Header Ads



கல்முனை மாநகர சபையின் 2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்



(சௌஜீர் ஏ முகைடீன்)

கல்முனை மாநகர சபைக்கு எதிர்காலத்தில் முதல்வராக வரக்கூடியவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என மாநகர பிரதி முதல்வரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் 2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வரவு செலவுத் திட்டம் தொடர்பில் உரை நிகழ்த்தும் போதே பிரதி முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதல்வர் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது மாநகர சபை எல்லைக்குள் வாழும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுடைய கருத்துக்களை பெற்று தயாரிக்கப்பட்ட வெளிப்படைத் தன்மை கொண்ட செலவுத் திட்டமாகும். 

முதல்வர் இவ்வரவு  செலவுத் திட்டத்தை சபையில் முன்வைப்பதற்கு முன்னராக, பொது மக்களுடனும், கல்வி அதிகாரிகளுடனும், வர்த்தக சங்கங்களுடனும், சட்டத்தரணிகளுடனும், மாநகர சபை உறுப்பினர்களுடனும் பல முறை கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி தயாரிக்கப்பட்டது என நாம் அறிவோம். இதில் ஒரு சில குறைபாடுகள் காணப்பட்டபோதிலும் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு சிறந்த வரவு செலவுத் திட்டமாகும். 

எதிர்காலத்தில் இவ்வாறு சகல தரப்பினருடனும் கலந்துரையாடி கருத்துக்களை உள்வாங்கி வரவு செலவுத்திட்டத்தினை முன்வைப்பது எதிர்கால முதல்வர்களுக்கு சிரமமாக அமையலாம் என நான் எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் குறுப்பிட்டார்.

கல்முனை மாநகர சபையின் 2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம்

மொத்த வருமானம்

சபையின் சொந்த வருமானமாக 72.6 மில்லியன் ரூபா

யுனப்ஸ் மானியமாக 2.7 மில்லியன் ரூபா

சம்பள மீளளிப்புக்காக 51.4 மில்லியன் ரூபா

நெல்சிப் திட்ட நிதி மூலம் 31 மில்லியன் ரூபா

PSDG நிதி மூலம் 3 மில்லியன் ரூபா

CBG நிதி மூலம் 150000 ரூபா

எதிர்பார்க்கப்படுகின்ற மொத்த வருமானம் சுமார் 161 மில்லியன் ரூபா.

மொத்த செலவினம்

பொது நிர்வாக நடவடிக்கைகளுக்காக சுமார் 31.5 மில்லியன் ரூபா

சுகாதார சேவைக்காக 37.65 மில்லியன் ரூபா

பௌதீக திட்டமிடல் வீதி அபிவிருத்திக்காக 61.4 மில்லியன் ரூபா

பொதுப் பயன்பாட்டு சேவைக்காக 8.2 மில்லியன் ரூபா

சமூக நலன் புரிச் சேவைக்காக 22 மில்லியன் ரூபா       

எதிர்பார்க்கப்படும் மொத்த செலவினம் 160.8 மில்லியன் ரூபா.

குறிப்பாக 2013ம் ஆண்டில் வீதிகள், வடிகான் அமைத்தலுக்காக நெல்சிப் திட்ட நிதியின் மூலம் 31 மில்லியன் ரூபாவும் சபை நிதியின் மூலம் 9 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று கல்வி அபிவிருத்தி, விளையாட்டுத்துறை மற்றும் சமூக நல அபிவிருத்திக்காக கௌரவ உறுப்பினர்களின் வேண்டுகோலுக்கினங்க ரூபா 5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெருவிளக்கு கொள்வனவுக்காக ரூபா 3 மில்லியனும் புத்தக மற்றும் நூலக அபிவிருத்திக்காக 3 மில்லியன் ரூபாவும் விஷேடமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக  நோக்கும்போது 2013ம் ஆண்டில் மொத்த மீண்டு வரும் செலவினங்களுக்காக 125.3 மில்லியன் ரூபாவும் இது மொத்த செலவில் 78 வீதமாகும் அதே போன்று அபிவிருத்து சார்ந்த செலவினங்களுக்காக (மூலதன செலவினம்) 35.5 மில்லியன் ரூபாவும் இது மொத்த செலவினத்தில் 22 வீதமாகவும் காணப்படுகின்றது.

உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்று நிருபத்தை ஆராயும் போது ஒரு வருடத்தின் வரவு செலவுத்திட்டத்தில் குறைந்தது 20 வீதம் அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கல்முனை மாநகர சபையின் 2013ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் 22 வீதம் மூலதன செலவினங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    



No comments

Powered by Blogger.