மாலி நாட்டில் புரட்சி - வீட்டிற்குள் புகுந்து பிரதமரை கைதுசெய்த இராணுவம்
ஆப்பிரிக்க கண்டத்தில் மேற்கு பகுதியில் உள்ள மாலி நாடு. இந்த நாட்டில் பிரதமராக சேக்மோடிபோடியரா இருந்து வருகிறார். இவர் தலைநகரம் பமோகாவில் தனது வீட்டில் இருந்த போது 20 ராணுவ வீரர்கள் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர்.
கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அவர்கள் பிரதமரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அவரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். நாட்டில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தும் வகையில் பிரதமரை கைது செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
மாலி நாட்டில் முன்பு புரட்சியில் ஈடுபட்ட அமேதோசாங்கோ என்பவருடைய உத்தரவின் பேரில் ராணுவம் பிரதமரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பிரதமர் டேப் செய்த செய்தி ஒன்றை டெலிவிஷன் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். அது உடனடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஆனால் இதுபற்றி அறிந்ததும் ராணுவத்தினர் டெலிவிஷன் நிலையத்திற்கு சென்று அந்த டேப்பை கைப்பற்றினார்கள். டெலிவிஷன் நிலையத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அடுத்த கட்டமாக என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. ராணுவத்தினர் அங்கு ஆட்சியை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் சேக்மோடிபோடியரா கடந்த ஏப்ரல் மாதம் தான் பிரதமர் பதவியை ஏற்றார். இவரது மாமனார் மவுசாத்துரோன் ஏற்கனவே மாலி நாட்டில் ஜனாதிபதியாக இருந்துள்ளார். பிரதமர் சேக்மோடிபோடியரா பிரபல விஞ்ஞானி ஆவார். அமெரிக்கா நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment