பலஸ்தீன் பூமியில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் சட்டவிரோத பல்கலைக்கழகம் அமைக்கிறது
பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் உள்ள ஏரியல் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு இஸ்ரேல் அரசு தனது நாட்டின் பல்கலைக்கழகம் என்ற அங்கீகாரத்தை அளித்துள்ளது. இக்கல்வி நிறுவனம் மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலியர்கள் குடியேற்றப்பகுதியில் அமைந்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் மத்திய பகுதி (மேற்குக் கரை உள்ளிட்ட பகுதி) கமாண்டர் நிட்ஸôன் அல்லானுக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எகுத் பராக் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் தனது உத்தரவில், அரசு ஆலோசனையின்படி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ""இஸ்ரேலுக்கு மேலும் ஒரு பல்கலைக்கழகம் கிடைத்துள்ளது. இது நாட்டின் உயர் கல்வியை மேம்படுத்த உதவும்'' என்றார்.
முன்னதாக இஸ்ரேலில் உள்ள 7 பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் இஸ்ரேல் உயர் கல்வி கவுன்சில், அரசின் இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது. அரசியலுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனக் கூறிய அக்கவுன்சில், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
பார் இலான் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏரியல் கல்வி நிறுவனத்தில், மருத்துவம், பொறியியல், சமூக அறிவியல், அறிவியல் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் 12,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பாலஸ்தீனப் பகுதிகளில் புதிய குடியேற்றங்களை ஏற்படுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், மேற்குக்கரையில் உள்ள கல்வி நிறுவனத்துக்கு, இஸ்ரேல் பல்கலைக்கழக அங்கீகாரம் அளித்துள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment