்நிலையிலிருந்து பார்க்கும் போது மாவனல்லையில் நடைபெறும் றாஹீலின் இக்கவிதை நூல் வெளியீடு மாவல்லைக்கும் மலையத்திற்கும் முழு அளலிவான முஸ்லிம் இலக்கிய உலகுக்கும் ஒரு உற்சாகத்தை தருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

------------------------------------------------------------------

தமிழ் முஸ்லிம் படைப்பாளிகள் ஒன்றிணைந்து  பேரினவாதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவேமாயின் அவர்களுடைய எதிர்ப்பினை வேரோடு இல்லாமற் செய்ய முடியும். நாங்கள் தனித்துக் கொண்டு குரல் கொடுப்பதை விட ஒன்று சேர்ந்து செயற்படுமாயின் எமது இலட்சியங்களை நிச்சயம் வெற்றி கொள்ளலாம் என்று பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியர் கலாநிதி துரைமனோகரன் தெரிவித்தார்.

இன ஒற்றுமையை வலிறுத்தி தமிழ் முஸ்லிம்களுடைய பாரியளவிலான கவிதைத் தொகுதி வெளிவர வேண்டும். அந்த தொகுதி ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கபட்டு வெளிக் கொணரப்பட வேண்டும். சிறுபான்மையினார்  ஒன்று பட்டால் பலம் பெரிது. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போல இரு சாரரும் ஒன்று பட்டால்  இலங்கையில் சாதிக்கக் கூடிய விடயங்களைச் சாதிக்க முடியும். றாஹிலின் கவிதை இன ஒற்றுமையை வலிறுத்தி நிற்கிறது. இவர் சிறந்த ஆளுமை ஆற்றல் மிக்க கவிஞர் இவருடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரீகத் துறைத் தலைவர் எம். இஸட். எம். நபீல் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. எம். ஏ. றசாக் ( ஜவாத்) கலாபூசணம்  எம். வை. எம். மீஆத் ஆகிய முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.









No comments

Powered by Blogger.