சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் எங்கு பறக்கிறது? SMS அனுப்பி அறிந்து கொள்ளலாம்
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் எங்கு பறக்கிறது என்று எஸ்எம்எஸ் மூலம் மக்களுக்கு தெரிவிக்கும் சேவையை நாசா தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ரஷ்யா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது ‘ஐஎஸ்எஸ்’ சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம். இதில் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்பட 6 பேர் தங்கியிருந்து தற்போது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராக்கெட்களை நிலைநிறுத்தும் தளம், ஆய்வுக் கருவிகள், விஞ்ஞானிகள் தங்கி ஆய்வு நடத்தும் பகுதி என மொத்தம் 450 டன் எடை கொண்ட ஐஎஸ்எஸ், பூமியில் இருந்து சராசரியாக 370 கி.மீ. உயரத்தில் பறந்தபடி பூமியை தினமும் 15 முறை சுற்றி வருகிறது.
சூரியன், சந்திரனுக்கு அடுத்தபடியாக வானில் பளிச்சென்று தெரியும் பொருள் என்பதால், அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் டெலஸ்கோப் உதவியின்றி வெறும் கண்ணாலேயே ஐஎஸ்எஸ்ஐ பார்க்கலாம் என்று நாசா கூறியுள்ளது. அதை பார்க்க விரும்புபவர்களின் வசதிக்காக புதிய எஸ்எம்எஸ் சேவையை நாசா தொடங்கியுள்ளது. அதாவது, ஐஎஸ்எஸ் பறந்துவரும் பகுதியில் உள்ளவர்களுக்கு ‘உங்கள் வீட்டின் மீது ஐஎஸ்எஸ் பறக்கிறது’ என்று நாசா எஸ்எம்எஸ் அனுப்புகிறது. ஐஎஸ்எஸ் செயல்பட தொடங்கி 12 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையிலும், மக்களுக்கு ஐஎஸ்எஸ் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக நாசா இணை நிர்வாகி வில்லியம் கெர்ஸ்டன்மயர் தெரிவித்துள்ளார்.
Post a Comment