Header Ads



முஸ்லிம்களும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் - ஐ.நா. அதிகாரிகளிடம் ஹக்கீம் வலியுறுத்து



இனப்பிரச்சினை தீர்வுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மேலும் தாமதமின்றி முன்வர வேண்டுமென்றும் பல கட்சிகளை சார்ந்தவர்கள் அங்கம் வகிக்கும் அரசாங்கத்தில் வித்தியாசமான சிந்தனை போக்குள்ளவர்களும் இருப்பதால் காலதாமதம் நிலைமையை சிக்கலாக்குவதன் காரணமாக இனங்களுக்கிடையிலான விரிசல் அதிகரித்து துருவப்படுத்தல் தீவிரமடையக் கூடுமென்றும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரத் திணைக்களத்தின் ஆசிய, பசுபிக் பிரிவின் பிரதானி ஹிடோகி டென், அதன் அரசியல் விவகார அதிகாரி ஜூங் ஹூவான் லீ ஆகியோர் நீதியமைச்சர் ஹக்கீமை அவரது அமைச்சில் வியாழக்கிழமை (29) முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறினார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இங்கு வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரத் திணைக்கள உப செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மென் உடைய விஜயத்திற்கு முன்னோடியாகவே இவர்களது வருகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். நீதியமைச்சின் செயலாளர் திருமதி. கமலினி டி சில்வாவும், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரும் இதில் பங்குபற்றினார். 

பிரஸ்தாப ஐ.நா. குழுவின் உயர் அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஹக்கீம் போதிய விளக்கங்களை அளித்தார். அதன் போது அவர் தெரிவித்தவையாவன, 

பாராளுமன்ற செயற்குழுக்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. சிக்கலான பிரச்சினைகளுக்கு உகந்த முறையில் தீர்வு காண்பதற்கு அவை பெரிதும் உதவுகின்றன. எனக்கும் அவ்வாறான செயற்குழுக்களில் ஈடுபட்ட பதினைந்து வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் உண்டு. 

இவ்வாறான பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றின் ஊடாக நீண்ட காலமாக நிலவி வரும் நாட்டின் இனப் பிரச்சினைக்கும் உரிய தீர்வை காண்பதுவே சிறந்த வழியாகும். அதன் பொருட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை அவர்கள் மேலும் காலதாமதம் இன்றி ஏற்றுக்கொள்வதே உசிதமானது. அதற்கு இணங்காமல் விடுவது நிலைமையை மேலும் சிக்கலாக்கக் கூடும். அரசாங்கத்தில் வௌ;வேறு கட்சிகளைச் சேர்ந்த வித்தியாசமான சிந்தனைப் போக்குள்ளவர்களும் இடம்பெற்றிருப்பதால் காலதாமதம் இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலை தீவிரமடையச் செய்யக் கூடும் என்பது எனது அபிப்பிராயம் ஆகும். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சில நிபந்தனைகளை விதிக்க முன்வந்தனர். ஏற்கனவே அவர்கள் அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் விட்ட இடத்திலிருந்து பேச்சுவார்த்தையை தொடரவே விரும்பினர். முஸ்லிம் தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு உள்வாங்க அவர்கள் இணங்கவில்லை. அரசாங்கத்தோடு அவர்கள் பேச்சுவார்த்தை நடாத்துவதாகவும், முஸ்லிம்கள் அவர்களுடன் பேசிக்கொள்ளலாமென்றும் கூறப்பட்டது.  

இனப்பிரச்சினையை தீர்வை நோக்கிய எத்தகைய பேச்சுவார்த்தைகளிலும் மூன்றாம் தரப்பாக முஸ்லிம்களின் பரிமாணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென்பதை இந் நாட்டு முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப்பெற்றுள்ள எனது தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. பொதுவாக நாடு முழுவதிலும் பரந்தும் குறிப்பாக நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் செறிந்தும் வாழும் முஸ்லிம்களின் பரிமாணத்தை புறந்தள்ளிவிட்டு இந் நாட்டின் இனப்பிரச்சினைக்கான நிலைத்து நிற்கக் கூடியதும், நிரந்தரமானதுமான தீர்வை காண இயலாது. அத்துடன் இனப் பிரச்சினையுடன் தொடர்பான முன் அனுபவமுடைய தென் ஆபிரிக்கா போன்ற நாடொன்றின்  மத்தியஸ்தமும் பெரிதும் வரவேற்கத்தக்கதாக கருதப்படுகின்றது. 

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விதந்துரைகளை செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தையும்,  வழிமுறையையும், கால அட்டவணையையும் ஜனாதிபதி விஷேட செயலணி இனங்கண்டுள்ளது. அதனடிப்படையில் முக்கிய விதந்துரைகள் காலக்கிரமத்தில் படிப்படியாக செயல்படுத்தப்படவுள்ளன. 

இருவகையினரான தமிழ் சிறைக் கைதிகள் உள்ளனர். வௌ;வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களின் மூலம் தண்டனை விதிக்கப்பட்டவர்களும், போதிய சாட்சியங்களும், சான்றுகளும் அற்ற நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்களும் உள்ளனர். நேற்று நடைபெற்ற எனது நீதியமைச்சிற்கான வரவு செலவு திட்ட விவாதத்திலும் இதைப்பற்றி நான் குறிப்பிட்டுப் பேசினேன். அவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சிறைகளில் இருந்து விடுவித்து, புனர்வாழ்வு அளிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பது பற்றியும் பாராளுமன்றத்தில் நான் சுட்டிக்காட்டினேன். 

அத்துடன், தமிழ் கைதிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நான்கு விஷேட மேல் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளமை குறித்தும் நான் குறிப்பிட்டேன். அவற்றில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் விசாரணைகளை மேற்கொள்வர். தற்பொழுது கடமையாற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தை நூறு பேர் வரை அதிகரிப்பது பற்றி நீதிச் சேவைகள் ஆணைக்குழு கவனம் செலுத்துகின்றது.

வழக்குத் தாமதம் காரணமாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளை துரிதமாக விசாரித்து அவற்றுக்கான தீர்ப்புகளை வழங்குவதற்குரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீதித்துறையை பொறுத்தவரை புதிய சட்டங்கள் இயற்றப்படுவதோடு சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

நீதிமன்றங்களுக்கு வெளியில் பிணக்குகளுக்கு தீர்வுகளை விரைவாக காண்பதற்கு எனது அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் இணக்க சபைகள் பெரும் பங்களிப்பை செய்து வருகின்றன. அவற்றில் நாடளாவிய ரீதியில் ஏழாயிரம் பேர் வரை கடமையாற்றுகின்றனர். அவ்வாறான ஏறத்தாழ முன்னூற்றைம்பது இணக்க சபைகள் உள்ளன. சமூகத்தில் ஊர் மட்டத்தில் நன்கு மதிக்கப்படுவோர் அவற்றில் சுயேட்சையாக கடமையாற்றி பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காண்பதற்கு உதவி வருகின்றனர். நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் நீதிமன்றங்களுக்கு வெளியில் இணக்க சபைகள் ஊடாக உரிய தீர்வுகளை காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன் என்றார். 




டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடச் செயலாளர் 

 

No comments

Powered by Blogger.