Header Ads



எகிப்தில் வன்முறை - 500 பேர் காயம் - ஜனாதிபதி மாளிகையை சுற்றி யுத்த டாங்கிகள்



எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சியின் ஆதரவாளர் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து கெய்ரோவிலுள்ள ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி இராணுவ டாங்கிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

எகிப்தின் சர்ச்சைக்குரிய அரசியல் அமைப்பின் மீது ஜனாதிபதி எதிர்வரும் 15 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது. எனினும் திட்டமிட்டவாறு சர்வஜன வாக்கு நடைபெறும் என அரசு உறுதி அளித்துள்ளது.

எனினும் எகிப்தில் தொடரும் அரசியல் நெருக்கடி தற்போது மோதலாக மாறி இருப்பது அபாயகரமான அறிகுறி என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

 புதன்கிழமை மாலை எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் கூடாரமிட்டு இருக்கும் நிலையில் ஆயிரக் கணக்கான ஜனாதிபதி ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையில் மோதல் மூண்டது. இதன்போது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளால் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்திக் கொண்டனர். இதில் துப்பாக்கிச் சூட்டு சத்தங்களும் கேட்டதாக தெரிகிறது. இந்த மோதலின் போது எதிர்ப்பாளர்களின் கூடாரங்களை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் கிழித்து எறிந்தனர்.

மோதல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையை விட்டு இருதரப்பினரும் ஒரே நேரத்தில் வெளியேற முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் அழுத்தம் கொடுத்தனர். 

‘இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் வெளியேற வேண்டும். அதேபோன்று அடையாள முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பக் கூடாது என வலியுறுத்தப்பட வேண்டும்’ என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அறிவித்துள்ளது.

எகிப்தின் ஏனைய நகரங்களிலும் மோதல்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக இஸ்மைலியா மற்றும் சுவெஸ் பகுதியின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. அத்துடன் கெய்ரோவின் புறநகர் பகுதியான மொகத்தமில் அமைந்திருந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினரின் தலைமையகத்தின் முன்னாலும் எதிர்ப்பாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் சொபி சலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற மோதலில் 5 பேர் கொல்லப்பட்டதோடு 446 பேர் காயமடைந்ததாக சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியி ட்டுள்ளது. 

இந்நிலையில் இராணுவம் ஜனாதிபதி மாளிகையை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதனையொட்டி அங்கு 5 டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதோடு ஒன்பது வாகனங்களில் ஆயுதம் ஏந்திய படையினர் அழைத்துவரப்பட்டு ஜனாதிபதி மாளிகையை சுற்றி நிறுத்திவைக்கப் பட்டுள்ளனர். எனினும் ஜனாதிபதி மாளிகையை அண்டிய பகுதிகளில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் தொடர்ந்தும் தங்கியுள்ளனர். அதில் பலர் அல்குர்ஆனை ஓதியவாறு அங்கு தரித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வன்முறைகளை தொடர்ந்து ஜனாதிபதி முர்சியின் 17 பேர் கொண்ட ஆலோசகர்களில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். எகிப்தில் தற்போது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் ஏனைய இஸ்லாமியவாதிகள் ஒருதரப்பாக ஜனாதிபதி முர்சிக்கு ஆதரவளித்து வருவதோடு மிதவாதிகள், மதச் சார்பற்றோர் மற்றும் கிறிஸ்தவர் மற்றொரு தரப்பாக ஜனாதிபதிக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இதில் ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட தமக்கு வரம்பற்ற அதிகாரங்களை சூட்டிக்கொள்ளும் ஆணையை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமியவாதிகளால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பை ஒத்திவைக்க வேண்டும் எனவும் எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். tn

No comments

Powered by Blogger.