Header Ads



வடக்கு முஸ்லிம்களின் அவலம் - தென்னாபிரிக்காவிடம் முறையிட்டார் ஹக்கீம் (படம்)



இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பை இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியமும், அதில் முஸ்லிம்களின் பரிணாமத்தின் முக்கியத்துவமும் தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் ஜியோப்ரி டொய்ஜ், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் பொழுது விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

ஒருவாரத்திற்கு முன்னர் இத்தாலிக்குச் சென்றிருந்த அமைச்சர் ஹக்கீம் நாடு திரும்பிய பின்னர், வெளிநாட்டு முக்கியஸ்த்தர் ஒருவர் மேற்கொண்ட முதலாவது சந்திப்பு இதுவாகும். 

இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளில் போதிய முன் அனுபவத்தைக் கொண்டுள்ள தென்னாபிரிக்க அரசாங்கம் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான முன்னெடுப்புகளில் கூடுதல் கரிசனை காட்டி வரும் நிலையில், அதன் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் ஜியோப்ரி குயின்டன் டொய்ஜ் தமது நாட்டுக்கு பயணமாகுவதற்கு சற்று முன்னர் அவசரமாக நீதியமைச்சர் ஹக்கீமை அவரது இல்லத்திற்குச் சென்று திங்கள் கிழமை (17-12-2012) மாலை சந்தித்து உரையாடினார். அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீட உறுப்பினர்களும், சட்டத்தரணிகளுமான நிஸாம் காரியப்பர் (பிரதி மேயர் கல்முனை), ஏ.எம். பாயிஸ் ஆகியோரும் அப்பொழுது பிரசன்னமாகியிருந்தனர். 

உத்தேச இனப்பிரச்சினைக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பங்குபற்றச் செய்வதன் மூலமே இனங்களுக்கிடையிலான விரிசல்களையும், துருவப்படுத்தலையும் வெகுவாக குறைக்க முடியுமென நம்பிக்கை வெளியிட்ட உயர்ஸ்தானிகர் இனப்பிரச்சினையில் முக்கிய பரிமாணமாக கருதப்படும் முஸ்லிம் தரப்பின் முக்கியத்துவம் பற்றி அமைச்சர் சுட்டிக்காட்டியதன் மூலமே தாம் அதிகமாக அறிந்துகொண்டதாகச் சொன்னார். 

இனப்பிரச்சினை தீர்வை அடிப்படையாகக் கொண்டு தென்னாபிரிக்காவுக்கான விஜயங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும், ஏனைய உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் வழங்கிய  தமது நாட்டு அரசாங்கம் அதற்கானதொரு வாய்ப்பை  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவிற்கும் விரைவில் ஏற்படுத்தித் தருவதாக உயர் ஸ்தானிகர் கூறினார். 

இனப்பிரச்சினையினால் ஏற்பட்ட விளைவுகளால் வடகிழக்கு முஸ்லிம்கள் நேரடியாக பாதிக்கப்பட்டதாகவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களும் அதனால் குறிப்பிடத்தக்க பாதிப்புகளுக்கு உள்ளானதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கையில் முஸ்லிம் தரப்பினர் பற்றி போதியளவு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லையென்பதையும் அவர் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.   

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட துக்ககரமான சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு இன்னல்களை அனுபவித்த அவர்கள்,  வேறு மாவட்டங்களில் வசித்த பின்னர் யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் மீண்டும் தமது முன்னைய வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்ல விரும்பும் சந்தர்ப்பத்தில் அவர்கள் மீள்குடியேறுவதற்கான உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, பொருளாதார வசதிகள் உரிய முறையில் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கப்படாததையிட்டு அமைச்சர் ஹக்கீம் கவலை தெரிவித்ததோடு  வெறும் இருபத்தையாயிரம் ரூபா (200 டொலர்கள்) பணத்தைக் கொண்டு எவ்வாறு சென்று மீள்குடியேற முடியுமென்றும் அவர் கூறினார். 

இந்தச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட உயர்ஸ்தானிகர் இனப்பிரச்சினை காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்ட இந் நாட்டின் இன்னொரு  சமூகமான முஸ்லிம் மக்கள் பற்றிய விவகாரம் மறக்கப்பட்ட அம்சமாக ஆகிவிட்டதையிட்டு வருத்தம் தெரிவித்ததோடு, இந்த விஷயத்தில் சில மாதங்களுக்கு முன்னர் இங்கு வந்து அமைச்சர் ஹக்கீமைச் சந்தித்த அவருக்கு நன்கு பரிச்சயமான தென்னாபிரிக்காவின் பிரதியமைச்சர் இப்ராஹிம் அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறியதோடு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸை வழிநடாத்தும்  தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா இலங்கை இனப்பிரச்சினை பற்றி போதியளவு தெரிந்து வைத்திருப்பதாகவும் சொன்னார். 

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளில் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் காட்டி வரும் அக்கறை பற்றி இம் மாத முற்பகுதியில்  நியூயோர்க்கில் இருந்து இங்கு விஜயம் செய்த ஐ.நா சபையின் நிரந்தர பிரதிநிதிகள் சிலர் அடங்கிய குழுவினர் மத்தியில் அமைச்சர் ஹக்கீம் சிலாகித்துக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர் 




No comments

Powered by Blogger.