Header Ads



எகிப்தில் பான் கீ மூன் - ஹமாஸின் கடிதம் கையளிப்பு


ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனத்தின் காஸா நகரம் மீது கடந்த 7 நாட்களாக இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. கடல் வழி மற்றும் வான் வழியாக நடந்த இந்த தாக்குதல்களில், ஆயுத கிடங்குகள், போலீஸ் நிலையங்கள், ஹமாஸ் போராளிகளின் பதுங்குமிடங்கள் தாக்கப்பட்டன. 1350 இலக்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன், காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டுள்ள எகிப்து நாட்டுடன் ஒத்துழைத்து இந்த தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இருநாட்டுக்கும் இடையே சாத்தியமான ஒரு சமாதானத்தை ஏற்படுத்தும் பேச்சு வார்த்தையில் பங்கேற்க நான் கெய்ரோ செல்வேன்’ என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன், இன்று காலை எகிப்து தலைநகரான கெய்ரோ சென்றார். அங்கு பான் கீ மூன் எகிப்து வெளியுறவு மந்திரி முகமது கமெல் அம்ரை சந்தித்தார். அவரிடம் எகிப்து நாட்டின் உயர் உளவுத்துறை அதிகாரி ஒருவர், ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுக்கு அளித்த போர் நிறுத்த கடிதத்தை ஒப்படைத்தார்.

2008-ம் ஆண்டு காஸா நகரின் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் 1,400 பேர் பலியாகினர். இதைப் போன்ற தாக்குதல் எப்போதும் ஏற்படக்கூடாது என்று அமைதியை விரும்பும் நடுநிலை நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. போர் நிறுத்தம் குறித்து பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் இடையே தற்போது எகிப்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.

இந்த பேச்சு வார்த்தையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டு வரும் வேளையில், பான் கீ மூன் எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றுள்ளதால் நிலைமை மேம்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பான இறுதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, பாலஸ்தீன எல்லையில் நிலவி வரும் போர் பதற்றத்தை பான் கீ மூன் தணிப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.