Header Ads



முஸ்லிம்களுக்கெதிரான பேரினவாத அடக்குமுறை!



(தம்பி)

மிளகாய் அரைத்தல் பற்றி நாம் எல்லோரும் அறிவோம். மிளகாயை அநேகமாக அம்மியில் வைத்துத்தான் அரைப்பதுண்டு. ஆனால், 'தலையில் மிளகாய் அரைத்தல்' என்கிற ஒரு சொற்றொடரும் உள்ளது. சாத்தியமற்ற அல்லது பொய்யான கதைகளை நம்மிடம் கூறி, அதை நம்பச்செய்வதற்கு ஒருவர் எடுக்கும் எத்தனத்தை 'தலையில் மிளகாய் அரைத்தல்' என்பார்கள். கதை சொல்லிதான் மிளகாய் அரைப்பவர். அரைக்கப்படும் தலை - கேட்பவருடையது!

முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் அண்மைக் காலமாக மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் குறித்து நாம் அறிவோம். ரகசியமாகவும், அடையாளத்தினை மறைத்துக்  கொண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வந்த பௌத்த பேரினவாத நடவடிக்கைகள், இப்போது மிக வெளிப்படையாக அரங்கேறி வருகின்றன. அதுவும், 'நாங்கள்தான் இதைச் செய்கிறோம்' என்று, தங்கள் அமைப்பின் பெயர்கள் பதிக்கப்பட்ட பதாதைகளைத் தூக்கிக் கொண்டு வந்து - முஸ்லிம் விரோத செயற்பாட்டில் பேரினவாதிகள் ஈடுபடுகின்றார்கள். 

இப்படியான முஸ்லிம் விரோத நடவடிக்கைகளில், 'பொது பல சேனா' என்கிற பௌத்த அமைப்பு அண்மைக் காலமாக மிகத் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றது. பதுளை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும், முஸ்லிம்கள் பற்றி பிழையான பிரசாரங்களை மேற்கொள்வதும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதும் - பொது பல சேனாதான். இந்த அமைப்பில் காவியுடை அணிந்த பிரபலமான பௌத்த மத போதகர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது!

முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளைக் கண்டித்து நமது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்மார்களோ இதுவரை ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடவில்லை. எனவே, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளும், கண்டி, பதுளை பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்களும் இணைந்து இவ் விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை சில நாட்களுக்கு முன்னர் சந்தித்துப் பேசினார்கள். 

இதன்போது, பாதுகாப்பு செயலாளர் கோட்டா கூறிய விடயம்தான் இங்கு அவதானத்துக்குரியது. அவர் சொன்னது இதுதான். 'சிங்கள மக்களிலுள்ள ஒரு சிறு எண்ணிக்கையானோர்தான் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் குறித்து முஸ்லிம்கள் அலட்டிக் கொள்ள தேவையில்லை' என்பதுதான் பாதுகாப்பு செயலாளர் கூறிய விடயமாகும்.  
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளை சில இணையத்தளங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறித்தும் பாதுகாப்புச் செயலாளரிடம் இதன்போது முஸ்லிம் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டினார்கள். இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மூலம் - இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கின்றார்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பேன் என்றோ, அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றோ – பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து எந்தவிதமான உறுதிப்பாடுகளும் கிடைக்கவில்லை.

பாதுகாப்பு செயலாளர் சொன்னதை வைத்து நாம் விளங்கிக் கொள்வது இதுதான். முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து நடந்தாலும், முஸ்லிம்கள்தான் அவை குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அதாவது, 'செய்பவர்கள் செய்யட்டும், நீங்கள் பொத்திக் கொண்டு இருங்கள்'!

பாதுகாப்புச் செயலாளரின் இந்தக் கூற்று ஆச்சரியமாக உள்ளது. சில காலங்களுக்கு முன்னர் கொழும்பு கோட்டைப் பகுதியிலுள்ள வீதியோரத்தில் சிறுநீர் கழித்த பொதுமகன் ஒருவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததையும், அந்த நபருக்கு நீதிமன்றம் தண்டம் விதித்ததையும் இந்த இடத்தில் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். அதாவது, அடக்க முடியாமல் ஆத்திர அவசரத்துக்கு பொது இடத்தில் சிறுநீர் கழித்த ஒருவருக்கே தண்டம் விதிக்குமளவு சட்டம் ஒழுங்கு பேணப்படுகின்ற இந்த நாட்டில் - ஒரு மூகத்தை நோகடிக்கும் வகையிலும், அதனூடாக இனங்களுக்கிடையிலான நல்லுறவுக்கும் அமைதிக்கும் பங்கமேற்படுத்தும் வகையிலும் செயற்படுகின்ற சிங்கள பேரினவாதிகள் குறித்து, பாதுகாப்பு செயலாளர் அலட்டிக் கொள்ளாமல் இருங்கள் என்று சொன்னமையானது – ஆச்சரியத்தைத் தவிர, வேறு எதைத் தரமுடியும் என்கிறீர்கள்?!

பொது பல சேனா என்கிற அமைப்பே அண்மைக் காலமாய் முஸ்லிம்களுக்கு எதிராக தீவிர இனவாதத்தோடு செயற்பட்டு வருகின்றது என்பதை அரசும், ஆட்சியாளர்களும் அறியாமல் இருக்க நியாயமில்லை. அப்படியென்றால், அந்த அமைப்பு மீது ஏன் சட்டவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது என்கிற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. ஆகக்குறைந்தது, இதற்கு இரண்டு பதில்கள் இருக்க வேண்டும். 01) முஸ்லிம்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதிகளின் நடவடிக்கையினை ஆட்சியாளர்கள் விரும்புகின்றார்கள். 02) முஸ்லிம் விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் பொது பல சேனா போன்ற அமைப்புக்கள் அரசின் ஆசிர்வாதம் பெற்றவையாக இருத்தல் வேண்டும். 

இதில் இரண்டு பதில்களுமே உண்மை என்கிறார் ஜாதிக ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த மேல் மாகாணசபை அமைச்சர் உதய கம்மன்பில. அவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். 'இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையின் பின்னணியில் அரசு உள்ளது. சிங்கள மக்களிடையே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செல்வாக்கைச் சரிப்பதற்காக – பொது பல சேனா அமைப்பை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. இதன் பின்னணியில் அரசுதான் செயற்படுகிறது'.

இந்த விடயத்தினை அமைச்சர் உதய கம்மன்பில காதும் காதும் வைத்தது போல் யாருக்கும் ரகசியமாகச் சொல்லவில்லை. மேல் மாகாணசபையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதுதான் இதைக் கூறினார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் உதய கம்மன்பில அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய என்பது அரசின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகும். ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்களில் ஒருவரான பற்றாலி சம்பிக்க ரணவக்க இந்த அரசின் மிக முக்கிய அமைச்சர்களில் ஒருவராகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசத்துக்குரியவராகவும் இருக்கின்றார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 
அப்படியென்றால், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் – பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றார்களா என்று உங்களில் யாரேனும் கேட்கின்றீர்களா? அதற்கான விடையை இந்தக் கட்டுரைக்குள்தான் நீங்கள் தேட வேண்டும். 

இன்னொரு புதினத்தைப் பார்தீர்களா? முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் இடம்பெற்று வரும் செயற்பாடுகளின் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாக அரசின் பங்காளிக் கட்சியைச் சேர்ந்த சிங்கள சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில கூறுகின்றார். ஆனால், அரசுக்கு எதிரானவர்களே முஸ்லிம் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று மு.காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவிக்கின்றார். இது தொடர்பாக கடந்த வாரக் கட்டுரையில் நாம் விரிவாக எழுதியிருந்தோம். 

இன்னொரு புறம், உணவுப் பொருட்களுக்கு இலங்கையில் ஹலால் முத்திரையிடும் நடைமுறையை அரசாங்கம் நீக்க வேண்டும் என்று சிங்களப் பேரினவாதிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். இஸ்லாமிய அடிப்படைக்கு உள்பட்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஹலால் முத்திரை இடப்படுகிறது. இலங்கையில் ஹலால் முத்திரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வழங்குகின்றது. இலங்கையில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் அல்லது விநியோகிக்கும் நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருளுக்கான ஹலால் முத்திரையைப் பெறுவதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு ஒரு தொகைப் பணத்தினைச் செலுத்த வேண்டும். குறித்த உணவுப் பொருட்கள் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்குட்பட்ட வகையில் தயாரிக்கப்பட்டவைதானா என்பதை உறுதி செய்த பின்னர் ஹலால் முத்திரை வழங்கப்படும். ஹலால் முத்திரையிடப்படாத உணவுப் பொருட்களை அநேகமாக முஸ்லிம்கள் கொள்வனவு செய்வதில்லை. முஸ்லிம்களிடையே தமது பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமென்பதற்காகவே நிறுவனங்கள் ஹலால் முத்திரையினைப் பெற்றுக் கொள்கின்றன. 

'ஹலால் முத்திரையைப் பெறுவதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு செலுத்தப்படும் கட்டணத் தொகையானது பொருட்களின் விலையுடன் இணைக்படுகிறது. அவ்வாறு இணைக்கப்படுவதால், ஹலால் முத்திரையிடப்பட்ட பொருளுக்கு அதன் உண்மை விலையிலும் அதிகமான தொகையினை நுகர்வோர் செலுத்த வேண்டியிருக்கிறது. எனவே, ஹலால் முத்திரை என்கிற சமாச்சாரத்தினையே நீக்கி விட்டால், அதற்காக செலுத்தப்படும் கட்டணம் இல்லாமல் போய், பொருளுக்கான விலையும் குறைவடையும்' என்கிறார்கள் - ஹலால் முத்திரைக்கு எதிரான பிரச்சாரத்தினை மேற்கொள்ளும் இனவாதிகள்!

உண்மையில், இது - ஹலால் முத்திரையிடப்பட்ட பொருளுக்கு அதிக விலை செலுத்த வேண்டும் என்பதால் எழுந்துள்ள கோசமல்ல! இது இஸ்லாத்துக்கு எதிரான மிகத் திட்டமிடப்பட்ட சிந்தனையாகும். விஷயத்தை நேரடியாகச் சொல்லாமல், சுற்றி வளைக்கின்றார்கள் இனவாதிகள். 

தமது உற்பத்திப் பொருட்களுக்கு ஹலால் முத்திரையை இடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை எந்தவொரு நிறுவனத்தினையும் வற்புறுத்துவதில்லை.  நிறுவனங்கள் - தமது பொருட்களை ஹலாலான முறையில் உற்பத்தி செய்வதும், ஹலால் முத்திரையினைப் பெறுவதும் தமது விற்பனையினை அதிகரித்துக் கொள்வதற்கேயாகும். ஹலால் முத்திரை இடப்பட்டிருப்பதால் அந்த உணவுப் பொருளை ஒரு பௌத்தரோ, ஹிந்துவோ உண்ணாமல் விடுவதில்லை. ஆனால், ஹாலால் முத்திரை இடப்படாத உணவுப் பொருட்களை முஸ்லிம்கள் உண்பதில்லை. இதுதான் உண்மை, இதுதான் யதார்த்தம்!

ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஹாராம் (விலக்கப்பட்டது) தொடர்பில் முஸ்லிம்களிடையே உள்ள பேணுதலினையும், மன உணர்வினையும் மழுங்கடிக்கச் செய்யும் திட்டத்தின் ஒரு முயற்சிதான் ஹலால் முத்திரையினை நீக்க வேண்டும் எனும் கோசமாகும். நாடாளுமன்ற உணவுச்சாலையில் வழங்கப்படும் பகல் உணவில் பன்றி இறைச்சிக் கறி வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கை இந்தத் திட்டத்தின் மற்றொரு முனைப்பாகும். 

ஹராம், ஹலால் என்கிற பேணுதலில் இருந்து - ஒரு முஸ்லிம் விடுபடுவாராயின்,  இஸ்லாத்திலிருந்து அவரைத் தூரமாக்குவது மிக இலகுவாகும். கூர்மையாக நோக்கினால், இலங்கையிலுள்ள முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து தூரமாக்க வேண்டும் என்பதற்கான மிகத் திட்டமிட்ட சிந்தனைகளே இவையாகும்.  

நமது முஸ்லிம் அரசியல்வாதிகளில் பலருக்கு இது புரியாது. புரிந்தவர்களுக்கு உறைக்காது. இந்த உறைப்பென்பது மிளகாய் அரைப்பதால் ஏற்படுவதல்ல. இது வேறு வகையானது! சமூக உணர்வு உள்ளவர்களுக்கு மட்டுமே உறைக்கும்!
·

No comments

Powered by Blogger.