முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் - ஸர்மிலாவின் தந்தை (படங்கள்)
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
'இந்த விடயத்தின் பாரதூரத் தன்மை எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை என்னால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் இந்தத் தவறுக்காக நான் இலங்கை முஸ்லிம் சமுதாயத்திடம் பொது மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். இது விடயமாக நான் எப்படியாயினும் எனது மகளுடன் தொடர்பை ஏற்படுத்தி ஏறாவூர் பள்ளி வாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துடன் பேசுமாறு வலியுறுத்துவேன், சம்மேளனத்தின் பிரதிநிதிகளான ஊர்ப்பிரமுகர்கள் எமது வீட்டுக்கு வந்து எங்களைச் சந்தித்து சுமுகமாகக் கலந்துரையாடியது எமக்குப் பெரும் ஆறுதலளித்திருக்கிறது என்று ஸர்மிலாவின் தந்தை கூறினார்.'
ஸர்மிலா ஸெய்யித் தமிழோசை ஊடாக இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சியும் பொருளாதார நன்மையும் ஏற்படும் என்று கருத்துத் தெரிவித்ததன் பின்னர் இலங்கை முஸ்லிம் சமுதாயத்தினரிடையேயும் பொதுவாகவும் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் அவசர மாநாடு கூட்டப்பட்டு ஆராயப்பட்ட பின்னர் இது விடயமாக மேற்படி ஸர்மிலாவிடம் விளக்கம் பெறுவதற்காக மௌலவிமார் உட்பட ஊர்ப்பிரமுகர்களைக் கொண்ட அடங்கிய ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அந்தக் குழுவினரின் தொடர் நடவடிக்கையின் ஒரு கட்டமாக நேற்று மாலை மேற்படி ஸர்மிலா ஸெய்யித்தின் வீட்டுக்குச்சென்று சந்திப்பை நடத்தியபோதே ஸர்மிலாவின் தந்தை மேற்சொன்ன கருத்தை வெளியிட்டார்.
அவர் தொடர்ந்து குழுவினரிடம் கூறிய போது,
'முழுமையாக நாம் இஸ்லாமிய மார்க்கத்திற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும், நமது செயற்பாடுகளால் புனித இஸ்லாத்திற்கு எதுவித களங்கமும் வந்து விடக்கூடாது.
எனது மகளைப் பின்புலத்திலிருந்து யாரோ பிழையாக வழி நடத்தி தங்களது நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக அவரைப் பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அந்த வழிக்கு எனது மகளை விட்டு விடாமல் மீண்டும் இந்த சமுதாயத்தில் வந்து இணைந்து நிம்மதியாக வாழ்வதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் செய்து தர வேண்டும் என்று அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
தற்சமயம் கொழும்பில் தங்கியிருக்கும் ஸர்மிலா நேற்று முன்தினம் மாலையிலிருந்து தங்களது குடும்பத்தாருடன் எதுவித தொடர்புகளையும் வைத்திருக்கவில்லை என்றும் அவரது தந்தை சொன்னார.
Post a Comment