குருநாகலில் பௌத்த தேரர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட முயற்சி - ரிஸ்வி ஜவஹர்ஷா
(இக்பால் அலி)
யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் அரசியல் கள நிலவரங்களைச் சரியாகப் புரிந்து கொண்டு எமது சமூகம் செயற்பட வேண்டும். வர்த்தக ரீதியாக நாங்கள் நசுக்கப்படுகின்றோம். இன ரீதியாக. கல்வி ரீதியாக நாங்கள் நசுக்கப்படுகின்ற சமூகமாக நாங்கள் இருக்கின்றோம். அரசாங்கத்தின் நிர்வாகத்துறையில் வெளிப்படையாக இனரீதியாக செயற்படுகின்ற ஒரு சூழ்நிலையினை நாங்கள் பார்க்கின்றோம் என்று வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா தெரிவித்தார்.
நீதிக்கும் சமூக அபிவிருத்திற்குமான ரிஸ்வி ஜவஹர்ஷா மன்றத்தின் ஏற்பாட்டில் கிராம அலுவலகர் மூன்றாம் தரத்துக்கு சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையில் பங்கேற்கும் விண்ணப்பதாரிகளுக்கு இலவச வழிகாட்டல் கருத்தரங்கினை இன்று 15-12-2012 சனிக்கிழமை ஆரம்பித்து உரையாற்றிய வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,,
அரச அதிகாரிகளுடன் நிர்வாகம் தொடர்பாக நெருங்கி செயலாற்ற வேண்டிய சூழ்நிலையில் கிராம சேவகர்களின் பங்கு அதி முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்காக ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சையில் தம் சமூகத்தின் தேவை பூர்த்தி செய்வதற்கு கிராம உத்தியோகஸ்தர்கள் போதியளவு இல்லை. கிராமங்களில் அமுல்படுத்தப்படும் திவிநெகும வேலைத் திட்டம், சமுர்த்தி, கமநெகும, மகநெகும மற்றும் இன்னோரன்ன அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை கிராமங்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கின்ற பணியை இந்த கிராம சேகவர் உத்தியோகஸ்தர்களே செய்கின்றனர்.
முஸ்லிம் கிராமங்களில் கிராம சேவகர்களாக பெரும்பான்மை சமூகத்தைச் சோந்தவர்கள் செயற்படுகின்ற போது அரசாங்கத்தின் மேற்படியான வேலைத் திட்டங்கள், அபிவிருத்திப் பணிகள் எமது கிராமங்களுக்கு வந்து சேர்வதில்லை. அநேகமாக கிராம சேவகர்கள் வித்தியாசமாக சிந்தித்து செயற்படுகின்ற ஒரு சூழ்நிலையிலேயே நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். இதற்கான ஒரே தீர்வு எங்களுடைய கிராமங்களில் எங்களுடைய கிராம உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சியின் ஆரம்பமே இந்த இலவசக் கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்.
இன்று குருநாகல் மாவட்டத்தில் சில பௌத்த சமய தேரர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட முனைந்துள்ளனர். இதற்கு குருநாகல் நகரிலுள்ள முன்னணி வர்த்தரினால் முன்னெடுக்கப்படுகிறது.
இது குறித்து முஸ்லிம் சமூகத்தவர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும். இந்த நிலையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். திட்டமிட்ட அணுகுமறையின் ஊடாக தம்முடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விசேட வளவாளர்களாக திறந்த பல்கலைக்கழகத்தின் இணைப்பதிகாரியும் விரிவுரையாளருமான எம். யூ. எம். சனூஸ், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. ஆர், எம். நிசாம், சீ, ஐ, சீ, நிறுவனத்தின் அதிகாரி கலாநிதி எம். டி. சியாட் முஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment