நிலத்துக்கடியில் 27 ஆவது அணுசோதனையை நடாத்தியது அமெரிக்கா - ஜப்பான் கண்டனம்
அமெரிக்கா பூமிக்கு அடியில் அணு வெடிப்பு அல்லாத அணுச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரகசிய இடத்தில் போலக்ஸ் என்ற பெயரில் இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது.
இது அணுக்களை மோதச் செய்து, அதன் விளைவுகளை ஆராயும் சோதனை அல்ல. எனவே, இதில் அணுத் தொடர் விளைவோ, அணு வெடிப்போ நிகழவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய 27ஆவது அணுச் சோதனை இதுவாகும். இதில் கிடைக்கும் தகவல்கள், அமெரிக்க அணு ஆயுதங்களின் பாதுகாப்பு மற்றும் திறனைப் பராமரிக்க உதவும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தகைய சோதனை ஏற்கெனவே 2011, பிப்ரவரி 2ல் நடத்தப்பட்டது.
ஜப்பான் கண்டனம்: இதனிடையே, உலகின் முதல் அணுகுண்டு வீச்சால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் மேயர், காசுமி மாட்சுய், அமெரிக்கா அணுச்சோதனை நடத்தியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ""அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்ற உலகளாவிய அறைகூவலுக்கு எதிராக இச்சோதனை அமைந்துள்ளது'' என்று குறிப்பிட்டார். ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அணு குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்களும் அமெரிக்காவின் அணுச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Post a Comment