Header Ads



வடக்கு முஸ்லிம்களை இலகுவில் மீள்குடியேற்றிவிட முடியாது - பஷில் ராஜபக்ஸ

(எம்.சீ.நஜிமுதீன்)
+
vi

இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்த அதிகளவான மக்களை மீள்குடியேற்றியது போன்று வடபுல முஸ்லிம்களை இலகுவில் மீள்குடியேற்ற முடியாது. முஸ்லிம்கள் மட்டுமல்ல ஏராளமான தமிழ், சிங்கள மக்களும் நிலுவையில் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரையும் மீள்குடியேற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ   தெரிவித்தார்.

வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் நிறைவுபெறுவதையொட்டி நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் நினைவு தின நிகழ்வொன்றை கொழும்பு பண்டாரநாயக்க மகாநாட்டு மண்டபத்தில் நடத்தியது. கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம  அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ  தொடர்ந்து உரையாற்றுகையில், 

பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களை இன ரீதியாக பாகுபடுத்த எனக்கு விருப்பமில்லை. எனினும் நான் முதலில் பார்த்த மக்கள் சிங்கள மக்களாவர். அதன் பின்னர் மூதூர் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பயங்கரவாத செயற்பாடுகளின் போது பாதிக்கப்பட்ட மக்கள் மீதே கவனம் செலுத்தினேன்.  மூதூரில் தொடர்ந்தும் வாழ முடியாத சூழ்நிலையால் அங்கிருந்து கந்தளாய்க்கு இடம்பெயர்வதாக மக்கள் பள்ளிவாசலில் கூடி முடிவெடுத்தார்கள்.

 அச்சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி அம்மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினார். அது மட்டுமின்றி இவர்கள் எனது ஆட்சிக் காலத்தில் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். எனவே இம்மக்களை விரைவில் மீள்குடியேற்ற வேண்டும். வருடக் கணக்கோ மாதக் கணக்கோ செல்லக் கூடாது. சில நாட்களில் மீள்குடியேற்ற வேண்டும்" என வேண்டினார்.

அக்காலப்பகுதியில் மூதூருக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்ததால் சம்பூரை மீட்டுத் தருமாறு முஸ்லிம் தலைவர்கள்  வேண்டினர். அப்போதுதான் ஜனாதிபதி பயங்கரவாதத்துக்கு எதிரான முதல் பயணத்தை ஆரம்பித்தார். எனினும் ரணில் - பிரபாகரன் உடன்படிக்கையின் பிரகாரம் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே அப் பகுதிகள் இருந்தன.

சம்பூரில் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு எடுத்த நடவடிக்கைகளை ஐ.நா. அதிகாரிகள், அது உடன்படிக்கையின் பிரகாரம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் எனக் காரணம் காட்டி தடுத்தார்கள். எனினும் ஜனாதிபதி அம்மக்களை மீள்குடியேற்ற முன்னின்று செயற்பட்டார். 44 நாட்களில் அம்மக்களை அங்கு மீள்குடியேற்றினோம். ஆகையால்தான் இன்று கிழக்கில் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். 

எனினும் 1990 ஆம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது ஆட்சியாளர்கள் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் அக்கறையோடு செயற்பட்டது. ஆகையால்தான் இறுதிக் கட்ட போர் நடவடிக்கைகளுக்கு முன்னதாக கிழக்கிலுள்ள சகல மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டார்கள். 

இறுதிக்கட்டப் போரில் அதிகளவான மக்கள் இடம்பெயர வேண்டி நேரிட்டது. எனினும் அம்மக்களை 180 நாட்களில் மீள்குடியேற்றுவது என்ற திட்டத்தில் அரசாங்கம் முனைப்போடு செயற்பட்டது. எனினும் 180 நாட்களில் மீள்குடியேற்ற முடியும் என யாரும் நம்பவில்லை. குறிப்பாக சர்வதேச அமைப்புகள் இதனை நம்பவில்லை. அம்மக்களை மீள்குடியேற்றுவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டோம். கண்ணி வெடிகளை அகற்றுவதைக்கூட சர்வதேச அமைப்புகள் செய்யவில்லை. ஆயினும் அந்த சவால்களையும் எதிர்கொண்டு அம்மக்களையும் மீள்குடியேற்றினோம். 

வடக்கில் மக்களை மீள்குடியேற்றும்போது துரதிஷ்டவசமாக தொண்டு நிறுவனங்கள் பழைய அகதிகள், புதிய அகதிகள் என்ற நியதியை கொண்டு வந்தன. அன்றிருந்த சூழ்நிலையில் அதற்கு நாமும் இணங்கினோம். அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கோருகிறோம். நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் கிடைத்திருக்கும் அந்த உதவிகளும் இல்லாமல் போயிருக்கும். 

எனினும் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்த அதிகளவான மக்களை மீள்குடியேற்றியது போன்று வடபுல முஸ்லிம்களை இலகுவில் மீள்குடியேற்ற முடியாது. முஸ்லிம்கள் மட்டுமல்ல ஏராளமான தமிழ், சிங்கள மக்களும் நிலையில் இருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்திலுள்ள ஏராளமான தமிழ், சிங்கள மக்களும்கூட பாதிக்கப்பட்டடுள்ளார்கள். இவர்கள் அனைவரையும் அங்கு மீள்குடியேற்ற வேண்டிய கடப்பாடு உள்ளது. 

காலம் செல்லச்செல்ல  இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. தங்களது சொந்த இடங்களிலிருந்து இருந்து குறுகிய காலத்தில் இடம்பெயர்ந்துள்ள அகதிகளை இலகுவில் மீள்குடியேற்றலாம். ஆனால் நீண்டநாள் அகதிகளை மீள்குடியேற்றுவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல.

 ஏனென்றால் நீண்டகாலமாக வேறு வாழ்பவர்கள் தற்போது அங்கு நல்ல வசதிவாய்ப்புகளோடு வாழ்கிறார்கள். ஆனால் மீள்குடியேறும் இடங்களில் அவ்வாறாறான வசதி வாய்ப்புகளை எதிர்பார்க்க முடியாது. நல்ல கூரை ஓடு உள்ள வீடுகளில் வாழும் மக்கள் மீள்குடியேறும் இடங்களிலுள்ள தற்காலிக வீடுகளில் வாழ்வதற்குத் தயாரில்லை. 

அத்தோடு பிள்ளைகள் தற்போது பெறும் கல்வி வாய்ப்புகள் நிச்சயமாக மீள்குடியேறும் இடங்களில் கிடைக்காது. இதனால் மீள்குடியேறுவதில் இம்மக்களும் பின் நிற்கின்றார்கள். மேலும் வெளியேற்றத்தின் பின்னர் பிறந்த பிள்ளைகள் தற்போது பழகிப் போன சூழலை விட்டு புதிய இடத்தில் போய் வாழ்வதற்கும் தயாரில்லை. இவ்வாறான இடைஞ்சல்களை மீள்குடியேற்றத்தின் போது சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் நாட்டில் சேவையாற்றிய ஏராளமான தொண்டு நிறுவனங்களும் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் சேவையைத் தொடங்கியுள்ளன. இதுவும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
  
எனினும் இன ரீதியாகவன்றி சகல மக்களையும் மிக விரைவில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதில் குறிப்பாக முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்துவோம் என்ற உறுதிமொழியையும் வழங்குகிறேன். இதுபோன்ற மற்றுமொரு நினைவுதினம் அனுஷ்டிக்காமல் இருப்பதற்கும் வேண்டுகிறேன்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சம்பிக்க ரணவக்க, ரிஷாத்  பதியுதீன், சிரேஷ்ட  அமைச்சர் பௌசி, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற  உறுப்பினர்களாக ஹு னைஸ் பாரூக், அஸ்வர், பஷீர்  சேகுதாவூத், ரவி கருணாநாயக்க, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி முன்னாள் அமைச்சர்களான அமீரலி, மன்சூர் உட்பட வெளிநாட்டு தூதுவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.   

.

No comments

Powered by Blogger.