சிறைச்சாலையில் பூரி சுடுவதற்கு அனுமதி கேட்டு கைதிகள் போராட்டம்
இந்தியா - சேலம் மத்திய சிறையில், கைதிகள் பூரி சுட்டு சாப்பிட, அதிகாரிகள் தடை விதித்ததால், ஆத்திரமடைந்த கைதிகள், எட்டு பேர், பூரி சுட தங்களுக்கு அனுமதி வழங்க கோரி, 06-12-2012 சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.அதை அடுத்து அவர்களிடம் சிறை அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்திய பின், போராட்டத்தை கைவிட்டனர்.
சேலம் மத்திய சிறையில், 745 கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மத்தியில் தடை செய்யப்பட்ட மொபைல் போன், கஞ்சா ஆகியவற்றின் நடமாட்டம் அதிகரித்தது. அது மட்டுமின்றி, சிறையில் தாங்கள் அடைக்கப்பட்டு இருந்த அறைகளில், பூரி உள்ளிட்ட பொருட்களை சமைத்து சாப்பிட்டு வந்ததாக தெரிந்தது.இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள்,சோதனை மேற் கொள்ள முடிவு செய்தனர். சில நாட்களுக்கு முன் ஜெயிலர் ஊர்மிளா, சிறையில் உள்ள அறைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, பிளாக் எண். 8ல், உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ள, சேலம் மாவட்டம் ஓமலூரை அர்ஜுனன், 24, அறையில் பூரி சுட்டதை கண்டு பிடித்தார். அதை அடுத்து அவனை எச்சரித்த ஜெயிலர் ஊர்மிளா, அறையை மாற்றவும் உத்தரவிட்டார். பூரி சுட வசதியாக எல்லாப் பொருட்களும் கிடைத்தது எப்படி என்றும் விசாரித்தார்.
நேற்று முன்தினம், அர்ஜுனன், வேறு அறைக்கு மாற்றப்பட்டான். அவன் மட்டுமின்றி, அவன் அறையில் அடைக்கப்பட்டு இருந்த பிற கைதிகளும் வேறு அறைக்கு, மாற்றம் செய்யப்பட்டனர்.நேற்று காலை, வழக்கம் போல் அறையில் இருந்து வெளியேறிய கைதிகளில், அர்ஜுனன், திடீர் என, பிளாக் எண். 8, அருகே இருந்த மரத்தில் ஏறி, தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தான். அவனுக்கு ஆதரவாக ஏழு பேர், மரத்தில் ஏறி தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
மேலும், அவர்கள், தங்களின் அறைகளில் சோதனை நடத்தக் கூடாது; பூரி உள்ளிட்ட உணவுகளை சமைத்து சாப்பிட அனுமதிக்க வேண்டும்; மேலும், மீண்டும் ஒரே அறையில், தங்களை அடைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இவர்களிடம் ஜெயிலர் ஊர்மிளா பேச்சுவார்த்தை நடத்தினார்.கண்காணிப்பாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால், மட்டுமே போராட்டத்தை கை விடுவோம் என, தெரிவித்தனர். அதை அடுத்து கண்காணிப்பாளர், பேச்சுவார்த்தை நடத்தி, கைதிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
Post a Comment