Header Ads



இலங்கையில் 12000 ஆயுதம் தாங்கிய ஜிஹாதிகள் உள்ளனர் - கடகெலத்தே ஞானசாரா தேரர்


(கடந்த நவம்பர் 30 ஆம் திகதி மஹரகமயில் சிங்கள இனவாதிகள் கூட்டமொன்றை ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்ட நிகழ்வுகள் மற்றும் அதில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசப்பட்ட விடயங்களை அவர்கள் பகிரங்கமாக்கவில்லை. இதுபற்றிய தேடலில் ஈடுபட்ட அபூ அஹ்மட் என்ற எமது சகோதரர் கண்டறிந்த விடயங்களை நமது முஸ்லிம் சமூகத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.)


மேலேயுள்ள விளம்பரத்தின் மொழிபெயர்ப்பு:

எனது தாய்நாடு! இன்று எனக்குரியது, நாளை உங்களுக்குரியது.

சிங்களவர்களே! சிங்கள சமூகத்தின் அழிவு காலம் தொடங்கிவிட்டது. 

ஏனென்றால், சிங்கள சமூகத்திற்கும், பௌத்த மதத்திற்க்கும் பல சவால்கள் இருக்கும் போது சிங்கள பௌத்தர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம் தீவிரவாதிகள் புராதன சின்னங்களையும், பாரம்பரியங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த செயல்கள், எந்தவித முடிவும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் அதே நிலையில், நாட்டின் மற்ற பாகங்களுக்கும் இவை பரவிக்கொண்டிருக்கின்றன. 

இந்தக் கயவர்கள் இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புக்களையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள்.       

இந்தச் சவால்கள் இத்தோடு நின்றுவிடவில்லை. கிறிஸ்தவர்கள், அவர்களின் பிரச்சார வேலைகளையும் ஆரம்பித்துள்ளார்கள். 

இந்தக் கயவர்களின் செயல்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் உண்மைகளை, 30 நவம்பர் அன்று உங்களுக்கு தெளிவுபடுத்த முடியும் என நாம் நம்புகின்றோம்.   

உங்கள் நாட்டையும், இனத்தையும், மதத்தையும், பாதுகாக்க விரைந்து வாருங்கள்! 

30 நவம்பர், காலை 09.00 மணிக்கு, ரஜமஹாவிஹாரை, நாவின்ன. 

ரிபல்லியன் ஒ(f)ப் ‘12

பொதுவாக அவதானிக்கப்பட்டவை

* ரஜமஹாவிஹார ஹோல் முற்றாக நிரம்பிக்காணப்பட்டது. கிட்டத்தட்ட 450 க்கும் 500 க்கும் இடைப்பட்ட மக்கள் காணப்பட்டனர். இவர்களில் 90 வீதமானவர்கள் 30 வயதிற்க்குக் குறைவானவர்களாகவே காணப்பட்டனர். நடுத்தர வயதையுடையவர்களும், வயதானவர்களுமாக 10 நபர்கள் காணப்பட்டனர். இளம் வயதையுடைய 10 பௌத்த பிக்குகள் காணப்பட்டனர். கலந்து கொண்டவர்களில் அதிகமானவர்கள் ஆண்களாகவே இருந்தனர். கிட்டத்தட்ட 12 பெண்கள் கூட்டத்தில் காணப்பட்டனர்.

* ஹைலெவல் வீதியில் உள்ள நாவின்ன சந்தியில் இருந்து விகாரையை நோக்கிச்செல்லும் வீதியானது, ஒன்றுகூடலை பறைசாற்றும் கொடிகளாலும், பௌத்த கொடிகளாலும், அலங்கரிக்கப்பட்டிருந்தது. YWBA இன், சிங்கள பௌத்தர்களை புரட்சிக்கு அழைக்கும் அதிகமான விளம்பரங்களை காணமுடிந்தது. இந்த YWBA என்பவர்கள் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை.

* வருகை தந்திருந்தவர்களில் அதிகமானவர்கள், நகருக்கு அண்மித்த பிரதேசங்களில் இருந்தும், பிற பிரதேசங்களிலிருந்தும் வந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இவர்களில் நடுத்தர மற்றும் கல்வித்துறை சார்ந்தவர்கள் அதிகமாக காணப்பட்டனர். கால்வாசிப்பேர் தங்களது சொந்த வாகனங்களிலேயே வந்திருந்தனர். மிகக் கூடுதலானவர்கள் ஏ எல் பயிலும் மாணவர்களும், ஏ எல் பரீட்சையை பூர்த்தி செய்தவர்களுமாயிருந்தனர்.

* சிங்கள ராவய, பொது ப(B)ல சேன, பௌத்த பாதுகாப்பு பவுன்டேஷன், மற்றும் பல இணைய தளங்களில் இயங்கி வரும் இயக்கங்கள், ஹம்பா வகை தயாரிப்புகளை நிராகரிக்கும் இயக்கம், சொறி டொட் கொம், ஆகிய அனைத்து இயக்கங்களும் ஒரே மேடையில் கலந்து கொண்டது, இதுவே முதன்முறையாகும். இவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் கொண்டு வந்தது ரிபல்லியன் ஒ(f)ப் ’12 என்ற இயக்கத்திற்க்கு இந்த ஒன்றுகூடல் மிக முக்கியமானதொரு வெற்றியாகும்.

* இந்த ஒன்றுகூடலானது, அவர்களின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவதற்கும், தேசிய சிங்கள பௌத்த முன்னனியின் முக்கியத்துவத்தை உணரச் செய்வதற்கும், இதன் மூலம் கிடைக்கும் அங்கத்தவர்களை, அவர்களின் பிரச்சாரத்திற்க்கும் மற்றும் பல நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துவதற்குமாகும்.

கீழ் குறிப்பிட்ட விடயங்களில், இந்த ஒன்றுகூடல் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது.

1 ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்தபடி மக்கள் சமூகமளித்திருந்தனர்.

2 அனைத்து பிரதான அமைப்புகள், அரசியல் சார்பற்ற அமைப்புகள், வலதுசாரி சிங்கள பௌத்த அமைப்புகள், முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்புகள் என்று எல்லா அமைப்புகளினதும் ஆதரவு கிடைக்கப்பெற்றது.

3 ஒவ்வொருவரினதும், பல்வேறு இயக்கங்களினதும் குறிக்கோள்களும், கருத்துக்களும் பரிமாறப்பட்டன.

4 இணையத்தில் செயற்படும் அனைவரும் தங்களது பணிகளை தெடர்ந்தும் செய்வார்கள் என்று உறுதி செய்யப்பட்டது.

5 ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய சிங்கள பௌத்த முன்னனிக்கான வலுவானதொரு தளம் அமைக்க மேற்படி ஒன்றுகூடல் உதவியது .

பொது ப(B)ல சேன இயக்கத்தின் உருவாக்கத்திற்க்கு முக்கிய காரண கர்த்தாவே கடகெலத்தே ஞானசாரா அவர்களாவார். பௌத்த மதத்தின் அழிவிற்க்கு காரணமாக இருக்கிறார்கள் என்ற காரணத்திற்க்காக வேண்டி, அண்மையில் தனி நபர்களுக்கெதிராகவும், சில அமைப்புகளுக்கெதிராகவும் நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இந்த இயக்கமே காரணமாக உள்ளது.

இவற்றில் சில சம்பவங்களே இவைகள்

# மைத்திரீ புத்தர் என்று கூறிக்கெள்ளும் நபருக்கு சொந்தமான, காலியில் உள்ள, வண்டுரம்ப என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தின் மீதான தாக்குதல்.

# பௌத்த மதத்தை அழிப்பதற்கு காரணமாக இருக்கிறார் என்ற காரணத்திற்காக வேண்டி, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் நடாத்திவரும் பிக்குவிற்க்கு சொந்தமான, தெகிவளையில் அமைந்துள்ள, தியானம் செய்யும் நிலையம் ஒன்று தாக்கப்பட்டது.

# புத்தரின் சிலையை சேதப்படுத்தியதற்காக வேண்டியும், பௌத்தர்களை மதம் மாற்றியதற்க்காக வேண்டியும், பிலியந்தலையில், சிலர் கைது செய்யப்பட்டமை.

# இது மாதிரியான மேலும் பல சம்பவங்களை, கூகிளில் தேடுவதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.  

கடகெலத்தே ஞானசாரா அவர்களின் உரை


கடகெலத்தே ஞானசாரா அவர்களின் உரையில், முக்கியமான விடயங்களாவன

· இலங்கையில், சிங்களவர்களையும், பௌத்தர்களையும் பாதுகாப்பதற்காக வேண்டி ஒரு தேசிய முண்ணனி ஒன்று இல்லை. அப்படியான முன்னனியொன்று, இலங்கையில் இன்று தேவையாக உள்ளது. இவ்வாறு இல்லாததற்குக் காரணம் என்னவென்றால், மக்கள் இந்த இயக்கத்திற்கு என்றென்றும் தலைவர்களாக இருக்க முடியும் என்பதை உணராததுதான். ஒரு இயக்கத்தின் தலைமைத்துவத்தை, எப்பொழுதும் இளம் சமுதாயத்தினரிடம் கையளிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர வேண்டும். ஏனென்றால், எந்த இயக்கங்களின் கட்டுப்பாட்டை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருந்தார்களோ, அந்த இயக்கங்கள் அவர்களுடனேயே மரணித்துவிட்டன.

· இலங்கைத்தீவில் சிங்கள இனத்தையும், பௌத்த மதத்தையும் பாதுகாப்பது என்பது அவசியமானதும், ஒரு தனி மனிதனைவிட முக்கியமானதுமாகும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். பொது ப(B)ல சேன இயக்கமாகிய நாங்கள், நீண்ட காலத்திற்கு இந்த இயக்கத்தை நடாத்துவதற்கு திட்டமிடவில்லை. நாங்கள் வயதாகும் போது, யாரோ ஒருவர் இதன் பனிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். இன்று இங்கே உட்கார்ந்திருக்கும் நீங்கள் அதை செய்வீர்கள் என்பதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

· சிங்கள இனத்தை பாதுகாப்பதற்க்கான முதலாவது இயக்கம், அனகாரிக்க தர்மபால அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அவரின் மரணத்திற்கு பின், முஸ்லிம்களின் பரம்பரையில் வந்தவரான ஜே ஆர் ஜெயவர்த்தனவினதும், தமிழரின் வழிவந்த சிறீமாவோ பண்டாரநாயக்காவினதும் சூழ்ச்சியால் இந்த இயக்கமானது இல்லாதொழிக்கப்பட்டது. அனகாரிக்க தர்மபாலவின் இயக்கமானது, தொடர்ந்து செயற்ப்பட்டிருக்குமானால், நாங்கள் இன்று இப்படியான பிரச்சினைகளை எதிர் நோக்கவேண்டி இருந்திருக்காது. அனகாரிக்க தர்மபால அவர்கள், அவரின் மரணத்தறுவாயில், நான் இந்தியாவில் மீண்டும் பிறக்க விரும்புவதாகவும், இலங்கையில் அல்ல என்றும் கூறினார். பௌத்த மதத்தை பாதுகாப்பதற்க்கு இலங்கை மக்கள் ஒருபோதும் ஒன்றிணையமாட்டார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார்.

· நாங்கள் அந்தத்தவறுகளை, இங்கு வந்திருப்பவர்கள் முன் பேசி இருக்கக் கூடாது. ஜாதிக ஹெல உரிமய இன்று அவர்களின் பணியை தொடர்கிறார்கள் என்பதை நாங்கள் உணர வேண்டும். மிக முக்கியமான ஒரு தேவை இருந்த நேரத்தில் அவர்கள் முன்வந்தார்கள். அரசாங்கம் புலிகளை அழிப்பதற்க்கு மிக முக்கியமானதொரு தூண்டு கோலாக இருந்தார்கள். அதுதான், அன்றைய தேவையாகவும் இருந்தது. அதை அவர்கள் செய்தார்கள். இன்று அவர்கள் அரசியலில் பங்கேற்று அதன் பிரச்சினைகளில் ஒரு பங்காளராக ஆகிவிட்டார்கள் என்ற காரனத்தினால், நாம் இப்போது அவர்களை தவறாக கருதக்கூடாது. இப்போது இந்த பூமியை தம்பியாவிடமிருந்தும், கிறிஸ்தவர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டியுள்ளது. தற்போது இது நம்மீது கடமையாகவுமுள்ளது.

· இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்து, அனைவரையும் ஒன்று சேர்த்த ஹன்ஸஜா அவர்கட்கு நன்றியை நாம் தெரிவித்துக் கொள்கின்றோம். இங்கு வாலிபர்களைக் காண்பது மிக சந்தோசமாக உள்ளது. ஆனால் யாராவது உங்களுக்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் ஊட்டக்கூடிய ஒன்றைக் காட்டிவிட்டால், இதை எல்லாம் விட்டுவிட்டு ஓடிவிடுவீர்கள். நீங்கள் அனைவரும் இந்த விடயத்தில் மிக உறுதியானவர்களாக இருக்க வேண்டும். உங்கள் வாலிப பருவத்தை வேறு எந்த விடயத்திலும் வீன்விரயம் செய்யாமல், இனத்தைப் பாதுகாப்பதற்க்காக பயன்படுத்துங்கள்.

· சிங்கள இனத்தை பொலீசாரால் பாதுகாக்கமுடியாது. அவர்கள் தம்பியாக்களுக்கே சார்பாக உள்ளனர். சிங்கள இனத்தை அரசாங்கத்தாலும் பாதுகாக்கமுடியாது. அவர்களும் தம்பியாக்களுக்கு முன்னால், கோழைகளாக உள்ளனர், நாங்கள் பொலீஸ்காரர்கள் ஆகவேண்டும். இந்த ஒன்றுகூடலிற்க்கு சமூகமளித்திருக்கும் வாலிபர்கள் அனைவரையும் சிங்கள மக்களின் உத்தியோகபூர்வமற்ற பொலீஸ் என்பதை, நான் இங்கு பிரகடனப்படுத்துகிறேன். சிங்கள சமூகத்தை பாதுகாப்பதற்க்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பள்ளிவாயலுக்கு கல் எறிவதனால் எதையும் சாதித்துவிட முடியாது. ஒரு முஸ்லிமிற்க்கு வீதியில் அடிப்பதன் மூலம் எதையும் நாம் அடைந்துவிட முடியாது. நாங்கள் மிகச் சிறந்த முறையில் திட்டமிட்டு, அவர்களின் ஆக்கிரமிப்பை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும்.

· இன்று இலங்கையில், நான்கு ஆயுதம் தாங்கிய குழுக்களைச் சேர்ந்த, 12000 ஆயுதம் தாங்கிய ஜிஹாதிகள் உள்ளனர். அவர்கள் மிக விரைவில் இலங்கைத் தீவை அதிகாரத்தின் மூலம் கைப்பற்றிவிடுவார்கள். இந்த அச்சுறுத்தலை எதிர் நோக்குவதற்க்கு இங்கு உள்ள அனைவரும், 24000 சிங்கள வாலிபர்களைக் கொண்ட ஒரு இரானுவத்தை உருவாக்க வெளிக்கிளம்ப வேண்டும். நாம் அவர்களின் வழியில் சென்றுதான், அவர்களை தோற்க்கடிக்க வேண்டும்.

· ஆசியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் தலைவர்களின் மாநாடொன்று அண்மையில் மாலைதீவில் நடைபெற்றது. இலங்கையைச் சேர்ந்த மூன்று நபர்கள் இதில் கலந்து கொண்டனர். அதில் அவர்கள், இலங்கை 2050 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்கொன்ட ஒரு நாடாக இருக்குமென்று வாக்குறுதியளித்தனர். தம்பியாக்கள் எங்களுக்கெதிராக திட்டமிட்ட முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்க்கு நாங்கள் தயாராக வேண்டும்.

· தம்பியாக்களினால், 1920ஆம் ஆண்டு கூறகல்ல1 எனும் இடம் ஆக்கிரமிக்கப்பட்டது. கஞ்சா புகைப்பதை பழக்கமாக கொண்டிருந்த நபரொருவர், ஸ்ரீமாவின் மாமாவுடன் பலாங்கொடையில் வசித்து வந்தார். இவர் புகைப்பதற்க்காகவேண்டி கூறகல்லயில் உள்ள குகைக்கு செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார். இவர் 20ஆம் ஆண்டுகளில் மரணித்தபின், அவர் ஒரு புனித மனிதராக இருந்தார் என்பதோடு, அவ்விடமும் புனிதஸ்தலம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டது. இது அவர்களுக்குச் சொந்தமானதொரு இடமல்ல. இவ்விடமானது நீண்ட காலமாக பௌத்தர்களின் புனிதஸ்தலமாக இருந்து வருகின்றது. யாருக்குத் தெரியும், அடுத்த வருடம், 2013 இல் நமது பெப்ரவரி பண்டிகையை அங்கே கொண்டாடினாலும் கொண்டாடுவோம்.

கஹடபிடிய பக்னசராஸ் அவர்களின் உரை

பக்னசராஸ் அவர்கள் தொலைகாட்சியில் நிகழ்ச்சிகள் நடாத்தும் ஒரு பௌத்த பிக்கு ஆவார். அத்தோடு அவர் ஓரளவு கல்வித்துறை சார்ந்தவரும், மென்மையான போக்கை உடையவராகவும் காணப்பட்டார். அவரது உரை இரண்டு பிரதான விடயங்களைக் கொன்டதாக இருந்தது.

· இலங்கையின் தேசியக் கொடியானது, சிங்கத்தை மாத்திரம் கொண்ட கொடியாகவே இருந்தது. அது அவ்வாறே இன்றும் இருந்திருக்க வேண்டும். தற்போதைய தேசியக் கொடியில் உள்ள வர்ண நிறங்களே, இந்ந நாட்டின் பிரிவினைவாதக் கொள்கையை மக்களிடையே தூண்டுவதற்க்கு ஒரு காரணமாக இருக்கின்றது. அரசியலமைப்பானது இது பிரிக்கப்படாத, ஒரு நாடு என்று சொல்கின்றதென்றால், வர்ண நிறங்கள் இருக்கக்கூடாது. இந்தக் கொடியே, துட்டகைமுனு, எல்லாளனுக்கு எதிராக போர் செய்யும் போது ஏந்திச் சென்றதாகும். வெள்ளையர்கள் நம்மிடமிருந்து இந்தக் கொடியை அகற்ற முயற்ச்சித்தனர், ஆனால் தற்போது நாம் மீண்டும் நமது நாட்டின் தேசியக் கொடியாக, இதை கொண்டு வரவேண்டுமென வற்புறுத்தவேண்டிய நேரம் வந்துள்ளது.

· சிங்களே என்பதே இந்த நாட்டின் பெயர். ஸ்ரீலங்கா அல்ல. வெள்ளையர்கள் இங்கு வருவதற்க்கு முன்பிருந்தே சிங்களே என்றே அழைக்கப்பட்டது. வேறு எந்த பெயராலும் அழைக்கப்படவில்லை. அவர்கள் நாட்டை நம்மிடமிருந்து கைப்பற்றியபோது கூட சிங்களே என்ற பெயருடனேயே அழைக்கப்பட்டது. நாம் அவர்களிடமிருந்து, நாட்டை மீட்கும்போது சில முட்டாள்களால் சிலோன் என்று அழைக்கப்பட்டது. அதற்க்குப் பின்னர் மேலும் சில அதிமுட்டாள்களால் சிறீலங்கா என்று அழைக்கப்பட்டது. இந்த பெயர்களை ஒருபோதும் இந்த நாடு கொண்டிருக்கவில்லை. இந்த நாட்டின் உண்மையான பெயர் சிங்களே என்பதாகும். நாம் தற்போதுள்ள பெயரை மாற்ற வேண்டும் என்பதற்க்காகவேண்டி சண்டைபிடிக்கக்கூடாது.                         
       
பின் குறிப்பு:

இந்த ஒன்றுகூடலானது, ஆர்வமுள்ள அனைத்து தனிநபர்களையும், இயக்கங்களையும் ஒன்றிணைக்க உதவியதால், சிங்கள பௌத்த முன்னனியினருக்கு இது ஒரு முக்கியாமான வெற்றிகரமான திருப்புமுனையாக அமைந்தது. அத்தோடு முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக, 2013ஆம் ஆண்டில் பாரிய வன்முறையொன்று நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகளும் கூடுதலாகவே காணப்படுகின்றன. 

விடுதலைப்போராட்டத்தின் அடுத்த தாக்குதலுக்குரிய இடமாக கூறகல்ல அமையும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. கூறகல்லையானது சூபிகளின் ஒரு புனிதஸ்தலமாக இருக்கின்றது. அத்தோடு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவானது சூபிகளை இஸ்லாத்தின் போதனைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று கருதுவதன் காரணத்தினால், கூறகல்லவை பாதுகாப்பதற்க்கு இவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை நம்மால் எதிர்பார்க்க முடியாது. கடந்த காலங்களில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவானது சூபிகளின் புனிதஸ்தலங்களுக்கெதிராக நடாத்தப்பட்ட தாக்குதலுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் அந்தத் தாக்குதல்களை கண்டிக்கக்கூடவில்லை.

இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டவர்களைவிட, இணையதளங்களில் இஸ்லாத்திற்க்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக தீவிரமாக செயற்படுபவர்கள் அதிகமானவர்கள் இருப்பதனால், இதுபோன்ற ஒன்றுகூடல்கள் வெவ்வேறு இடங்களில் மேலும் நடப்பதற்க்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே காணப்படுகின்றன. இவ்வாறான ஒன்றுகூடலுக்கான அறிவித்தல்களை இணையதளங்களில் தொடர்ச்சியாக காணக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேற்படி ஒன்றுகூடல் மக்கள் மத்தியில் மிகப்பிரபலமடைந்த காரணத்தினாலும், இதில் கலந்து கொண்டவர்கள் நிச்சயமாக இதற்காக மேலும் அதிகமான வாலிபர்களை இணைத்துக்கொள்ள முயற்ச்சி செய்கின்ற காரணத்தினாலும், எதிர்காலத்தில் இவர்களின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே காணப்படுகின்றன.

1கூறகல்ல என்பது பலாங்கொடைக்கு அருகாமையில், இரட்னபுரி மாவட்டத்திலுள்ள தப்தார் ஜெய்லானி என்ற இடத்திலுள்ள சூபிகளின் ஒரு முக்கியமான இடமாகும். இந்த இடத்தில் பௌத்தர்களின் சில கலைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. தற்போது இந்த இடமானது, அங்குள்ள சூபி பள்ளியினால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், பௌத்தர்கள் இந்த இடத்திற்க்கு உரிமை கொண்டாடுகின்றனர். இந்த இடமானது பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சொந்தமானதென்றும், இரு சமூகத்தாரும் பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையுடன் இருந்து வருகிறார்கள் என்று தொல்பொருளியல் திணைக்களம் கூறுகின்றது.     

1 comment:

  1. சூபிக்களும் சாபிக்களும் என்று பிரித்து பார்ப்பதால் தான் எல்லா பிரச்சினையும் ,
    எதிரிக்கும் கொண்டாட்டம்.
    எப்போ நாங்களும் அவர்களை போல் ஒன்று படுகின்றோமோ அன்று தான்
    எங்களுக்கு வெற்றி.
    ஒற்றுமை என்று ஒரு கைறு தேவையும் அவசியமும்

    ReplyDelete

Powered by Blogger.