அமைச்சர் பாட்டாளி சம்பிக்கவும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும்..!
(மக்காவிலிருந்து ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத் (கபூரி))
(சென்ற 19-10-2012 அன்று யாழ் முஸ்லிம் இனையம் பிரசுரித்திருந்த 'இலங்கை முஸ்லிம் நாடாகும்-தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஜிஹாதிய தொட்டில்' என்ற கட்டுரையைத் தழுவியதாகவே இவ்வாக்கத்தினை எழுதுகின்றேன்)
இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான ஒரு பெரிய சதிவேளையின் அடித்தளம் மிக உறுதியாக ஆழமாக எப்போதோ போடப்பட்டாயிற்று. அதன்மேல் சொகுசான ஒரு பெரிய கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற ஓர் உண்மையினை மாத்திரம் மிக எளிதாக புரியமுடிகின்றது. ஆனால் அந்த கட்டிடம் நிலைக்குமா? அல்லது தூள் தூளாக சிதறுமா? அல்லது அதற்கு விளக்கேற்றி வர்ணம் பூசக்கூடியவர்களாக இலங்கை முஸ்லிம்கள் மாறுவார்களா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அண்மைக் காலமாக பத்திரிகைகளிலும் துண்டுப் பிரசுரங்களிலும் முஸ்லிம்களுக்கெதிராக துவேசத்தை தூண்டும் ஆக்கங்கள் வெளிவந்து கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. இவ்வாரான ஒரு பிரச்சினை மிக ஆழத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்தாலும் அதன் சுவாளை இப்போது வீச ஆரம்பித்துள்ளது. முன்பொருபோதுமில்லாத அளவு சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் மேல் வெருப்பையும் குரோதத்தையும் ஏற்படுத்தி அதன் மூலம் முஸ்லிம்களை அடக்கி ஒடுக்க நடவடிக்கைகள் பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களை வழுக்கட்டாயமாக ஓர் யுத்தத்திற்கு அல்லது ஒரு பாரிய இனக்கலவரத்திற்கு அழைக்கின்ற போக்கினை அன்மைய நிகழ்வுகள் எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் பரிதாபம் முஸ்லிம் சமூகம் இது பற்றி எந்த கவலையும் இல்லாமல் தங்களுக்கே உரித்தான சிறு சிறு மார்க்கப் பிரச்சினைகளில் சிக்குண்டு பல கூறுகளாக பிரிந்து கொண்டிருக்கின்றது. ஆளுக்கொரு கட்சி, ஊருக்கொரு கொள்கை என்றிருக்கின்ற எமது சமூகத்தின் அரிசியல் நிலையினையை சொல்லவே தேவையில்லை.
இது பற்றி முஸ்லிம் சமூகம் அலட்டிக் கொள்ளாமைக்கு பின்வரும் இரண்டு காரணங்களைக் குறிக்கலாம்.
1. இதன் பாரதூரம் பற்றியும் விளைவு பற்றியும் எந்தவித பொருப்புமில்லாம் சமூக உணர்வற்ற ஜடங்களாக வாழ்ந்து விட்டு போகலாம் என்ற போக்கு.
2. இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பூதாகரமாக்குவதை விட மௌனமாக இருந்தால் இவ்விடயம் தானாகவே செயலிழந்து விடும் என்ற எண்ணம்.
இதிலே இரண்டாம் நிலை சரியெனத் தெரிந்தாலும் இந்த நச்சுக்கருத்தினை இலங்கை பூராகவுமுள்ள பௌத்தர்களிடத்து சேர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் பறந்தளவில் மேற்கொள்ளப்படுவதானது எமது மௌனம் அர்த்தமற்றது என்பதை புரியவைக்கப் போதுமானதாகும். எனவே இதன் முதல் காரணத்தை விளக்குமுன் கீழ் வரும் விடயம் பற்றி சற்று அலசுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.
முதலில் இலங்கையில் நாம் யார் என்ற தெளிவினை புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டிலே எமக்கிருக்கின்ற பங்கும் எமது வகிபாகமும் என்ன என்பதில் தெளிவிருக்க வேண்டும். ஏனெனில் எம்மில் பெரும்பாலானோர் இந்த நாடு எமக்கு சொந்தமில்லை என்பது போல் கதைக்கின்ற, செயல்படுகின்ற சந்தர்ப்பங்களை அவதானித்திருக்கின்றோம். பெருமான்மையினத்தவருடன் ஏதும் தகராரு ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் 'அவர்களது நாட்டில் இருந்து கொண்டு நாம் இப்படி செய்வதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?' என்று எம்மை கேட்கக் கூடிய எமது சகோதர்கள் இருக்கிறார்கள். எனவே எமது நாட்டில் எம்மை நாமே அந்நியமாக்கிக் கொள்கின்ற நிலையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்.
எனவே முதலில் இது எமது நாடு. இந்த நாடு எமக்கு சகல உரிமைகளையும் பூரண கௌரவத்தையும் பெற்றுத் தரவேண்டும் என்ற மனநிலை எம்மிடம் ஆழமாக இருக்க வேண்டும். இங்கு எமது உரிமையும் சுயகௌரவமும் கேள்விக்குள்ளாகும் பட்சத்தில் அதை வென்றெடுப்பதில் அல்லாஹ்விற்காக தனது விருப்பு வெருப்புகளுக்கப்பால் நின்று செயல்படுவேன் என்ற உறுதி ஆழமாக இருக்க வேண்டும். இந்த ஒரு நிலைப்பாட்டில் இருந்து தான் மேற்சொன்ன பௌத்த பேரினவாதத்தின் சதிகளுக்கெதிராக செயல்பட வேண்டும்.
இலங்கையில் நாம் சிறுபான்மையிராக இருந்தாலும் இந்த நாட்டிற்கு எல்லா வகையிலும் விசுவாசமானவர்களாக, இந்நாட்டு இறைமையையும் சட்டத்தையும் மதித்தே நடந்து வந்துள்ளோம். இதனை நாட்டின் தலைவர்களும் மதத்தலைவர்களும் பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நாட்டின் இறைமைக்கும் அமைதிக்கும் ஒருபோதும் பங்கம் விளைவித்ததில்லை. அத்தோடு இந்நாட்டின் வளர்ச்சியில் பங்காளிகளாகவும் பொருளாதார மற்றும் அபிவிருத்தியின் பங்குதாரர்களாகவுமே இருந்திருக்கின்றோம்.
எனவே நாம் எமது கடந்த கால வரலாற்றோடு ஒப்பிட்டு நோக்கியே எதிர்கால எமது ஸ்திரப்பாட்டினை உறுதிசெய்ய கடமைப்பட்டுள்ளோம். தனது கடந்த கால வரலாற்றை மறந்த சமூகத்தின் எதிர்காலம் அழிவையே சந்தித்துள்ளதை வரலாறு கற்றுத்தருகின்ற பாடமாகும். எனவே முஸ்லிம் அமைச்சர்களே! புத்திஜீவிகளே உங்களது தார்மீக கடமையினை இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டுவது சாலப் பொருத்தம் என நினைக்கின்றேன்.
அரசாங்கத்தின் பொறுப்பான ஓர் அமைச்சரின் அண்மைய அறிக்கைகளின் வெளிப்பாடுகள் இலங்கை முஸ்லிம் சமூகத்தை மூடியுள்ள அபாய மேகங்களின் காரிருளை உணத்துகின்றது. இதுவரை இலங்கையர்களால் போற்றிப் புகழப்பட்டுக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் தலைவர்கள் அடிப்படைவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றார்கள். முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் கரிசனை காட்டிய பௌத்த தலைவர்களையும் முஸ்லிம் அடிப்படைவாத சக்திகளுக்கு அடிபணிந்தவர்களாக திட்டித் தீர்க்கப்பட்டிருக்கின்றனர்.
குறித்த அமைச்சரின் இவ்வாரான தொடர் கூட்டுகளுக்கு யாரும் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருப்பது இன்றைய முஸ்லிம் தலைமைகளின் கையாலாகாத் தன்மையை துள்ளியமாக எடுத்துக் காட்டுகின்றது. இதுபற்றி யாழ் முஸ்லிம் இணையத்திற்கு எழுதுவோம் என்று நினைத்தாலும்.... வாசகர் வட்டம் இவருக்கு இதுதான் வேளையா? என்ற நினைப்பார்களோ என்று அமைதியாக இருந்து விட்டேன். மாத்திரமல்லாமல் இதனை விடவும் சிறந்த ஒரு ஆக்கத்தை மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்துமிருந்தேன். ஆனால் அண்மையில் யாழ் முஸ்லிம் இணையத்தின் இரண்டாம் வருட பூர்த்தியை முன்னிட்டு பெரும்பாலான எமது முஸ்லிம் அமைச்சர்கள் வழங்கியிருந்த் வாழ்த்துச் செய்திகளை பார்க்கையில், ஆகா இவர்களும் இதன் வாசகர்களாயிற்றே என்று எண்ணியே அவர்களுக்காக இந்த சிறு ஆக்கத்தை எழுதலாம் என்று எண்ணினேன்.
இலங்கை முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் உலக முஸ்லிம்களை பொதுவாகவும் திட்டித் தீர்க்கின்ற அமைச்சர் யார் என்பதை வாசகர்கள் இலகுவில் புரிந்து கொண்டிருப்பர் என நினைக்கின்றேன். ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொ.ஐ.மு அமைச்சருமான பாட்டாலி சம்பிக ரணவக்க என்பவரே மேற்படி நச்சுக்கருத்தினை 99 சதவீதமான நல்ல பௌத்தர்களிடத்து கொண்டு செல்ல தனது அனைத்து ஆற்றலையும் பயண்படுத்தி வருகின்றார். தனது ஒவ்வொரு மேடைப் பேச்சையும், பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் இதற்காக பயண்படுத்தி வருகின்றார். இவ்வாரான இவரது நச்சுக்கருத்துக்ளுக்கு அரசாங்கத்தினதும், பௌத்த இனவாத அமைப்புகளினதும் பூரண அங்கீகாரம் இருக்கின்றது என்பது மாத்திரம் தெளிவாக விளங்குகின்றது.
ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொ.ஐ.மு அமைச்சருமான பாட்டாலி சம்பிக ரணவக்க என்பவரால் எழுதப்பட்ட அல்கைதா அல்ஜிஹாத் என்ற நூலின் ஓர் அறிமுகத்தை சென்ற 19-10-2012 அன்று யாழ் முஸ்லிம் இனையம் பிரசுரித்திருந்தது. (அதனைத் தழுவியதாகவே இவ்வாக்கத்தினை எழுதுகின்றேன். குறித்த நூல்களின் பிரதியினை நான் வாசிக்கவுமில்லை என்பதனையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.) அதிலே இன்றிருக்கின்ற அரபு, அரபல்லாத முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நாடுகள் முன்பொருகாலத்தில் பௌத்த இராஜ்யங்களாக இருந்ததாக ஒரு விந்தையான கருத்தை குறிப்பிட்டிருக்கின்றார்;. சிலை மற்றும் உறுவ வழிபாட்டை மையமாக வைத்தே அமைச்சர் விவாதத்தை நிறுவியிருக்கிறார் என்பது மாத்திரம் புரிகிறது.
உருவங்களையும் சிலைகளையும் வணங்கும் அனைவரும் பௌத்தர்கள் என்று எண்ணிவிட்டார் போலும் அமைச்சர். மக்காவில் புனித கஃபாவில் 360 க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு அவற்றை மக்கள் வழிப்பட்டு வந்தனர் என வரலாறு கூறிக் கொண்டிருக்கிறது. நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் முதல் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலம் வரை கஃபதுல்லாஹ்வை மக்கள் நிர்வாணமாக வலம் வந்து கொண்டிருந்தனர். எனவே அவர்கள் சிலைகளை வணங்கினார்கள் என்பதற்காக அங்கும் பௌத்த மதம் காணப்பட்டதாகக் கொள்ள முடியாது. இன்றும் பல நாடுகளில் உறுவ மற்றும் சிலை வணக்கம் நடந்து கொண்டுதானிருக்கின்றது. இந்தியாவில் பல ஆயிரம் மதங்கள் இருந்தன இன்றும் இருக்கின்றன. அவற்றை பின்பற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் சிலைகளையும், உருவங்களையும் வழிபடுகின்றவர்களாகவே இருக்கின்றனர். அப்படியானால் இவர்களும் பௌத்தர்கள் என்ற முடிவிற்கு வரலாமா? அல்லது பௌத்தத்தில் இருந்து மதம் மாறியவர்கள் என்று தான் கொள்ளலாமா?
மனிதனின் ஆரம்பம் ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதற்கொண்டே ஆரம்பமாதென்பதை உலகிலுள்ள அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த தத்துவத்தை அல்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு மேலாக கூறிக்கொண்டிருக்கிறது. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் அடியானாக முஸ்லிமாகமே உலகிற்கு அனுப்பப்பட்டார். எனவே உலகில் தோன்றிய முதல் மனிதர்; முஸ்லிமாக இஸ்லாமியராக இருந்தார் என்பதுவே உண்மையாகும். யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்களது நபிமார்களின் மண்ணறைகளை வணங்குவதற்குறிய இடங்களாக தேர்ந்தெடுக்கவே சிலை மற்றும் உறுவ வழிபாடுகள் ஆரம்பித்தன. மனித பலயீனமும் இறையறிவும் இல்லாமையும் அடுத்த காரணங்களாகும்.
அந்த வகையில் சிலை வணக்கமும் உருவ வழிபாடும் நாளடைவில் பலராலும் பின்பற்றப்பட்டன. ஆலுக்கொரு கடவுல், தேவைக்கொரு கடவுல், நாளுக்கொரு கடவுல் என்று சிலைகளும் சிலை வணக்கமும், உறுவ வழிபாடும் பலயீன மனிதனை ஆக்கிரமித்தன. பின்னர் பல நாடுகள் சிலை மற்றும் உறுவ வழிபாட்டுக் கொள்கையைக் கொண்ட நாடுகளாக மாற்றம் பெற்றன. ஆனால் தொடர்ந்து வந்த இறைத்தூதர்களும், இறைவழிகாட்டல்களும் மனிதனின் பலயீனத்தை மாற்றி இறை வழிகாட்டலையும், இறைநம்பிக்கையையும் அதிகரிக்கவே சிலை மற்றும் உறுவ வழிபாடுகள் அகன்று புனிதம் பெற்றனர். இவ்வாறு பல நாடுகள் சிலை மற்றும உறுவ வழிபாடுகளை நிராகரித்து இறைவழிகாட்டல்களுக்குத் திரும்பின. இன்னும் பல நாட்டு மக்கள் தங்களை இஸ்லாமும், இஸ்லாமிய அரசும் ஆள்வதை விரும்பினர். எட்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவை முஸ்லிம்கள் ஆட்சிபுரிவதற்கும் அதுவே காரணமாக இருந்தது.
முஹம்மத்; இப்னு காசிமின் இந்தியாவரையான வெற்றியை மிகத் தாராளமாக விமர்சித்து தள்ளியிருக்கின்றார் அமைச்சர். எட்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவை இஸ்லாமியர்கள் ஆண்டார்கள் என்ற தகவலை துள்ளியமாக அறிந்து வைத்திருக்கும் அமைச்சர் அவர்கள் ஒரு முக்கிய விடயத்தை உணர்ந்து கொள்ள அவரது இஸ்லாமிய விரோதம் அவரது கண்களை மறைத்து விட்டது என்றே கூறலாம்.
உண்மையில் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பல பகுதிகளிலும் இஸ்லாத்தின் இனிய வசந்தத்தில் பெரும்பாண்மையான முஸ்லிமல்லாதவர்கள் நன்மையடைந்தார்கள் என்பதுவே வரலாராகும். சிலைவணக்கத்திலும் சீர்கெட்ட கலாச்சார தாக்கங்களாலும் பாதிக்கப்பட்டிருந்த முஸ்லிமல்லாதோர் இஸ்லாமியர்களிடம் காணப்பட்ட பழக்கவழக்கங்களாலும் ஓரிறைக் கொள்கையாலும் கவரப்பட்டார்கள். பெண்மை பெருமாணமற்றுப் போயிருந்த அன்றைய இந்தியாவில்... திருமணம் என்ற பெயரில் விபச்சாரியான அன்றைய இந்தியாவில்... இஸ்லாத்தின் வசந்தத்தில் பெண் கௌரவிக்கப்பட்டடாள், அவளது உடமையும் உரிமையும் பாதுகாக்கப்பட்டன. பல்லாயிரக்காண பெண்கள் இஸ்லாத்தில் தம்மை இனைத்துக் கொண்டனர். மிக அண்மைக் காலம் வரை கனவன் இறந்தால் உடன் கட்டை ஏறும் கட்டாயம் இந்திய கலாச்சாரத்தில் இருந்து வந்தமை ஒன்றே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
முஸ்லிம்கள் வியாபார நடவடிக்கைகளில் காட்டிய நேர்மையும், வாக்குத் தவராமையும், தெறிந்தவர்களையும், தெரியாதவர்களையும் பற்றி அவர்களிடமிருந்த நம்பிக்கையும் இஸ்லாத்தின் பால் முஸ்லிமல்லாதவர்களைத் தூண்டியது. இதனால் பெரும்பாலான ஆண்களும் இஸ்லாத்தில் தாமாகவே முன்வந்து இணைந்து கொண்டார்கள். எனவே முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் வாழ்வதை ஒரு பாதுகாப்பாக உணர்ந்தார்கள். அன்று தொட்டு இன்றுவரை இந்தியாவில் காணப்படுகின்ற தீண்டாமை கொடுமை தாங்க முடியாமல் பல இலட்சம் குடும்பங்கள் இன்றும் இஸ்லாத்தில் இனைந்து கொண்டிருக்கின்றனர் என்பது ஒன்றும் புதிய செய்தியல்ல.
இதனால் தான் எட்டு நூற்றாண்டுகளுக்கு மேல் முஸ்லிம்கள் இந்தியாவை ஆட்சிசெய்தாலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவே இருந்தனர். அமைச்சர் கூறுவது போல் பெரும்பான்மையினரை கொன்றொழித்து முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு இந்தியாவை உறுவாக்குவது அவர்களது நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. அதற்கான எந்த ஒரு அங்கீகாரத்தையும் புனித இஸ்லாம் ஒரு போதும் வழங்கியதுமில்லை. முஸ்லிம்கள் சிறுபாண்மையினாராக வாழ்கின்ற நாடுகளில் முஸ்லிம்களுக் கெதிராக கடைபிடிக்கப்படுகின்ற இரும்புச்சட்டங்களை இங்கு நினைவு கூறுவது பொருத்தம் என நினைக்கின்றேன்.
இந்தியாவை எட்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சிசெய்த முஸ்லிம்களுக்கு அதற்கு பின்னர் வந்த ஆட்சியாளர்கள் செய்த வராலாற்றுக் கொடுமை மனித நேயத்தை மதிக்கும் எவராலும் மன்னிக்க முடியாதவையாகவே இருந்தன. முஸ்லிம்களை கூட்டாக படுகொலை செய்கின்ற ஆயோக்கியத் தனம் இன்று வரையும் தொடர்கின்றது. அன்மையில் நடந்து முடிந்த குஜ்ராத், ஹைத்தராபாத், கோவை போன்ற கலவரங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். முஸ்லிம்களின் ஆட்சியின் போது நிருவப்பட்ட பிரமாண்டமான பள்ளிவாயில்கள் அரச சொத்துக்களாகக்கப்பட்டு நீதிமன்றங்களாகவும், பொலிஸ் காவல் நிலையங்களாவும், பாரளுமன்றங்களாகவும் மாற்றப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம்.
மனித (வாழ்வு) உரிமையின் பாதுகாப்பினை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு மேலாக வழங்குவது போல் எந்த ஒரு மதமும் இதுவரை வழங்கியதில்லை. 'ஒரு கொலைக்குப் பகரமாகவோ, அல்லது பூமியில்; மனித வாழ்வில் அமைதிக்கு இடையூராக செயல்பட்டான் என்பதற்காகவோ அன்றி (எந்த ஒரு நியாயமான காரணமுமின்றி) யார் ஒரு உயிரை வீணாக கொள்கின்றாரோ, அவர் எல்லா மனிதர்களையும் கொண்றதிற்கு சமனாவார். அதே போன்று யார் ஓர் உயிரின் வாழ்வுரிமையை பாதுகாக்கின்றாரோ அவர் எல்லா உயிர்களின் வாழ்வுரிமையை பாதுகாத்த நன்மையினை அடைவார்' என அல்குர்ஆன் கூறிக்கொண்டிருக்கின்றது. ஊலகலவில் யூத கிருஸ்தவர்களின் திட்டமிட்ட சதியால், இஸ்லாத்தின் பெயரால் நடைபெருகின்ற பாதகச் செயல்களுக்கும் இஸ்லாத்திற்கு எவ்வித தொடர்புமில்லை என்பதைக் கூறி வைக்க ஆசைப்படுகின்றேன்.
இஸ்லாமிய அறிஞர்களையும் புத்திஜீவிகளையும் இஸ்லாமிய சீர்திருத்தவாதிகளையும் அடிப்படைவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். தூய இஸ்லாமிய ஆட்சியின் அவசியத்தால் அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய மறுமலர்ச்சியும், எழுச்சியும் உலக இஸ்லாமிய விரோதிகளால் அடிப்படை வாதமாக சித்தரிக்கப்படுவது ஒன்றும் அதிசயமானதல்ல. பௌத்தம் அழிவதைக் கண்ட உங்கள் போன்றோரால் அதனை எவ்வாறு ஜீரணிக்க முடியாதோ அவ்வாறே இஸ்லாமிய பெயர் தாங்கிகளால் இஸ்லாத்திற்கு ஏற்படும் அபகீர்த்தியினை இஸ்லாமியக் கொள்கை வாதிகளாலும் பொருத்துக் கொள்ளமுடியாதிருக்கின்றது. இதன் எதிரொலியாக நடைபெரும் போராட்டங்கள் மாத்திரம் எப்படி அடிப்படை வாதமாகளாம்.
புலிகளுக்கும் இஸ்லாமிய ஆயுத குழுக்கழுக்குமிடையில் தொடர்பிருப்பதாகவும் அல்கைதாவுடன் நெருங்கிய ஒரு தொடர்பு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களுக்கிடையிலான எந்த தொடர்பையும் எந்த ஒரு மதத்தோடோ அல்லது இனத்தோடோ மட்டுப்படுத்த முடியாது. அவர்கள் விடுதலைப் போராளிகள் என்ற அடிப்படையில் தமக்கிடையிலான உடண்பாடுகள் என்ற ரீதியில் ஒற்றுமையாக செயல்படுவார்கள். இலங்கையில் (பௌத்த) சட்டவிரோத ஆயுதக் குழுவாக செயல்பட்ட (ஜே.வி.பி) மக்கள் விடுதலை முன்னிக்கும் சர்வதேச பயங்கரவாதிகளுக்குமிடையில் நிரையவே தொடர்பிருந்ததாக நிரையவே பேசப்பட்டன. என்பதுகளில் அவர்களிடம் தாராளமாக புலக்கத்தில் இருந்த ஆயுதங்கள் எங்கிருந்து கிடைக்கப் பெற்றன. அவற்றால் கொண்றொழிக்கப்பட்ட அப்பாவி உயிர்கள் தான் எத்தனை. இந்த விடயத்தில் உங்களது ஓரக்கண் பார்வை விமர்சனத்திற்குறியதே!
அமைச்சர் தனது நூலில், எமது வரலாற்றாசிரியர்களுக்கு பொதுவாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு குறிப்பாகவும் ஒரு சவாலை முன்வைக்கின்றார். அதாவது இலங்கை முஸ்லிம்களின் பூர்விகம் 15ம் நூற்றாண்டு நடுப்பகுதியிலே தான் ஓரளவு ஏற்பட்டதாம். ஆனால் தேசிய மீலாத் விழாக்களில் வெளியிடப்படும் நூற்களில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு 2ம் நூற்றாண்டோடு ஆராம்பித்ததாக பொய்யான ஒரு வரலாற்றை நிருவ முயற்சிக்கின்றனர் என்று குறிப்பிடுகின்றார் அமைச்சர்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை நிரூபிக்கக் கூடிய ஏராளமான ஆராய்ச்சிகள் இது வரை பல கோணங்களிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இலங்கை முஸ்லிம்களின் பூர்விகம் பற்றிய ஆழமான ஆராய்ச்சிகளும் கட்டுரைகளும் பலரால் எழுதப்பட்டாலும், அவ்வப்போது பல சந்தர்ப்பங்களில் இலங்கை முஸ்லிம்களின் பிரசன்னமும், வருகையும் கொச்சைப்படுவதையும் காணக் கூடியதாகவே இருக்கின்றது. இலங்கைக்கு முஸ்லிம்கள் பாதை (ரோட்) துப்பரவு செய்வதற்காகவே வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டார்கள் என்ற ஒரு கருத்தை சில வருடங்களுக்கு முன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியமை இலங்கை முஸ்லிம்களுக்கு ஞாபகமிருக்கலாம் என நினைக்கின்றேன்.
எனவே இவ்வாரான சவால்கள் எமது எதிர்கால சந்ததியினரின் வரலாற்றில் ஒரு பாரிய பிரச்சினையைத் தோற்றுவிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனையே நான் ஆரம்பத்தில் 'தனது கடந்த கால வரலாற்றை மறந்த சமூகத்தின் எதிர்காலம் அழிவையே சந்திக்கும்' எனக் குறிப்பிட்டேன். எனவே எமது இலங்கை வரலாறு மும்மொழிகளிலும் தொகுக்கப்பட வேண்டும். மும்மொழி பேசும் மக்களுக்கு அவை சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். எமது வரலாற்றை பரைசாட்டும் சின்னங்களும், புராதணங்களும், தியாகங்களும் பாதுகாக்கப்பட வழிசெய்ய வேண்டும்.
எமது வரலாறு பற்றிய அறிவின் அவசியத்தை எமது எதிர்கால சந்ததியினருக்கு தெளிவாக செல்லிவைக்க கடமைப்பட்டுள்ளோம். மாற்று மத புத்தி ஜீவிகளையும் உள்ளடக்கி இப்பொருப்பை நிரைவேற்றப்படுமாயின் இரட்டை பலனை வெகுசீக்கிரம் அடைந்து கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். வரலாறு புதிதோ பழையதோ இலங்கை முஸ்லிம்கள் இந்த மண்ணின் சொந்தக்காரர்கள். இது தான் எமது தாய் நாடு. எம்மை வந்தவர்கள் என்றோ பெரும்பாண்மையினரின் அடிமைகள் என்றோ எண்ணிவிடாதீர்கள். மான்பிமிகு ஜனாதிபதி அவர்கள் 'இந்த நாட்டில் பெரும்பாண்மை சிறுபாண்மை என்று யாரும் இனி இல்லை. இலங்கை மக்கள் அனைவரும் இலங்கை தாயின் மக்களே' என்ற அழிகிய கொள்கையினை மும்மொழியிலும் சொன்னது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லை போலும்.
இலங்கையில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் 21 பேரில் 17 பேர் இலங்கை முஸ்லிம்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை கூறி முழு முஸ்லிம் சமூகத்தையும் துரோகிகளாக காட்ட முனைந்துள்ளார். ஆனால் அண்மைய தகவல்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தினையே கூறிக் கொண்டிருக்கின்றன. போதைப் பொருள் ஹெரோயின் வியாபாரத்தின் பிண்ணனியில் இருப்பவர்கள் பூரண பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் நடமாடிக் கொண்டிருப்பது தான் வேதனையான விடயம்.
அமைச்சர் அவர்களே! ஹேரோயின் மாத்திரம் அல்ல போதைப் பொருள். சந்திக்கு சந்தி திறக்கப்பட்டிருக்கும் மதுபாணக் கடைகளின் உரிமையாளர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்று சற்று தேடிப்பார்த்தால் உங்களது முஸ்லிம் வெறி தானாகவே தணிந்துவிடும். போதைப் பொருளிற்கும், மதுபாணத்திற்கும் கணிசனமாளவு முஸ்லிம்களும் அடிமையாகி இருப்பதை எண்ணி நாமும் உருக்குழைந்தே போயுள்ளோம்.
இஸ்லாம் பாவமான காரியத்தை செய்வதனை மாத்திரம் தடுக்கவில்லை. பாவத்திற்கு துணையாக நிற்பதையும் பாவமான காரியமாகவே நோக்குகின்றது. இதனையே 'யார் பாவமான ஒரு வார்த்தையின் பகுதியளவிற்கு உதவினாலும் கூட, அவரும் அந்த பாவத்தின் பங்குதாரராகின்றார்' என ஒரு நபி மொழி குறிப்பிடுகின்றது. எனவே உண்மையான ஒரு முஸ்லிம் ஒரு போதும் இவ்வாரான பாதகச் செயலில் ஈடுபடமாட்டான். இவ்வாரானவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என எண்ணவுமாட்டான். நீங்கள் அமைச்சர் என்ற ரீதியில் இவ்வாரானவர்களுக் கெதிராக (மதுபாண விற்பனையாளர்களும் உள்ளடங்களாக) பாகுபாடற்ற கடுமையான சட்டங்களை பரிந்துரைக்களாமே! இவ்வாரான குற்றங்களுக்கு இஸ்லாம் இயம்புகின்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தினால் வெற்றி நிச்சியம்.
ஆரம்ப காலம் தொட்டே முஸ்லிம்களின் நாட்டுப்பற்று சந்தேகத்திற்கிடமானதாக இருந்ததாக குறிப்பிடுகின்றார் அமைச்சர். அத்தோடு சிங்களவர்களுக் கெதிரான பல யுத்தங்களுக்கு முஸ்லிம்களே காரணமாக இருந்தனர் என்று மீண்டுமொரு வரலாற்றுத் தவரை செய்ய முற்படுகின்றார். பொருப்பான ஒரு அமைச்சர் என்ற முறையில் இவரது இவ்வார்த்தைகள் கண்டிக்கப்பட வேண்டிவையாகும்.
இலங்கை முஸ்லிம்கள் சிங்கள அரசர்களுக்கு எவ்வளவு ஒத்துழைப்பாகவும் இதயசுத்தியுடனும் செயல்பட்டார்கள் என்பதை இலங்கை முஸ்லிம்களை அடையாளப்படுத்த பிரயோகிக்கப்படும் 'மரக்கல' என்ற பதமே போதுமானதாகும். ஆங்கிளேயரிடமிருந்து சிங்கள மன்னரை காட்டிக்கொடுக்காது பொய் சொன்ன முஸ்லிம் பெண்மனியின் பச்சிளம் குழந்தையை அவள் முன்னாலே உரலில் போட்டு இடித்து பலியை தீhத்துக் கொண்ட சம்பவம் இன்றும் அழியாத ஒரு சரித்திரமாக இருப்பதை அமைச்சர் அறியவில்லை போலும். சற்று நேரம் கழித்து வந்த சிங்கள அரசன் தனக்காக ஒரு பச்சிளம் குழந்தை பலியாகி இருப்பதை கண்டு அக்குழந்தையின் இரத்தத்தை தொட்டு 'மா ரக்க லே' என்னைக் காப்பற்றிய இரத்தமே என்று கதரியழுது இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு அடையாளத்தையே கொடுத்த இது போன்ற சம்பவங்கள் உங்கள் புத்தகத்தை அழங்கரிக்காதது உங்களது நோக்கம் என்ன என்பதை தெளிவாகக் காட்டுகின்றது.
ஏன் இருநூரு முண்னுரு வருடங்களுக்கு முன்னால் செல்கின்றீர்கள். அண்மைய எங்களது நாடு சந்தித்த முப்பது வருட கால யுத்தத்தை உங்கள் மணக்கண் முன் கொண்டு வாருங்களேன். யுத்தத்தினால் உயிர் உடமையை இழந்து பிறந்த மண்ணில் வாழத் தகுதியற்றவர்களாக்கப்பட்ட சமூகம் சிங்கள சமூகமோ அல்லது தமிழ் சமூகமோ அல்ல. யாழ்ப்பணத்தில் இருந்து முஸ்லிம்கள் முற்றாக வெளியேற்றப்பட்டதையே பெருவெற்றியாக கொண்டாடினார்கள் தமிழ் புலிகள். அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பாக முஸ்லிம்கள் செயல்படுகின்றார்கள் என்ற ஒரே காரணத்தைக் கூறியே பாசிசப் புலிகள் இந்த அராஜகத்தை செய்து முடித்தார்கள். அப்போது வடக்கு முஸ்லிம்களின் தாய் மண்ணின் மீது கொண்டிருந்த பாசத்தை ஏன் உங்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனது! இத்தனையையும் இழந்த யாழ் முஸ்லிம்கள் பிறந்த தாய் நாட்டிற்காக செய்த தியாகமாகவே அதனை இன்றும் கருதுகின்றார்களே!
இதே கைங்கரியத்தை கிழக்கிலும் நிகழ்த்த பல தடவைகள் புலிகள் எத்தணித்த போதும் முஸ்லிம்கள் தைரியமாக கிழக்கை விட்டு நாம் போகமாட்டோம் என்றிருந்தார்களே! இதற்காக இழக்கப்பட்ட உயிர்கள், உடமைகள், அழிக்கப்பட்ட சொத்துக்கள் தான் எத்தனை? இத்தனை தியாகங்களையும் செய்த மக்களை அரசாங்கமும், இரானுவத் தளபதிகளும் நன்றியுடன் நினைவு படுத்தினார்களே அது உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா? வடக்கில் செய்ததைப் போன்ற ஒரு இனச் சுத்திகிப்பை கிழக்கிலும் புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ள முடிந்திருந்தால் தனித் தழிழீலக் கணவு கனகச்சிதமாக எப்போதோ நிறைவேறியிருக்கும் என்பது மாத்திரம் உறுதி. கிழக்கை புலிகலால் முற்றாக வெற்றி கொள்ள முடியாமைக்கான முக்கியமான காரணமே கிழக்கிலங்கை முஸ்லிம்கள் புலிகளின் மிரட்டல்களுக்கு அடிபணியாததும், அரசபடைகளுக்கு அளித்த ஒத்துழைப்பும் ஆதரவும் தான் என்பதை இலகுவில் உங்களால் எப்படி மறந்து விட்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் துரோகிகளாக காட்ட முடிகின்றது!? இதற்காக கிழக்கிலங்கை முஸ்லிமகள் செய்த தியாகங்கள், அனுபவித்த கொடுமைகள், இழந்;த உயிர்கள் தான் எத்தனை. உங்கள் பார்வை தவறானது என்பதை காலம் உங்களுக்கு நிச்சியம் சொல்லும்...
இதன் மறுபக்கமாக இலங்கையின் பல பகுதிகளில் புலிகளால் மேற்கொள்ளப்;பட்ட தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன். கட்டுநாயக்கா விமான நிலையம், கொலன்னாவை எரிபொருள் சேமிப்பு நிலையம், மத்திய வங்கி தாக்குதல், தளதா மாளிகை தாக்குதல் போன்ற பல தாக்குதல் சம்பவங்களுக்கு ஒத்தழைப்பாக இருந்தவர்கள் யார் என்பதை முழு இலங்கையுமே அறிந்துள்ளதே. உயிரிற்கு அஞ்சி பணத்திற்கு ஆசைப்பட்டு புலிகளுக்கு கலம் அமைத்துக் கொடுத்தவர்கள் சிங்கள கொட்டி (சிங்களப் புலிகள்) என்ற ஒரு குழுவினரை சிங்கள ஊடகங்கள் செய்திகள் மூலம் அறியப்படுத்தியதை மறந்து விட்டீர்களா? இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். குப்பையை கிளருவதால் நாற்றம் தான் அடிக்கும். அது எமது தாய் நாட்டிற்கு அசிங்கத்தையும் அகௌரவத்தையும் கொண்டு வருவது மட்டும் தான் மிச்சம்.
அதிலே உங்களுக்கு விருப்பம் என்றால் எமது போனாக்களிலும் மை இருக்கவே செய்கிறது. ஆனால் நாம் உங்கள் தரத்திற்கு கீழிறங்கி வருவதனை கேவலாமாக நினைக்கின்றோம். இந்த நாடு பல நல்ல பௌத்தர்களையும் நல்ல பௌத்த தர்மத்தையும் தாங்கி நிற்கின்றது. உங்கள் போன்றோருக்காக நல்ல பல பௌத்த நன்பர்களின் மனதை புண்படுத்த விரும்பவில்லை. முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம்.... ஆனால் அது எமது பண்பல்ல...
தனது தாய் நாட்டிற்கு எவர் துரோகம் செய்தாலும் மண்ணிக்க முடியாது என்பதில் நாமும் உடன்படுகின்றோம். ஆனால் ஒரு தலைப்பட்சமாக ஒரு சமூகத்தின் மீது உங்கள் காழ்ப்புணார்வை கக்குவது தான் அனுமதிக்க முடியாததாகும். நீங்கள் கூறக் கூடிய காலப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களின் நிலைமை எவ்வாறிருந்தது என்பது அன்றைய கால சூழ்நிலையை வைத்தே எடைபோட வேண்டியுள்ளது. ஓரிரு சம்பவங்களை வைத்து வரலாற்றை கொச்சைப்படுத்துவது பொருப்பான ஒரு மக்கள் பிரதிநிதிக்கு உகந்ததல்ல.
குறித்த அமைச்சாரால் தூவப்படும் நச்சு விதைகள் எதிர்காலத்தில் ஆபத்தான செடிகளை கொடிகளை ஏன் மரங்களையே வளர்க்கச் செய்யலாம். இந்த விதைகள் புத்தகவடிவினைப் பெற்றிருப்பது இதன் ஆபத்தினை உறுதிசெய்வதாக இருக்கின்றது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். நாம் எங்களது கடந்த கால, நிகழ் கால தாய் நாட்டுப் பற்றினை உறுதிபட கூறிவைக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
அமைச்சர் தனது நூலில் பல இடங்களில் இலங்கை முஸ்லிம்களின்; அரசியல் வரலாற்றின் உத்தமர்களாக போற்றப்பட்ட பலரினை அடிப்படை வாதிகளாக சித்தரித்திருக்கின்றார்;. ஒருவர் தான் சார்ந்த மதத்தை பின்பற்றி, அது சார்ந்த சிந்தனையுடனும், பற்றுதலுடனும் இருப்பதைத் தான் இவர் அடிப்படை வாதம் என்று விளங்கிக் கொண்டுள்ளார் போலும். அப்படியாயின் உலகிலுள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நியதியில் அடிப்படை வாதிகளே. உங்கள் போன்றோருக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பது இப்போது தான் தெரிகிறது.
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட பல அரபு மத்ரஸாக்களை அடிப்படை வாதம் போதிக்கும் நிலையங்களாக அடையாளப்படுத்தியுள்ளார். அடிப்படையில் இவரது அடிப்படைவாதமே அர்த்தமற்றதாகும். இஸ்லாமிய சஞ்சிகை, அரபு மத்ரஸாக்கள், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் அரசியல் கட்சிகள், இலங்கை முஸ்லிம்களை அனுசரித்து நடந்த இலங்கைத் தலைவர்கள், உலக இஸ்லாமிய அமைப்புக்கள் அனைத்தையுமே தனது இஸ்லாமிய அடிப்படைவாத வலைக்குள் போட்டு பழிதீர்க்க முனைந்திருப்பது அரவது அப்பாவித்தனத்தையும் அறியாமையையும் துள்ளியமாக எடுத்துக்காட்டுகின்றது.
அப்படியாயின் இலங்கையில் பௌத்தத்தை போதிக்கும் பௌத்த ஆரம்ப பாடசாலைகள் (பௌத்த தஹம் பாடசாலைகள்), பௌத்த அமைப்புக்கள். பௌத்த விகாரைகள் போன்றவற்றை எப்படி அடையாளப்படுத்தப் போகின்றீர்கள். உங்கள் பார்வையில் இது பௌத்த மத நல்லினக்க முன்னேற்பாடுகள், மற்றவை இஸ்லாமிய அடிப்படைவாதம்!!!
முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹும் ஏ.எச்.எம். அவர்களையும் அவரது நற்பணியினையும் மிகத் தாராளமாக விமர்சித்து தள்ளியிருக்கிறார் அமைச்சர் தனது நூலில். இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு வரளாற்றில் பொண்ணெழுத்துக்களால் பொறிக்கப்பபட வேண்டியவையாகும். இதனை நான் பக்கச்சார்பாகவோ இனரீதியாகவோ கூறவில்லை. மர்ஹும் அஷ்ரப் அவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்கிய அரசியல் அடையாளமும், கௌரவமும் அவரது தாய்நாட்டுப் பற்றை பறைசாட்டுவதாகவே இருக்கின்றது.
இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக கிழக்கிலங்கை முஸ்லிம்கள் தமிழீல விடுதலைப் புலிகளால் பலவிதமான நெருக்குதல்களுக்கு ஆலாகி விரக்தியின் விழிம்பு வரை சென்றிருந்தார்கள். மறுபக்கம் இரானுவத்தின் கடுமையான கெடுபிடிகளுக்குள் சிக்கி தவித்தார்கள். அவர்களது வாழ்வாதாரமாக இருந்த கல்வியும் விவசாயமும் கண்முன்னே அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இரவில் கண்விழித்தும் பகலில் உறங்கியும் நிம்மதி கெட்டுப் போயிருந்தார்கள். கடைக்கு, பாடசாலைக்கு, தொழிலிற்கு, வயலிற்கு என்று வீட்டை விட்டு வெளியில் சென்றவர்கள் கடத்தப்பட்டார்கள் அல்லது கொலை செய்யப்பட்டார்கள். வருவாயிற்கு மேலதிகமாக இலஞ்சம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். மொத்தத்தில் வாழ்வதைவிட போராடி மாயலாம் என்றே பெரும்பாலானோர் எண்ணிக் கொண்டிருந்தனர்.
தனது மக்களின் உண்மையான மணக்குமுறலலைக் கண்ட மர்ஹும் அஷ்ரப் அவர்கள் மிகத் தூர நோக்கோடு சிந்தித்தார். இவர்களை இவ்வாரே விட்டுவிடுவோமாயின் எதிர்காலத்தில் மிகப் பாரதூரமான ஒரு விளைவை முழு முஸ்லிம் சமூகமும் சந்திக்க வேண்டிவரும் என கவலை கொண்டார். கிழக்கிலங்கை முஸ்லிம்கள் ஆயுத கலாச்சாரத்திற்கு உள்வாங்கப்பட்டு விடுவார்களோ என்று பயந்தார். இதன் முடிவை எண்ணி மிகத் தீவிரமாக சிந்தித்தார். இதற்கான தனது பங்களிப்பை கேள்விக் குறியாக்கினார். தனது கேள்விக்கான பதில் இவ்வாறு அமைய வேண்டுமென்று உறுதியாக இருந்தார்:-
* முஸ்லிம்களை ஆயுத கலாச்சாரத்திற்கு அடிமையாவதிலிருந்து தடுத்தல்.
* மற்ற இணங்களுடனான கசப்புணர்வுடன் முஸ்லிம்கள் நடந்து கொள்வதை தடுத்தல்.
* அரசியலிலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கையற்றிருந்த முஸ்லிம்களுக்கு அவற்றில் நம்பிக்கையை ஏற்படுத்தல்.
* மத்திய அரசு சமகாலத்திலும் நிரந்தரமாகவும் மற்றுமொரு முஸ்லிம் ஆயுதக் குழுவுடன் யுத்தம் ஏற்படுத்திக் கொள்வதனை தடுத்தல்.
* முஸ்லிம்களை அரசியல் மயப்படுத்தி ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயக்தை மதிக்கும் மக்களாக இலங்கை முஸ்லிம்களை மாற்றியமைத்தல்.
* ஆயுத பலத்தால் அடைய நினைக்கும் உரிமைகளையும், சலுகைகளையும் ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொடுத்தல்.
* இவையனைத்தையும் உள்ளடக்கியதாக இலங்கையின் இறைமைக்கும் ஒற்றுமைக்கும் குந்நதகம் ஏற்படுத்திய வரலாற்றுக் கொடுமையை முஸ்லிம்கள் புரிவதிலிருந்து இலங்கை முஸ்லிம்களை காப்பாற்றுதல்.
உண்மையில் இத்தனை விடயங்களையும் தனது குறுகிய கால அரசியல் வரலாற்றில் செய்து முடித்த மகான் மர்ஹும் அஷ்ரப் என்றால் எல்லோரும் என்னுடன் உடன்படுவார்கள் என நினைக்கின்றேன். இலங்கை தாய் பெற்ற உத்தம மகன் என்றே கூறவேண்டும். தாய் மண்ணைக் காத்த பெருமை மர்ஹும் அஷ்ரப் அவர்களையே சாறும்.
எனவே அமைச்சர் அவர்களே! உங்கள் குறுகிய அரசியல் பார்வைக்கு இவை புதிதாக இருக்கும் என நினைக்கின்றேன். அஷ்ரப்!! முஸ்லிம் காங்கிரஸ்!! ஒலுவில் துரைமுகம்!! தென்கிழக்கு பல்கலைக்கழகம்!! என்பன மட்டுமே மர்ஹும் அஷ்ரப் அவர்களின் அரசியலில் உங்களது கழுகுப் பார்வையில் மறைந்திருக்கின்றன. இலங்கையை முப்பது வருட கால கொடிய யுத்தத்திற்கு எடுத்துச் சென்ற பிரபாகரனும், நாட்டின் இறைமையை பாதுகாத்து, ஆயுத காலாச்சாரத்தின் பக்கம் சாயவிருந்த மக்களை ஜனநாயக பாதைக்குள் கொண்டு வந்த மர்ஹும் அஷ்ரபும் அடிப்படைவாதிகள் எனில் உங்கள் பகுத்தறிவிற்கு பதில் நீங்களே!!
அமைச்சரின் ஆக்கங்களையும் பேச்சுக்களையும் இலங்கை முஸ்லிம்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமை கவலையளிக்கின்றது. இவரது திட்டத்தின் பிரகாரம் திட்டமிட்ட ரீதியில் முஸ்லிம்கள் பற்றி தப்பான தகவல்கள் படித்த பௌத்த மக்களிடத்து சென்றடைந்து விட்டது. முஸ்லிம்கள் வியாபாரம் குறிவைத்து கட்டம் கட்டமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் மதசின்னங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டும் அவற்றிற்கெதிரான கெடுபிடிகள் அதிகரித்துக் கொண்டுமிருக்கின்றது. எல்லாத் துரையிலும் முஸ்லிம்களை தணிமைப்படுத்துவதற்காக சதிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன.
எதிர்காலத்தில் முஸ்லிம் பாடசாலைகள் மதஸ்தாபனங்கள், வியாபார நிலையங்கள், தஃவா அமைப்புக்கள் பாரிய சதிவளைக்குள் உள்வாங்கப் படுவதற்கான சமிக்ஞைகள் தெளிவாக தெரிகின்றன. முஸ்லிம்களின் பொருளாதாரம் திட்டமிட்டு நசுக்கப்பட்டவிட்டது. முஸ்லிம் பாடசாலைகள் திட்டமிட்டு புரக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் பெண்களின் ஆடையமைப்பும், ஒழுக்கமும் விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களை வருமையின் விழிம்பிற்கு தள்ளி, இஸ்லாமிய குடும்ப அமைப்பை சீர்குழைப்பதற்கான முயற்சிகள் முண்னெடுக்கப்பட்டுவிட்டன. முஸ்லிம்களை இனவாதிகளாகவும், தேச துரோகிகளாகவும் பெரும்பான்மை இன மக்கள் முன் அடையாளப்படுத்தும் முயற்சியில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.
இவற்றை வெற்றி கொள்வதற்கான எந்த ஒரு திட்டமும் முஸ்லிம்களிடம் இல்லை என்பது மாத்திரம் தெளிவாகிவிட்டது. எம்மீது அபாண்டமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தும் ஒரு போக்கே எமது அரசியல் மற்றும் மதத்லைமைகளின் மௌனம் உணர்த்துகின்றது. முஸ்லிம்கள் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கின்றனர் என்ற இனவாதிகளின் கூற்று எவ்வளவு அபாண்டமானது என்பதை அண்மையில் சிறந்த 100 வியாபார ஸ்தாபணங்களை கௌரவித்த நிகழ்வில் தெளிவானது. இருக்கின்ற சில்லரை கடைகளைக் கூட பறித்தெடுக்க வேண்டுமென்ற பொறாமைத் தீயினை கக்கித்திரிகின்ற இச்சந்தர்ப்பத்தில் எமக்கே உரித்தான அரசியல் பழிவாங்கள்களுக்கும், கொள்கை முரண்பாடுகளுக்கும் தீணி போடக்கூடியவர்களாகவே எம்மவர்கள் இருக்கின்றனர்.
அல்லாஹ் இவற்றில் இருந்த படிப்பினை பெருவதற்கான எத்தனையோ சந்தர்ப்பங்களை இலங்கை முஸ்லிம்களுக்கு தந்துகொண்டே இருக்கின்றான். ஆனால் அவற்றில் இருந்து எந்த படிப்பினையையோ அல்லது முன்னேற்பாடான நடவடிக்கைகளையோ எடுக்கத் தவறிவிட்டோம். கடந்த சில வருடங்களாக நாம் சந்தித்த பல தேர்தல்களை குறிப்பிடலாம். நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களும் முஸ்லிம் சமூகத்திற்கு இழிவையும் தலைகுணிவையுமே கொண்டு வந்து தந்திருக்கின்றன.
ஓவ்வொரு தேர்தல் வரும் போதும் முஸ்லிம் சமூகத்தின் கனவு, அதிக முஸ்லிம் பிரதிநிதிகளை எவ்வாறு பாராளுமன்றத்திற்கு, மாநகர சபைகளுக்கு அனுப்பலாம் என்பது மாத்திரம் தான். யாரை அனுப்பவேண்டும், முஸ்லிம் சமூகத்தின் குரலாக யார் இருக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுப்பதில் எமது அலசல் குறைபாடானதாகவே உள்ளது. அதனால் தான் அதிக முஸ்லிம் பிரதிநிதிகளை எல்லா சபைகளிலும் பெற்றும் அர்த்தமில்லாமல் முஸ்லிம் சமூகம் குற்றவாளிக் கூண்டில் நின்றுகொண்டிருக்கிறது.
எனவே மேற்கூறப்பட்ட அழுத்தங்களிலிருந்து எவ்வாறு இலங்கை முஸ்லிம் சமூகத்தை விடுவிக்கலாம் என்பது பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். ஒரு மாணவனாக, பெற்றோராக, ஆசிரியனாக, அதிபராக, பள்ளி நிர்வாகியாக, ஊர் தலைவராக, பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை, பாரளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, கட்சி, மன்றம், சங்கம் போன்றவற்றின தலைவனாக, இஸ்லாமிய இயக்க ஊழியனாக, நிர்வாகியாக ஒரு முஸ்லிமாக நின்று தனது தனிப்பட்டதும் கூட்டானதுமான பங்களிப்புகளை எதிர்கால இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக எவ்வாறு செலுத்தலாம் என்பது பற்றி சிந்தித்து செயலாற்ற கடமைப்பற்றிருக்கின்றோம்.
எங்களது முன்னோர்கள் செய்த தியாகத்தினதும், தூரநோக்கான செயல்களினதும் வாடையில் தான் நாம் இத்தனை நிம்மதிகளையேனும் அனுபவிக்கின்றோம். எமது செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் எமது சமூகத்தை தலைகுணியச் செய்ய போதுமானவையே. எனவே எமது எதிர்கால சந்ததியினர் வசைபாடக்கூடிய கரைபடிந்த ஒரு வரலாற்றை அவர்களுக்காக விட்டுச் செல்லாமலாவது இருக்கப்பார்ப்போமாக. கேவலம்கெட்ட அரசியலுக்காக, சுயஇலாபங்களுக்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் அடைமானம் வைக்கின்ற இழிநிலையிலிருந்து, முஸ்லிம் சமூகத்தை தங்களது சுய கௌரவத்துடனும் மரியாதையுடனும் வாழ வழிசெய்து வைப்போமாக.
அல்லாஹ் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சதிவேளைகளை இல்லாமளாக்கி பாதுகாத்தருள்வானாக...
Very informative article and I congratulate the writer.
ReplyDeleteWe also admit that patriotism is lacking among most of the Sri Lankan Muslims. Cheering for Pakistan against Sri Lanka is one example.
When Muslims from north were chased out by LTTE, the non muslims from other parts of Sri Lanka did not refuse them as refugees, although they did not welcome them wholeheartedly. Had people from south refused to admit them where would they have gone? We would be off our minds, had we assumed that Pakistan would have taken them?