அமெரிக்காவில் 22 குழந்தைகளை படுகொலை செய்தவன் பற்றிய புது தகவல்கள் வெளியாகின
அமெரிக்காவில், சிறு குழந்தைகள் படிக்கும் துவக்க பள்ளியில், இரண்டு இயந்திர துப்பாக்கிகளுடன் சென்ற, 2ண்0 வயது வாலிபன் நடத்திய, கொடூரமான துப்பாக்கி சூட்டில், 22 குழந்தைகள் உட்பட, 28 பேர் கொல்லப்பட்டனர். குழந்தைகளை சுட்டுக் கொன்ற கொடியவன், தன் தாயையும் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டான்.
அமெரிக்காவில், கனெக்டிகட் நகரின், நியூடவுன் என்ற இடத்தில், சாண்டி ஹூக் துவக்கப் பள்ளி உள்ளது. மரங்கள் அடர்ந்த, சுற்றிலும் உயர்ந்த மதில் சுவர்களுடன், அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட இந்தப் பள்ளியில், நான்காம் வகுப்பு வரை மட்டுமே படிக்க வசதி உள்ளது.
இறை வணக்க நேரத்தில்...:மொத்தம், 700 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில், நேற்று முன்தினம், காலை, 9:30 மணிக்கு, இறை வணக்கம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பள்ளி துவங்கும் நேரம் என்பதால், பெரிய கதவுகள் திறந்திருந்தன. அதன் வழியே, வேகமாக காரில் வந்த, 20 வயது, ஆடம் லான்சா என்ற வாலிபன், காரை நிறுத்திவிட்டு, வகுப்பறைக்குள் வேகமாக நுழைந்தான்.அவன் கைகளில், ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில், அமெரிக்க ராணுவ வீரர்கள் பயன்படுத்தும், அதிநவீன இயந்திர துப்பாக்கிகள் இருந்தன. பள்ளிக்குள் நுழைந்த வேகத்தில், ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தான்.
கண்மூடித்தனமாக சுட்டான்:அங்கு, இறைவணக்கம் பாடி கொண்டிருந்த மாணவ, மாணவியரை, ஈவு, இரக்கம் இன்றி, தன் இயந்திர துப்பாக்கிகளால், கண்மூடித்தனமாக சுட்டான். இதில், அலறிய குழந்தைகள், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தன.அங்கிருந்த குழந்தைகளை, ஒட்டுமொத்தமாக சாய்த்த அந்தக் கொடூரன், அடுத்த வகுப்பறைக்கு சென்றான். அங்கும் தன் வெறியை, துப்பாக்கி குண்டுகளால் தணித்தவன், அங்கேயே நின்று, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டான்.துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதுமே, அவசர அழைப்பு எண், 911ஐ தொடர்பு கொண்ட சிலர், துப்பாக்கி குறித்து, தகவல் தெரிவித்துள்ளனர்; அடுத்த சில நிமிடங்களில், போலீசார், அந்த பள்ளியை முற்றுகையிட்டு, ஒவ்வொரு அறையாக, கொலைகாரனை தேடினர். 10:30 மணிக்கு, துப்பாக்கி சுடும் சத்தம் ஓய்ந்தது.பள்ளி துவங்கும் நேரத்தில், துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும், இது போன்ற தாக்குதல்கள் அந்த நாட்டில், அவ்வப்போது நடப்பது சகஜம் என்பதால், சுதாரித்து கொண்ட ஆசிரியைகள், தங்கள் வகுப்பறையின் கதவுகளை சாத்தி, குழந்தைகளை, "டெஸ்க்' கீழே பதுங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
பயங்கரவாதியா?பயங்கரவாதிகள் நுழைந்திருக்கலாம் என்ற அச்சத்தில், அலறிய ஆசிரியைகள் மற்றும் குழந்தைகளில் பலர், கழிவறைகளுக்குள் சென்றும் பதுங்கி கொண்டனர். துப்பாக்கி சத்தம் முழுமையாக நின்ற பிறகே, ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.யார் சுட்டது, எங்கிருந்து, எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது என, தெரியாததால், பதறிய குழந்தைகள், பாதுகாப்பான இடங்களை தேடி ஓடியது பரிதாபமாக இருந்தது.காலை நேரத்தில், குழந்தைகளை பள்ளியில் விட்டு, அலுவலகங்களுக்கு சென்ற பெற்றோர், "டிவி'யில் செய்தியை அறிந்ததும், தங்கள் குழந்தைகள் என்னவானதோ என தெரியாமல், பதறிய படி, சாண்டி ஹூக் பள்ளி முன் குவிந்தனர்.
22 குழந்தைகள் பலி: ஒவ்வொரு அறையாக சோதனையிட்ட போலீசார், இரண்டு அறைகளில் மட்டும், 20 குழந்தைகள் கொல்லப்பட்டிருந்ததை அறிந்தனர். அருகிலேயே, கொலையாளியும் இறந்து கிடந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில், அலறிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள், மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டன; செல்லும் வழியிலேயே அந்த குழந்தைகளும் இறந்தன.இந்த கொடூர சம்பவத்தில், ஐந்து ஆசிரியர்கள், 22 குழந்தைகள் கொல்லப்பட்டன. இறந்த குழந்தைகள், ஐந்து முதல் 10 வயது வரை உள்ள, பால் மணம் மாறாதவர்கள்.
காரணம் தெரியவில்லை: ஆடம் லான்சா வந்த காரை கண்டுபிடித்த போலீசார், சற்று தொலைவில் உள்ள அவனின் வீட்டுக்கு சென்றனர். அங்கே, அவனின் தாய், நான்சி லான்சா, சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்தார். அவரை கொன்று விட்டு, அவர் வைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்து, பள்ளிக்கு வந்து, பயங்கர கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறான் என்பதை, கனெக்டிகட் போலீஸ் செய்தி தொடர்பாளர், பால் வான்ஸ் உறுதிப்படுத்தினார்.ஆடம் லான்சா வைத்திருந்த துப்பாக்கிகள் இரண்டும், அவனின் தாய், நான்சி லான்சா வைத்திருந்தவை என்பதையும், பால் வான்ஸ் உறுதி செய்தார். சாண்டி ஹூக் பள்ளியில், முன் பணியாற்றிய நான்சி, இப்போது அங்கு பணியாற்றவில்லை என்பதை, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.படுபாதக கொலைகளுக்கான காரணம் தெரியாத போலீசார், நியூஜெர்சியில் இருந்த, ஆடம் லான்சாவின் சகோதரர், ரியான் லான்சாவையும், அவர்களை விட்டு பிரிந்து சென்ற தந்தை, பீட்டர் லான்சாவையும் அழைத்து விசாரித்தனர். எனினும், நேற்று இரவு வரை, கொலைகளுக்கான காரணம் தெரியவில்லை.ஐந்து ஆசிரியர்கள், 22 குழந்தைகள் கொல்லப்பட்ட இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இல்லினாய்ஸ் மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில், அரை கம்பத்தில், தேசிய கொடிகள் பறக்க விடப்பட்டன; சம்பவம் நடந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது; பிற பள்ளிகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
குழந்தைகள் கொலை: அதிபர் ஒபாமா கண்ணீர்:நியூடவுன், சாண்டி ஹூக் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து அறிந்த, அமெரிக்க அதிபர், பாரக் ஒபாமா, வெள்ளை மாளிகையில், பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, கண்ணீர் வடித்தார்.
அதிபர், ஒபாமா கூறியதாவது:என் இருதயம் நொறுங்கி விட்டது; அழகான சின்னஞ்சிறிய குழந்தைகள், கொடூரமாக கொல்லப்பட்டு விட்டன.இன்னும் எத்தனையோ பிறந்த நாட்கள், பட்டங்கள், திருமணங்கள் என, பல நல்லனவற்றை சந்திக்க வேண்டிய குழந்தைகள், பரிதாபமாக கொல்லப்பட்டு விட்டன. அந்த குழந்தைகள் அனைத்துமே, நம் குழந்தைகள்.ஒவ்வொரு வாரமும் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில், உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். துப்பாக்கி உரிமம் வழங்குவதிலும், இயந்திர துப்பாக்கிகள் வழங்குவதிலும் கெடுபிடி கொண்டு வரப்படும்.இவ்வாறு, ஒபாமா பேசினார்.
சம்பவம் குறித்து, பத்திரிகையாளர் முன் பேச வந்த அதிபர், ஒபாமா தடுமாறினார். பெருகி வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, சில நிமிடங்கள் பேச முடியாமல் தத்தளித்தார்.அதிபராக, கடந்த, 4 ஆண்டுகளாக இருக்கும் ஒபாமா, இது போல இதற்கு முன் தடுமாறியதில்லை என, கூடியிருந்த பத்திரிகையாளர்கள் கூறினர்.
ஆயுத கட்டுப்பாடு கொண்டு வரப்படும் என, அதிபர் அறிவித்த, சில மணி நேரத்திலேயே, அத்தகைய சட்டம் அவசியம் கொண்டு வர வேண்டும் என, 43 ஆயிரம் பேர், கையெழுத்திட்ட கடிதங்களை, அதிபருக்கு அனுப்பி வைத்தனர்.
இரண்டாவது கொடூர சம்பவம் : பள்ளி, கல்லூரிகளில், துப்பாக்கி சூடு சம்பவங்கள், அமெரிக்காவில் சாதாரணம் தான் என்ற போதிலும், அமெரிக்காவையே உலுக்கிய இரண்டாவது மிகப் பெரிய தாக்குதல் இது.இதற்கு முன், 2007ல், விர்ஜினியா டெக் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மிகப் பயங்கர தாக்குதலில், இந்தியரான பேராசிரியர் உட்பட, 32 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு, நேற்று முன்தினம் நடந்துள்ள, நியூடவுன் பள்ளி படுகொலை தான், அதிக உயிர் பலி கொண்டது.
முதலுதவிக்கு அவசியமில்லாத நிலை : சாண்டி ஹூக் பள்ளியில், துப்பாக்கி சூடு சத்தம், நீண்ட நேரம் கேட்டு, அமைதியானதும், அருகில் வசித்து வரும் நர்ஸ், மவுரீன் கெரின்ஸ் என்ற பெண், மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவலாம் என்ற நோக்கத்தில், மருந்துகளுடன் சம்பவ இடத்திற்கு ஓடினார்.
அவரை தடுத்த போலீசாரிடம், "காயம்பட்ட குழந்தைகளுக்கு என்னால், முதலுதவி சிகிச்சை அளிக்க முடியும்; என்னை அனுமதியுங்கள்' என கேட்டார்.அதற்கு பதிலளித்த போலீசார், "தாக்குதலுக்கு இலக்கான குழந்தைகளில், 18 சம்பவ இடத்திலேயேயும், இரண்டு பேர், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலும் இறந்து விட்டனர். அதனால், மருத்துவம், முதலுதவி என, எதற்கும் அவசியமில்லை' என கூறியது, மவுரீன் கெரின்ஸ்சுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
தப்பியது 2 குழந்தைகள் :பள்ளிக் குழந்தைகளை சுட்டு பொசுக்கிய கொடூரன், ஆடம் லான்சா, இரண்டு கைகளிலும், இரண்டு இயந்திர துப்பாக்கிகளை மிகவும் எளிதாக பயன்படுத்தியுள்ளான்.குழந்தைகளுக்கு வெகு நெருக்கமாக நின்று கொண்டு, அவர்களின் உடலில், 100க்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகளை செலுத்தியுள்ளான். அவன் தாக்குதலில், இரண்டு குழந்தைகள் மட்டுமே காயமடைந்து, உயிர் தப்பியுள்ளன. தாக்குதலுக்கு இலக்கான குழந்தைகள் அனைத்துமே இறந்து விட்டன.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயார் :கனெக்ட்டிக்கட் அருகில் உள்ள நியூடவுன் நகரம், இங்கிலாந்து கிராமம் போன்ற தோற்றம் கொண்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள், பள்ளி மற்றும் வீடுகளில் செய்யப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் நடந்த தாக்குதலால், நியூ டவுன் நகரம், சோகமே உருவாக மாறிவிட்டது.
குழந்தைகள் கொல்லப்பட்டது வருந்தத் தக்க ஒன்றுதான்.ஆனால் ஒபாமா சிந்திய கண்ணீர் வெறும் முதலைகண்ணீர்.பலஸ்தீன்,அப்கானிஸ்தான் போன்ற இடங்களில் லட்சக்கணக்கான குழந்தைகள் கொத்துக்கொத்தாய்க் கொல்லப்படும்போது கண்டன அறிக்கை கூட விடுவதற்கு வக்கில்லாத ஒபாமா இப்போது கண்ணீர் சிந்துகிறார் என்றால் இதிலிருந்தே தெரிகிறது.அது வெறும் நீலிக்கண்ணீர் என்று.
ReplyDeleteதலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
-அபூஆஸியா-
I feel sorry for the kids, but there is another lesson that Obama has to realize, FOR EVERY ACTION, THERE IS A REACTION.
ReplyDelete