முஸ்லிம் போராளிகளிடமிருந்து வடக்கு மாலியை மீட்க படை நடவடிக்கை
(TN)
இஸ்லாமிய ஆயுதக் குழுவின் வசம் இருக்கும் வடக்கு மாலியை மீட்பதற்கு 3,300 இராணுவ வீரர்களை அனுப்ப மேற்கு ஆபிரிக்க நாட்டு தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
நைஜீரிய தலைநகர் அபுஜாலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளின் கூட்டணியான ‘எகொவஸ்’ இன் அவசர கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஓர் ஆண்டு காலத்திற்கு 3,300 படைகளை மாலிக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டதாக கூட்டணியின் தலைவர் குறிப்பிட்டார். இந்த படையில் நைஜீரியா, நைகர் மற்றும் பர்கினா பாசோ ஆகிய நாடுகள் பெரும்பான்மையாக இடம்பிடிக்கவுள்ளன.
மாலியில் கடந்த மார்ச்சில் ஏற்பட்ட இராணுவ புரட்சியை பயன்படுத்தி இஸ்லாமிய ஆயுதக் குழுவும் துராக் கிளர்ச்சியாளர்களும் இணைந்து வடக்கு மாலியை கைப்பற்றினர்.
எனினும் துராக் கிளர்ச்சியாளர்களை அகற்றிவிட்டு வடக்கு மாலியை இஸ்லாமிய ஆயுதக் குழு முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஆயுதக் குழு வடக்கு மாலியில் சர்வதேசம் அங்கீகரிக்காத தனிநாட்டு பிரகடனமும் செய்துள்ளது.
இந்நிலையில் வடக்கு மாலியை மீட்பதற்கான இராணுவத் தலையீட்டை மேற்கொள்வதற்கான தீர்வை எடுக்க பிராந்திய நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை கடந்த ஒக்டோபர் 12 (நேற்று) வரையான 45 தின காலக் கெடு விதித்திருந்தது. இதனையடுத்தே மேற்கு ஆபிரிக்க நாடுகள் மாலியில் இராணுவ தலையீட்டை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
Post a Comment