Header Ads



பௌத்த பிக்குகளுக்கு கொழுப்பு குறைக்கும் திட்டத்திற்கு சோபித தேரர் எதிர்ப்பு


பௌத்த பிக்குகளுக்கு உடலில் கொழுப்பு அதிகமாகி நோயாளிகளாகி வருவதால், அவர்களுக்கு தானமாக வழங்கப்படும் உணவில் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

அரசின் இந்தக் கொழுப்புக் குறைப்புத் திட்டத்துக்கு, வண.மாதுளுவாவே சோபித தேரர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.  

“பக்தர்கள் பிக்குகளுக்கு உணவை தானமாக வழங்கும் மரபு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிறது.  தமக்குப் பொருத்தமான உணவை பௌத்த பிக்குகள் தெரிவு செய்யக்கூடாது.  எமக்கு அவர்கள் எதைக் கொடுக்கிறார்களோ, அதில் திருப்தியடைய வேண்டும். எமக்கு என்ன வேண்டும் என்று கேட்கக் கூடாது. 

கிராமப்புறங்களில் உள்ள எல்லா பிக்குகளுக்கும் சரியான உணவே கிடைப்பதில்லை. அரிசி மற்றும் இலைக்கறி வகைகளுடன் அவர்கள் காலத்தை கழிக்கின்றனர்.  அரசியல் நலன்களுக்காக இவ்வாறு நேரத்தை வீணடிப்பதை விட்டு விட்டு கிராமப்புறங்களில வறுமையில் வாடும் பிக்குகளுக்கு ஒருநாள் உணவைக் கொடுக்கலாம்” என்றும் வண.மாதுளுவாவே சோபித தேரர்  விசனம் வெளியிட்டுள்ளார்.

.......................................

அதேவேளை பௌத்த பிக்குகள் உடற்பருமன், நீரிழிவு, போன்ற நோய்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு அவர்களின் உணவு முறையே காரணமாகும்.

பௌத்தபிக்குகள் தமக்கான உணவை சமைப்பதில்லை. பக்தர்கள் தானமாக கொடுக்கும் உணவையே சாப்பிட்டு வருகின்றனர். சில இடங்களில் அவர்களுக்கு ஐந்து வேளை உணவு கூட வழங்கப்படுகிறது. இவர்களுக்கு பெரும்பாலும் சைவ உணவே வழங்கப்படுகின்ற போதும், அவை தேகாரோக்கியத்துக்கு உகந்தவையாக இல்லை.

பெரும்பாலான பக்தர்களால், பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்படும் உணவுகள் அதிகளவு கொழுப்புடையதாக இருக்கிறது.  ஆண்டு முழுவதிலும் கிடைக்கும் இப்படியான உணவை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை.  இதனால் விரைவிலேயே உடல் பருத்து, நோய்களால் பாதிக்கப்படும் இவர்களின் உடல்நலனில் சுகாதார அமைச்சு கவனத்தில் எடுத்துள்ளது.

சுகாதார நிபுணர்களைக் கொண்டு இவர்களுக்கென உணவுப்பழக்க நெறிமுறையொன்றை சுகாதார அமைச்சு வகுத்து வருகிறது. அதிகளவில் மரக்கறிகள், பழங்கள், அரிசி, நீர் என்பனவற்றை உண்ணும் படியும், கோதுமை சார்ந்த உணவுகளை தவிர்க்கும்படியும் பெளத்த பிக்குகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் எல்லா மருத்துவமனைகளிலும் பௌத்த பிக்குகளுக்காக தனியான விடுதிகளை ஆரம்பிக்குமாறும் சுகாதார அதிகாரிகள் அரசினால் பணிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. ஓ!!!!! இப்படி கொழுப்புக் கூடியதால்த்தான் சிறுபான்மைக்கெதிராக ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்களோ!!!!
    தானமாக வழங்கப்பட்டதாலேயே இவ்வளவு கொழுப்பு என்றால், சொந்தமாக இருந்தால்...................

    ReplyDelete

Powered by Blogger.