Header Ads



ஹலால், ஹறாம் குறித்து உலமாசபையின் முக்கியத்துவமிக்க விளக்கம்..!


(எமது இணையத்திற்கு www.jaffnamuslim.com உலமா சபையின் ஹலால் பிரிவு அனுப்பியிருந்த உத்தியோகபூர்வ விளக்கமே இது)

(M. A. M Haris Rashadhi
Coordinator
Fatwa Division)


ஹலால் மற்றும் ஹறாம் என்ற இரு விடயங்கள் பற்றி பல்வேறுபட்ட தவறான மற்றும் பொய்யான வரைவிலக்கணங்கள் தரப்படுவதும் அக்கோட்பாடுகள் தொடர்பாக எதிர்ப்புக்கள் காட்டப்படுவதும் சமீப காலமாக என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதைக் காண முடிகின்றது. இவ்விரு விடயம் பற்றிய போதுமான தெளிவுகள் இல்லாத நிலையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே இது பற்றி சிறு விளக்கமொன்றை தருவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

முதலாவது, ஹறாம் மற்றும் ஹலால் என்ற நியதிகள் இஸ்லாத்தில் மட்டுமே உள்ளதாக பொதுவாக கருதப்படுகின்றது. இது ஒரு தவறான எண்ணமாகும். அனுமதிக்கப்பட்டவை மற்றும் தடுக்கப்பட்டவை என்ற விடயத்திற்கு பயன் படுத்தப்படும் மேற்படி இரு சொற்கள் அறபு மொழிச் சொற்களாக இருப்பதும் இதற்கான ஒரு காரணமாகவும் இருக்கலாம். ஆனால் இந்த இரு நியதிகளும் சகல பிரதான மதங்களில் இருப்பதை ஆய்வாளர் எவருக்கும் தெரியாத ஒன்றல்ல.

மனிதன் உட்பட்ட சகல உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு உணவு கட்டாயமாகும். மனிதனின் ஆரம்பம் முதற்கொண்டே உண்ணத் தகுதியானவை (ஹலால்), உண்ணக் கூடாதவை (ஹறாம்) பற்றி அறியும் விடயத்தில் அக்கறை காட்டி வந்துள்ளான். மனிதன் அவனுக்கு ஒவ்வாத உணவை உண்பதால் தீமை ஏற்படுவது இயற்கையே. ஜீரணம் தொடர்பான சிக்கல்கள், நீரிழிவு, இருதய நோய், இரத்த அழுத்தம், புற்று நோய் போன்றவை தவறான, தீமையான உணவு வகைகளை உண்பதால் ஏற்படுவது விஞ்ஞானப+ர்வமான உண்மையாகும். எனவே, மனிதனுக்கு நல்ல, அவன் உண்பதற்கு தகுந்த ஆகுமாக்கப்பட்ட உணவு எது? தீய, தவிர்க்க வேண்டிய தடைசெய்யப்பட்ட உணவு எது? என்பது பற்றிய விடயத்தை அவன் அறிவது கட்டாயமாகும். ஆன்மீக வழிகாட்டலோடு இவற்றைப் பற்றி இஸ்லாம் மட்டுமன்றி ஏனைய அனைத்து மதங்களும் வழிகாட்டல்களைத் தந்தே உள்ளன.

அனுமதிக்கப்பட்ட தடுக்கப்பட்ட உணவுகள் தொடர்பான மதங்களின் நிலைப்பாடுகள்

உலகில் உள்ள மதங்கள் உணவு உட்கொள்ளல் பற்றிய நியதிகள் பலவற்றை வகுத்துள்ளன. பௌத்த மதத்தில் துறவிகள் தவிர்க்க வேண்டிய 10 வித மாமிசங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று ஹிந்து மதத்திலும் உணவு தொடர்பான சட்ட வரையறைகள் உள்ளன. மது அருந்துவதைப் பற்றிக் குறிப்பிடும் பௌத்த மதம் அதன் காரணமாக ஆறு விதமான தீமைகள் விளைவதாக எச்சரிக்கின்றது. அவையாவன: 1. செல்வத்தை இழத்தல் 2. வீண் வம்புகளில் மாட்டிக்கொள்ளல் 3. நோய்கள் ஏற்படுதல் 4. நற்பெயரை இழந்து விடுதல் 5. வெட்கத்தை இழந்து விடுதல் 6. புத்தி மழுங்கிப் போதல்.

உணவு பற்றிய கிறிஸ்தவ அறிவுரைகள் தொடர்பான சில பைபில் வசனங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்து இருப்பினும் அது அசைபோடாது: அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். இவற்றின் மாமிசத்தைப் புசிக்கவும், இவற்றின் உடல்களைத் தொடவும் வேண்டாம்: இவை உங்களுக்குத் தீட்டாயிருக்கடவது (லேவியராகமம் 7,8)

 பன்றியும் புசிக்கத்தகாது. அது விரிகுளபுள்ளதாக இருந்தும், அசைபோடாதிருக்கும், அது உங்களுக்கு அசுத்தமயிருப்பதாக. இவற்றின் மாமிசத்தைப் புசியாமலும் இவற்றின் உடலைத் தொடாமலும் இருப்பீராக -உபாகமம் 14:8

இனி திருமறை அல்குர்ஆன் உணவு பற்றி கூறும் சில வழிகாட்டல்களைப் பார்ப்போம்:

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. -2:168 அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்; -5:88

முன்பு குறிப்பிட்டது போல மதங்கள் உணவு தொடர்பான சட்டதிட்டங்களை இட்டிருப்பதுடன், விஞ்ஞான ஆய்வுகள் கூட அவற்றின் உட்கருத்தை இன்று உறுதிப்படுத்தி வருகின்றன. இருந்தாலும் பன்றியின் மாமிசத்தின் தீமை, அல்லது ஹறாம் போன்ற சொற்கள் குறிப்பிடப்படும்போது அது இஸ்லாமிய சட்டதிட்டங்கள் என்றே பொதுவாக கருதப்படுகின்றன. இதற்கான மற்றுமொரு காரணம் இவ்விடயங்கள் பற்றிய போதுமான அறிவு இல்லாமையேயாகும்.

பன்றியின் மாமிசம் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகின்றது?

மனிதனின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் URIC ACID பன்றியின் இரத்தத்தில் அதிகளவு இருப்பது ஆய்வுகள் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. இதில் 2% மட்டுமே உடலின் அனுசேபச் செயற்பாடு மூலம் அப்புறப் படுத்தப்படுவதுடன், மிகுதி 98% உடலிலேயே தரிபட்டு பெரும் தீமையை ஏற்படுத்துகின்றது.

மேலும் தற்கால ஒட்டுண்ணியல் விஞ்ஞானம் பன்றியில் காணப்படுகின்ற Plattyhelminthus வகையைச்சேர்ந்த நாடாப்புழுவும் (Taenia solium), ட்ரிக்கீனா (Triquina) எனப்படும் வட்டப்புழுவும் மனிதனை தொற்றுவதால் அபாயகரமான நோய்கள் ஏற்படுகின்றன எனத் தெரிவிக்கின்றது.

ஹலால், ஹறாம் நியதிகள் உணவு வகைகளுக்கு மட்டும் தானா?

ஹலால், ஹறாம் என்ற சொற்கள் அனுமதிக்கப்பட்டவை மற்றும் அனுமதிக்கப்படாதவை என்ற கருத்துள்ள சொற்கள் என்றபடியால், இந்நியதி பல விடயங்களுக்குப் பயன் படுத்தப்படுகின்றன. நாம் அணியும் ஆடை, திருமணம், நமது பேச்சு, பிரயாணம், நம்முடைய கொடுக்கல் வாங்கல் முறைகள் உட்பட்ட ஏனைய அனைத்து நடவடிக்iகைகளிலும் ஹறாம், ஹலால் என்ற நியதிகள் உள்ளன. உதாரணமாக திருமணம் செய்யும் போது நாம் மணமுடிக்க ஆகுமானவர்கள் (ஹலாலானவர்கள்) ஆகாதவர்கள் (ஹறாமானவர்கள்) என இரண்டு விடயங்களும் கவனத்திற் கொள்ளப்படும்;.

உணவு வகைகளுக்கு ஹலால் சான்று வழங்கும் போது மனித உட்கொள்ளலுக்கு தகுதியானவைகளுக்கு மட்டுமே அது வழங்கப்படுவதுடன் தீமை பயக்கும் எந்த உற்பத்திக்கும் அது வழங்கப்படுவதில்லை என்ற விடயம், இச்செயற்பாட்டை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்குப் புலனாகும். இவ்வுயரிய அம்சத்தை பற்றி புரிந்துள்ள முஸ்லிம் அல்லாதவர்களில் பலரும் இன்று ஹலால் சான்றிதழ் மூலம் அத்தாட்சிப்படுத்தப்பட்ட தயாரிப்புகளை கேட்டு வாங்கும் போக்கு அதிகரித்து வருவதன் இரகசியம் இதுவே.

ஹலால் சான்றிதழ் பெறுபவர்களில் 80 சதவீதமான நிறுவனங்கள் முஸ்லிம் அல்லாதோருடைய நிறுவனங்களாக இருப்பது நம்முடைய இக்கூற்றை மேலும் ஊர்ஜிதம் செய்கின்றதுடன், ஹலால் சான்றிதழ் பெற்றதன் பின்பு தமது உற்பத்திகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக பல உற்பத்தியாளர்கள் கூறுவதும் இதற்கான மற்றுமொரு சான்றாகும்.

ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை எந்த அளவு சிரமத்தோடும் அர்பணிப்போடும் மேற்கொள்ளப்படுகின்றது என்ற விடயம் பெரும்பாலான நுகர்வோருக்கும், ஹலால் சான்றிதழ் பற்றி விமர்சிப்பவர்களும் அறியாத மற்றுமொரு விடயமாகும்.

ஒரு பொருளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதானது, மேலோட்டமாக மட்டும் அதை பரிசோதிப்பதன் பின்பு மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடன்று. மாறாக ஒரு உணவு அல்லது பான வகைக்கு பயன் படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் தீவிர ஆய்விற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், அது தொடர்பான ஆய்வுகூட அறிக்கைகள் அனைத்தும் ஹலால் நியதிகளின் படி இருந்தால் மட்டுமே அதற்கான ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகின்றது. சுகாதாரமான, தீங்குகளற்ற உணவு வகைகளைப் பெற்றுக்கொள்ள வழிசெய்ய வேண்டும் என்பதே ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதன் நோக்கமாகும். இதன் காரணமாகவே இன்று ஹலால் சான்றிதழை ஒரு மார்க்க அடிப்படை விடயமாக நோக்காமல், அப்பொருளின் சுத்தம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான ஒரு உறுதியான அத்தாட்சியாகவே முஸ்லிம் அல்லாத நுகர்வோர் பலர் ஏற்கும் நிலையும், அவர்கள் ஹலால் சான்றுள்ள உணவு மற்றும் பானங்களை கேட்டு வாங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார அனுகூலங்கள்

பிறந்த தாய் நாட்டை விரும்பாதோர் எவரும் இல்லை. அதன் முன்னேற்றத்திலும் கரிசனை கொள்ளாதோரும் இருக்க மாட்டார்கள். அந்தவகையில் தான் ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியும் சீராக நடைபெற்று வருகிறது. ரொய்டர் செய்தி ஸ்தாபனம் 2006 ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் போது, வருடாந்த உலகளாவிய ஹலால் வர்த்தகம் அமெரிக்க டொலர் 2000 பில்லியனை ஈட்டும் ஒரு பிரமாண்டமான துறை என்ற விடயம் புலனாகியது. ஹலால் உணவு வகைகளை நுகரும் போக்கு தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளதால் தற்போது 2012 ஆம் ஆண்டில் இத்தொகை மேலும் அதிகரித்தே இருக்கும் என்பது நிச்சயம். இத்துறையில் தற்போது மிகச் சிறியதொரு பங்கையே நாம் பெற்றுள்ளோம். அதை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு முயல்வதும் நமக்கு மிகவும் தேவைப்படும் அந்நிய செலாவனியை பெற்றுக்கொள்ள வழிசெய்வதும் தேசத்தின் அவசியமாகும். ஆதன் மூலம் தற்போதைய அபிவிருத்தித் திட்;டங்களுக்கும் அது பெருமளவு உதவியாக இருக்கும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

முஸ்லிம் முஸ்லிமல்லாத என்ற வேறுபாடின்றி சுகாதாரத்ததை கவனத்திற் கொள்ளும் அனைத்து உலக நாடுகளும் ஹலால் உணவு வகைகளையே நாடுகின்றனர். இதன் காரணமாக பல நாடுகள் ஹலால் வர்த்தகத்தில் தத்தமது பங்குகளை அதிகரிப்பதற்குப் போட்டி போட்டு முன்னேறி வருகின்றன. அவற்றில் அவுஸ்திரேலியாஇ பிரெஸில், இந்தியா, சிங்கப்ப+ர் போன்ற முஸ்லிம் அல்லாத நாடுகளும் ஏன், தாய்லாந்து, சீனா, வியட்னாம் போன்ற பௌத்த நாடுகளும் இருக்கின்றன. இவ்விடயத்தில் அந்நாடுகளில் உள்ள இஸ்லாமிய ஹலால் அமைப்புகளின் முக்கியத்துவம் பற்றி அவ்வரசாங்கங்கள் நன்கு உணர்ந்துள்ளன. ஹலால் நியதிகளை பின்பற்றுவதால் தாம் அடைக்கூடிய பாரிய சுகாதார, பொருளாதார நன்மைகளை இனங்கண்டு, இவ்விஸ்லாமிய அமைப்புகளுக்குப் ப+ரண ஒத்துழைப்பும் வசதிகளையும் கண்ணியத்தையும் வழங்கி அதனூடாகப் பெரும் இலாபங்களைப் பெற்று வருகின்றன. இவ்வடிப்படையில் இன்று முன்னணியில் இருக்கும் தாய்லாந்து ஒரு ஜனநாயக அடிப்படையைக் கொண்ட, திறந்த பொருளாதாரக் கொள்கைப்படி செயற்பட்டு வரும் பௌத்த நாடாகும். மேலும் அந்நாடு மேற்படி 2000 பில்லியன் ஹலால் சந்தையில் 5.3மூ வீதத்தை சுவீகரித்துள்ளது.

ஹலால் ஏற்றுமதி நாடுகளில் 5 ஆவது இடத்தில் தற்போதிருக்கும் தாய்லாந்தில், ஹலால் சான்றிற்கான உலகின் மிகச்சிறந்த, அதியுயர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஹலால் விஞ்ஞான நிலையம் The Halal Science Centre -HSC இருக்கின்றது. 2003 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிலையமானது தாய்லாந்தின் பிரசித்தி பெற்ற கல்வி ஸ்தாபனமான சுலாலொங்கோன் பல்கலைக்கழத்தின் வளாகத்திலேயே செயற்பட்டு வருகின்றது. தாய்லாந்தில் உற்பத்தி செய்யப்படும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு பற்றி பரிசோதித்து ஹலால் நியதிகளுக்கு அவை உட்பட்டிருப்பதை உறுதி செய்து சான்று வழங்கும் பொறுப்பு இவ்வமைப்பிற்கே வழங்கப்பட்டுள்ளது. மேலும் தாய்லாந்து இஸ்லாமிய வங்கி, Islamic Bank of Thailand தாய்லாந்தின் ஹலால் உணவுத் தரத்திற்கான அமைப்பு Institute of Halal Food Standard of Thailand போன்ற துணை அமைப்புக்களும் அங்கு நிறுவனப்பட்டுள்ளன. இவை தவிர உலக சந்தைக்கு ஹலால் உற்பத்திகளை தயாரித்து வருவதில் ஈடுபட்டுள்ள ஒரு முழுமையான ஹலால் கைத்தொழில் நகரமொன்று தாய்லாந்தில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்துக்கும் அந்நாட்டு அரசு மதக் கோட்பாட்டுக் கணிப்பின்றி ஒரு பயனுள்ள செயற்பாடு என்பதை உணர்ந்து, அதற்காக முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றது. அதன் காரணமாகவே பொருளாதார அபிவிருத்தி கொண்ட நாடாக ஆக சாத்தியமாகியுள்ளது.

சுற்றுலாத்துறை

இலங்கை ஒரு சுற்றுலாப் பயணத்திற்கான நாடாகும். இங்குவரும் சுற்றுலாப் பயணிகள் மத்திய கிழக்கு நாடுகள், முஸ்லிம் அல்லாத நாடுகள் உட்பட்ட பல நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் மிக அழகிய நாடாகும். நம் நாட்டில் கிடைக்கப் பெறும் ஹலால் உணவு வகைகள் மூலம் இந்நாடுக்கு அதிக எண்ணிக்கை உல்லாசப் பயணிகள் வந்து செல்வதைக் காணமுடிகின்றது.

விமர்சனங்கள்

எத்துறைக்கும் விமர்சனங்கள் ஆரோக்கியமாவையே. விமர்சனம் செய்வதே முயற்சிகளை மேன்படுத்துகின்றன என்பதற்கு எதிர்வாதம் இருக்க முடியாது. பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட, பல கோடி பெறுமதியான சொத்துக்களை அழித்த மிக நீண்ட கால பிரிவினைவாத யுத்தம் ஒன்றை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள நிலையில் சுபீட்ஷமானதொரு எதிர்காலத்திற்காக இலங்கையில் வாழும் சகல இனங்களும் பாடுபடுகின்றன. நம் நாட்டு அரசும் நாட்டின் சுபீட்ஷத்திலே கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், மக்கள் மத்தியில் பரப்பி விடப்பட்ட சில குற்றச்சாட்டுக்கள் ஹலால் சான்றிதழை பற்றிய வெறுப்பையும் அச்சத்தையும் உருவாக்கி வருகின்றன. அவைகளின் உண்மை நிலைப்பற்றி சற்று கவனிப்போம்.

1. ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் உணவு வகைகள் அனைத்தும் அல்லாஹ்வின் பெயரால் பலி கொடுக்கப்பட்டவையே!

ஏற்கனவே கூறப்பட்டதுபோல் ஆகுமானது, ஆகாதது என்ற நியதிப்படியே ஆகாரங்கள் அமைகின்றன. இஸ்லாம் கூறியவண்ணம் நாம் உணவாகக் கொள்ளும் பொருட்களில் தடுக்கப்பட்ட கலவைகள்;, பதார்த்தங்கள் மற்றும் சேர்மானங்கள் ஏதும் உண்டா எனப் பார்ப்பதற்கே சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவைகள் இறைவனின் பெயரால் பலி கொடுக்கப்பட்டதாகக் கொள்ளப்படுவதில்லை இதனை ஹலால் சான்றிதழ் பெற்றுள்;ள நிறுவனங்களின் மூலம் எவருக்கும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

2. ஹலால் சான்றிதழைப் பெறுமாறு நிறுவனங்கள் வற்புறுத்தப்படுகின்றன

இலங்கையில் ஹலால் சான்றிதழ் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் ஹலால் பிரிவின் மூலமே வழங்கப்படுகின்றது. ஜம்இய்யா சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு இஸ்லாமிய அமைப்பே தவிர ஒரு அரச திணைக்களம் அல்ல. ஆகையால் எந்த ஒரு தனி நபரையோ நிறுவனத்தையோ தன்னுடைய ஹலால் சான்றிதழை பெறுமாறு வற்புறுத்தும் அதிகாரம் அதற்குக் கிடையவே கிடையாது. ஹலால் சான்றிதழை பெறுவதால் தங்களுடைய விற்பனை அதிகமாவதை புரிந்துள்ள வர்த்தக நிறுவனங்கள் அவற்றைத் தாமாகவே பெறுகின்றன என்பதும், அவை விண்ணப்பம் மூலமே வழங்கப்படுகின்றன என்பதுமே உண்மை. இதையும் ஹலால் சான்றிதழை பெற்றுள்ள நிறுவங்களை தொடர்பு கொண்டு விசாரித்தால் எவரும் அறிந்து கொள்ள முடியும்.

3.ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் வருமானம் இஸ்லாத்தை பரப்புவதற்கே செலவு செய்யப்படுகின்றது.

ஹலால் சான்றிதழ் வழங்கும் பிரிவு பெறும் கட்டணம் அதனது நிர்வாகச் செலவுக்கே பயன்படுத்தப் படுகின்றதேயன்றி வேறொன்றுக்குமில்லை. ஜம்இய்யாவின் ஹலால் பிரிவின் கணக்கு விடயங்கள் பிரசித்திப் பெற்ற கணக்காளர் நிறுவனம் ஒன்று மூலமே ஆடிட் (யுருனுஐவு) செய்யப்படுகின்றது. ஆகையால் எந்த விடயங்களுக்கு ஹலால் பிரிவு தன்னுடைய வருவாயை செலவு செய்கின்றது என்பது ஒரு வெளிப்படையான விடயமே. ஹலால் பிரிவானது இஸ்லாத்தைப் பிரசாரம் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதை நாம் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

4.ஹலால் சான்றிதழ் முறைமை காரணமாக, ஹலால் உண்ணும் கட்டாயமில்லாத முஸ்லிமல்லாதவர்களும் அதிக விலைகளை கொடுக்க வேண்டியுள்ளது

ஏனைய விமர்சனங்களை போன்றே இதுவும் அர்த்தமற்ற ஒன்றாகும். உற்பத்திப் பொருட்களின் விலை கட்டமைப்பு பற்றி சரியான தெளிவில்லாமை காரணமாவே இவ்வாறான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

இலங்கையில் பல உணவு மற்றும் குடிபான நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கும், குறிப்பாக ஹலால் உணவு வகைகளைக் கேட்கும் நாடுகளுக்கும் பாரிய அளவில் தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்து வருகின்றன. ஹலால் சான்றிதழ் பெறுவதை அவ்வாறான ஒரு நிறுவனம் நிறுத்திவிட்டால் முதற்கண் உள்ளுரில் விற்பனை வீழ்ச்சி அடைவதோடு, வெளிநாட்டு கேள்விகள் பெருமளவு இரத்தாகி, விற்பனையில் பாரிய சரிவு ஏற்பட்டு விடும். இதனால் தங்களுடைய உற்பத்திச் செலவுகளை சிறு அளவு உற்பத்திக்கே சேர்க்க வேண்டிய நிலை ஏற்படுவதால் அப்பொருட்களின் விலை மேலும் அதிகரிக்க நேரிடும். மாறாக ஹலால் சான்றிதழ் பெறுவதற்கு நிறுவனங்கள் செலுத்தும் சிறு தொகை மூலம் பொருட்களின் விலை ஒரு போதும் அதிகரிப்பது என்பது கிடையாது.

உதாரணமாக ஒரு கோழிப்பண்ணை மூலம் 20,000 முதல் 40,000 ஆயிரத்துக்குட்பட்ட தொகை மாதாந்தம் பெறப்படுகின்றது. உற்பத்தியாளர் தினமும் 15,000 முதல் 25,000 ஆயிரம் கோழிவரை அறுத்து சந்தைக்கு விடுகின்றனர், இந்நிலையில் சான்றிதழுக்கு ஒரு கோழி முலம் பெறப்படுவது சில சதங்கள் மாத்திரமே.

கோழிப்பண்ணை தவிர்ந்த ஏனைய உணவு உற்பத்தியாளர்களிடமிருந்து 700.00 ரூபாய் முதல் 25.000 வரை மாதாந்தம் கட்டணமாக பெறப்படுகின்றது. உற்பத்தியாளர் ஹலால் உற்பத்தியின் பயனாக உள்ளுர், வெளியூர் சந்தையிலும், சுற்றுலா மூலமும் ஆதாயம் பெறுகின்றனர். இந்நிலையில் சான்றிதழுக்கு ஒரு பொருளின் மூலம் பெறப்படுவது சதங்களை விட குறைவானதே மேலும் ஹலால் சான்றிதழிற்காக நிறுவனங்கள் வழங்கும் சிறு தொகை அவர்களின் வியாபாரத்தை கூட்ட வைத்துள்ளதே அன்றி பொருட்களின் விலை அதிகரிப்பதில்லை என்பது மிகத்தெளிவான ஒரு விடயமாகும். எனவே முஸ்லிமோ முஸ்லிமல்லாதவர்களோ ஹலால் பொருட்களுக்கு அதிக தொகை செலுத்தவேண்டிய தேவை என்ற பேச்சிற்கே இடமில்லை.

நாடு ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வேண்டி நிற்கின்றது. எனவே நாம் நமது கலாசார மற்றும் மத ரீதியான சிறு சிறு வித்தியாசங்களை ஒதுக்கி விட்டு ஒரு தாய் மக்களாகக் கைகோர்த்து நம் தாய் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல உறுதி கொள்வதே அறிவுடமையாகும் என்பதைக் கவனத்திற் கொள்வோமாக.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
 ஹலால் சான்றிதழ் பிரிவு

2 comments:

  1. Very Good, A Clear Illustration. Please translate to other language and publish to all online medias

    ReplyDelete
  2. The best thing that could be done at the moment is to avoid issuing Halal Certificate to non Muslim organisations and if they insist ask to produce consent letter from the Nayaka Theros!!!

    ReplyDelete

Powered by Blogger.