சிரியாவில் ரொட்டி வாங்க காத்திருந்த மக்கள் மீது வான்வழி தாக்குதல் - 90 பேர் மரணம்
சிரியா அதிபர், பஷர் அல்-அசாத் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள், கடந்த 21 மாதங்களாக போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களை ஆயுத பலத்தால், அடக்கி ஒடுக்க அரசு முயற்சித்து வருகின்றது. இதனையும் மீறி அந்நாட்டில் சில பகுதிகளை போராட்டக்காரர்கள் கைப்பற்றி, தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
போராட்டக்காரர்களிடம் பறிகொடுத்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற சிரியா ராணுவம் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகின்றது. சில வேளைகளில், சர்வதேச போர் விதிமுறைகளை மீறும் வகையில் விமான தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.
இதுவரை நடைபெற்ற தாக்குதல்களுக்கு சுமார் 44 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். போராட்டக்காரர்கள் கையகப்படுத்தி வைத்துள்ள பகுதிகளுக்கு உணவுப் பொருட்கள், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை அரசு தடுத்து நிறுத்தி வைத்துள்ளது.
எனவே, சில பகுதிகளில் கடுமையான மின் வெட்டும், உணவு பற்றாக்குறையும் நிலவுகின்றது. சிரியா மக்களின் உணவான ரொட்டியை தயாரிக்கும் மாவுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரொட்டிகளை தயாரித்து விற்கும் பேக்கரிகளும் மூலப்பொருளான மாவும், இயந்திரங்களை இயக்க தேவையான மின்சாரமும் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன.
இந்நிலையில், மத்திய சிரியாவில் உள்ள ஹாமா மாகாணத்தின் ஹல்பாயா நகரில் உள்ள ஒரு பேக்கரியின் முன்பு நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ரொட்டி வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தனர். இந்த பகுதியை கடந்தவாரம் நடைபெற்ற போரில் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் தங்கள் வசம் வைத்திருந்தனர்.
திடீரென்று பறந்து வந்த போர் விமானங்கள், ரொட்டி வாங்குவதற்காக பேக்கரி முன்பு காத்திருந்த பொதுமக்கள் மீது குண்டு மழை பொழிந்தது. தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்று செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதால், பலியானவர்கள் தொடர்பான சரியான தகவல்களை அறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 90க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது.
Post a Comment