சிரியாவில் ஒரு இலட்சம் பேர் உயிரிழக்ககூடும் - லக்தர் பிரஹிமி
சிரியாவில் தற்போதைய நிலையே நீடித்தால், அடுத்த ஆண்டில் வன்முறைக்கு சுமார் 1 லட்சம் மக்கள் உயிரிழக்க நேரிடும் என சிரியா விவகாரங்களை கவனித்து வரும் ஐ.நா. சபை பிரதிநிதி லக்தர் பிரஹிமி, கவலை தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 21 மாதங்களாக போராடும் பொதுமக்களை ராணுவம் கொன்று குவிக்கிறது. அதில், இதுவரை 45 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இருந்தும் கலவரம் ஓயவில்லை. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக புரட்சிப் படை களம் இறங்கியுள்ளது. ராணுவத்துடன் போரிட்டு பல பகுதிகளை தன்வசம் வைத்துள்ளது. அவற்றை மீட்க புரட்சி படையுடன் ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது.
ஹோம்ஸ் நகரம் அருகேயுள்ள தெர்பால் பெக் என்ற மாவட்டம் புரட்சிப்படை வசம் உள்ளது. அதை மீட்க பல நாட்களாக ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. அதில் வெற்றி பெற்று ராணுவம் தற்போது அந்த மாவட்டத்தை தன் வசமாக்கியுள்ளது. இதற்காக நடந்த தாக்குதலில் அங்கு மட்டும் 200 பேர் பலியாகியுள்ளனர். அவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். இதற்கிடையே சிரியா முழுவதும் கலவரம் வலுத்துள்ளது.
இதை தொடர்ந்து ராணுவம் நடத்திய தாக்குதலில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் சிரியாவில் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிரியா அதிபர் பஷர் அல் - ஆசாத்துடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு, மாஸ்கோ செல்லும் வழியில் லக்தர் பிரஹிமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது சிரியாவில் நிலவி வரும் பதற்ற நிலை மேலும் நீடித்தால், யுகோஸ்லோவேக்கியாவில் உருவானதைப் போல் சிரியாவில் தனி மாநிலங்கள் அமையும் வாய்ப்பு ஏற்படாமல் போகும். சோமாலியாவின் நிலையை சிரியா மக்கள் எதிர்கொள்ள நேரிடும். ஆயுத பலம் மிக்கவர்களால் அப்பாவி மக்கள் அடக்கி ஆளப்படுவார்கள். அடுத்த ஆண்டில் சுமார் 1 லட்சம் மக்கள் வன்முறைக்கு பலியாகும் அபாயம் சிரியாவில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment