Header Ads



இயற்கை அனர்த்தத்தில் பலியானவர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு - நிவாரணங்கள் தாமதம்..!



நாட்டின் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கணிப்பிட்டுள்ளது.

பதுளை - பசறை கோனகெல தோட்ட வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று பேர் பலியானர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்தனர். நேற்று குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதுடன் பிரதேசவாசிகள் இன்றைய தினமே அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 10 மற்றும் 14 வயதைக் கொண்ட ஆண்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவர்களின் தாய் வெளிநாடு சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தளை கெலேபொக்க பகுதி மக்கள் தாம் தொடர்ந்தும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள போதும், இதுவரை எந்த நிவாரணங்களும் கிடைக்கப் பெறவில்லை என முறையிட்டுள்ளனர்.
.
இதேவேளை, தெல்தெனிய - துனுவில பிரதேச வீடொன்றின் மீது மண்மேடு இடிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்திருந்த 40 வயதுடைய பெண்ணொருவர் இன்று மரணமானார். மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக முன்னதாக அவரது ஐந்து வயதான குழந்தை மரணமானது.

இந்தநிலையில், சீரற்ற காலநிலை காரணமாக மரணமானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, மாத்தளை - ரத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட போதிகொடுவ, திக்கும்புர, மடகும்புர மற்றும் மெதவத்த ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, குறித்த பகுதிகளை சேர்ந்த 500 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் 3 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ரத்தோட்டை பிரதேச செயலாளர் பீ எம் விஜேபண்டார தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாத்தளை - ரத்தோட்டை நிகோலோயா தோட்டத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்தத்தில் தொடர் குடியிருப்பு தொகுதி ஒன்று முற்றாக சேதமடைந்தது. இந்தநிலையில், மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்ளை வான்படையினர் மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.