ஆசிரியையிடம் வசமாக மாட்டிய திருடன் - பொலன்னறுவையில் சம்பவம்
(தினகரன்)
பொலன்னறுவை நகரில் ஓர் இளம் பட்டதாரி ஆசிரியை பாடசாலையை விட்டு தனது இல்லத் திற்கு செல்வதற்காக பஸ்தரிப்பு நிலையத்தை நோக்கி நடந்து கொண்டி ருந்தாள்.
அவள் பாடசாலைக் காலத்திலும், பல்கலைக் கழகத்திலும் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கப் பதக்கத்தினை வென்ற ஒரு வீராங்கணையாவாள்.
அழகிய தோற்றத்தையுடைய அந்தப் பெண் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலியை மாத்திரம் அணிந்திருந்தாள். ஒரு நாள் அவள் வீதி ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது அவளுக்கு மிக அருகில் ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக கடந்து சென்றது. அதனை பொருட்படுத்தாமல் அந்தப் பெண் வேறொரு சிந்தனையில் தொடர்ந்தும் நடந்து கொண்டிருந்தாள்.
அப்போது தன்னை கடந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீண்டும் திரும்பி வருவதை அவதானித்த அந்தப் பெண் ஏதோ ஒரு விபரீதம் தனக்கு நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து கொண்டு மிகவும் அவதானமாக மோட்டார் சைக்கிள் காரர்களை அவதானிக்காதது போன்று பாசாங்கு செய்து தொடர்ந்தும் நடந்தாள்.
மோட்டார் சைக்கிள் தனக்கு அருகில் வரும் சத்தத்தைக் கேட்ட அவள், என்ன நடக்கப் போகிறதென்று காத்திருந்த போது மோட்டார் சைக்கிளின் பின்பக்கமாக அமர்ந்திருந்த ஒருவன் தனது கையை நீட்டி, பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கலியை பறிக்க எத்தனித்தான்.
இது தான் சந்தர்ப்பம் என்று பார்த்த அந்தப் பெண் தன் தங்கச் சங்கிலியை பாதுகாத்துக் கொண்டு அவன் முகத்தில் ஒரு குத்தைவிட்டு அவனை உதைத்து தள்ளினாள்.
இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர். பெண்ணின் கூக்குரலை கேட்டு சனம் அவ்விடத்திற்கு கூடிய போது அப்பெண் தனது சங்கிலியை அறுத்துச் செல்ல எத்தணித்தவனை கோபாவேசத்தில் அடித்து அவனை ஓடவிடாமல் அவனது சேட்டை பிடித்துக் கொண்டாள்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவனும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டான். பொலிஸார் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த மோட்டார் சைக்கிள் ஜோடி இதுவரை அவ்விடத்தில் 12 பெண்களின் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதனை விசாரணை செய்த அப்பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், நோஞ்சான்களை பொலிஸ் படையில் சேர்ப்பதை விட இதுபோன்ற வீரம் படைத்த பெண்களை பொலிஸில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கிண்டல் செய்தார்.
Post a Comment