மட்டக்களப்பு மாவட்ட இளைஞர், யுவதிகளின் கவனத்திற்கு...!
(ஏ.எல்.நிப்றாஸ்)
தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் 14 தொழிற்பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் 42 கற்கைநெறிகளுக்கு 2013ஆம் ஆண்டுக்காக பயிலுனர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இலங்கை மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழில்சார் தகைமை (என்.வி.கியு.) அடிப்படையிலான இப்பயிற்சிநெறிகளுக்கு பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த மற்றும் இடைவிலகிய இளைஞர், யுவதிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட பயிற்சி முகாமையாளர் எம்.பி. நளீம் தெரிவித்தார்.
இதற்கமைய - வந்தாறுமூலை தொழிற்பயிற்சி வளாகத்தினால் வழங்கப்படும் தளபாட உற்பத்தி, மின்னியல் தொழில்நுட்பம், வாயுசீராக்கல் மற்றும் குளிரூட்டலில் தேசிய சான்றிதழ், மோட்டார் வாகன தொழில்நுட்பம், மோ.சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி திருத்துனர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், இலத்திரனியல் தொழில்நுட்பம், இயந்திரவியல் தொழில்நுட்பம், அழகுக் கலைஞர் மற்றும் சிகை அலங்காரத்தில் தேசிய சான்றிதழ் போன்ற பாடநெறிகளுக்கும் ஆரையம்பதி தொழிற்பயிற்சி நிலையம்; வழங்கும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், அழகுக் கலைஞர் மற்றும் சிகை அலங்காரம் போன்ற கற்கைகளுக்கும் வாழைச்சேனை தொ.ப.நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், நீர்க்குழாய் பொருத்துனர் ஆகிய பாடநெறிகளுக்கும் வெல்லாவெளி நிலையத்தின் மரக் கைவினைஞர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், நீர்க்குழாய் பொருத்துனர், தையல் பாடநெறிகளுக்கும் காத்தான்குடி பயிற்சி நிலையத்தினால் வழங்கப்படும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலாளர், கணிய அளவையியலில் டிப்ளோமா பாடநெறிகளுக்கும் ஓட்டமாவடி பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் கற்கைக்கும்; ஏறாவூர் மற்றும் கல்லடி தொ.ப. நிலையங்களால் வழங்கப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ் பயிற்சி நெறிக்கும் விண்ணப்பிக்க முடியும்.
அதேபோன்று பட்டிப்பளை தொழிற்பயிற்சி நிலையத்தின் மின்னியல் தொழில்நுட்பம், கட்டட கைவினைஞர், தொழில்சார் தையல் கற்கைகளுக்கும் வாகரையிலுள்ள பயிற்சி நிலையத்தின் மேசன், மரக் கைவினைஞர் பயிற்சிநெறிகளுக்கும் ஓந்தாச்சிமடம் தொ.ப. நிலையத்தின் மோ.சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி திருத்துனர், படகு இயந்திரத் தொழில்நுட்பம், அலுமீனியம் பொருத்துனர், விவசாய உபகரண தொழில்நுட்பம் போன்ற பயிற்சிகளுக்கும் களுவாஞ்சிக்குடி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், நீர்க்குழாய் பொருத்துனர், தையல், மின்னியல் தொழில்நுட்பம், இலத்திரனியல் தொழில்நுட்பம், உருக்கு ஒட்டுவேலை தொழில்நுட்பம் கற்கைகளுக்கும் வவுணதீவு தொ.ப.நிலையத்தினால் வழங்கப்படுகின்ற மரக் கைவினைஞர், மேசன், நீர்க்குழாய் பொருத்துனர் ஆகிய பயிற்சிநெறிகளுக்கும் செம்மண்ணோடை பயிற்சி நிலையத்தின் நீர்க்குழாய் பொருத்துனர் பயிற்சிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தேர்ச்சி அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்படும். என்.வி.கியு. மட்டம் 3 மற்றும் 4 அடிப்படையிலான இக் கற்கைநெறிகளை திருப்திகரமாக பூர்த்தி செய்வோருக்கு அரச அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன் தெரிவுசெய்யப்பட்ட பயிற்சிநெறிகளின் பயிலுனர்களுக்கு மாதாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவும் பஸ் பயணத்திற்கான பருவகாலச்சீட்டும் பெற்றுக் கொடுக்கப்படும்.
Post a Comment