Header Ads



இந்தியரை தூக்கில் போடுங்கள் - பாகிஸ்தானில் வலியுறுத்து


மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு 166 பேரை சுட்டு கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் 2 நாட்களுக்கு முன்பு புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். இதற்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

முல்தான் நகரில் நேற்று அக்கட்சியினரின் போராட்டம் நடந்தது. அதில், அந்த கட்சியின் தலைவர் நயமுல்லாகான் பேசினார். அப்போது, இந்தியாவை சேர்ந்த கைதி சரப்ஜித்சிங் கடந்த 22 ஆண்டுகளாக தூக்கிலிடப்படாமல் இருக்கிறார். 

ஆனால், இந்தியா 4 ஆண்டுகளிலேயே கசாப்பை தூக்கிலிட்டு கொன்று விட்டது. அதற்கு பதிலடியாக காலம் தாழ்த்தாது நமது அரசு சரப்ஜித்சிங்கையும் விரைவில் தூக்கிலிட வேண்டும். அதற்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரி தடையாக இருக்க கூடாது என்றார். ‘

அவரது இந்த பேச்சுக்கு சரப்ஜித்சிங்கின் சட்ட ஆலோசகர் அவாயிஷ் ஷேக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினர் சரப்ஜித்சிங் வழக்கு பற்றி தெரியாமல் கீழ்தரமான அரசியல் நடத்துகின்றனர் என்றார். 

மேலும் அவர் கூறும்போது கசாப் தூக்கிலிடப்பட்டதையும், சரப்ஜித்சிங் தூக்கிலிடப்படாததையும் பாகிஸ்தான் மக்கள் எதிர்க்கவோ, கோபம் அடையவோ இல்லை. இம்ரான்கான் கட்சியின் கோரிக்கையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த தேர்தலில் அக்கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்றார். 

இதற்கிடையே, வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் மதவாத அமைப்புகளின் ஆதரவை பெறவே இம்ரான்கான் கட்சியினர் சரப்ஜித்சிங் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.