ஜனாதிபதி மஹிந்த நியமனம் செய்த ஷிராணியை பைத்தியகாரி என்கிறது ஆளும்தரப்பு
தெரிவுக்குழு விசாரணைகளின் போது, பைத்தியக்காரி என்று அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையான மோதலில் ஈடுபட்டதால் தான், தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க வெளிநடப்புச் செய்ததாக அவரது சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று 07-12-2012 அவரது சட்டவாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
“தெரிவுக்குழு விசாரணையின் பல்வேறு கட்டங்களில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் இருவர் பைத்தியக்காரி என்று தலைமை நீதியரசரை இகழ்ந்தனர். தலைமை நீதியரசரையும், நீதித்துறையையும் அவமதிக்குமாறு இவர்கள் உத்தரவிடப்பட்டுள்ளனர் என்பதற்கு இதுவே சான்றாக உள்ளது.” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, தலைமை நீதியரசர் இனிமேல் தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்குச் சமூகமளிக்கமாட்டார் என்று அவருக்கு நெருக்கமான சட்டவாளர் ஒருவர் ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார்.
“தலைமை நீதியரசருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களிடம், திரும்பத் திரும்பக் கேட்டும் அதுசம்பந்தமான ஆவணங்களை அவர்கள் வழங்கவில்லை. சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கும் ஆளும்கட்சியினர் பெரும்பான்மையாகவுள்ள தெரிவுக்குழு, அனுமதிக்க மறுத்து விட்டது.
எவ்வாறாயினும், நேற்று மாலை அவரிடம் 1000 பக்கங்களில் ஆவணங்கள் கொடுக்கப்பட்டன. 24 மணித்தியாலங்களுக்குள் அதற்குப் பதிலளிக்குமாறும் அவர் கேட்கப்பட்டார்.
தெரிவுக்குழுவில் உள்ள பெரும்பாலானவர்களிடம் நியாயமான விசாரணை நடத்தும் எண்ணம் இல்லை என்பது இதன் மூலம் வெளிப்படையாகியுள்ளது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment